Tuesday, 26 July 2016

கபாலிடா..!

கபாலி திரைப்படம் உண்மையில் நாயகனின் ரஜினி வெர்ஷனாக வந்திருக்கவேண்டும். ரஞ்சித்தும் அப்படித்தான் ஆரம்பித்தார் போலிருக்கிறது. வேறு ஊரில் பெரியாளாகும் தமிழன்! நாயகனும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார். கபாலியும் அப்படியே. நாயகன் தமிழர்களுக்கு நல்லது செய்கிறார். கபாலியும் அப்படியே. நாயகனில் மனைவி கொல்லப்பட்டுவிடுகிறார். இங்கு கொல்லப்பட்டுவிட்டதாக நம்புகிறார். நாயகனில் மகள் சட்டத்தின் பக்கம் நிற்கிறார். இங்கு அவர் அப்பாவைப் போல் கேங்ஸ்டராகவே இருக்கிறார். க்ளைமாக்ஸில் நாயகன் கொல்லப்படுகிறார். இங்கும் கொல்லப்படுவதுபோல் காட்டப்படுகிறது.

நாயகனில் ஒரு கேங்ஸ்டர் தலைவன் நம்மைப்போலவே குடும்பம், குட்டிகள், பாசம், பலவீனம் எல்லாம் உள்ள மனிதராக அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்தார். ரஞ்சித்தின் நோக்கமும் அதுவே. அதனால்தான் கபாலியிலும் குடும்பம் சார்ந்த காட்சிகளை அவர் இடம்பெறச் செய்திருக்கிறார். ஆனால், நாயகனில் தமிழ், தலித், கம்யூனிஸம் எனக் கருத்தியல் சார்ந்த சமூக அக்கறை என்ற ஜல்லிகள் கிடையாது. நாயகனுடைய சமூக அறம் என்பது அரசு எந்திரம் தரத் தவறும் நீதித் தீர்ப்புகளை தனி நபராக அரசைச் சாராத நபராக நின்று வழங்குவதுமட்டுமே. கபாலியும் அப்படியானவராகத்தான் இருக்கிறார். ஆனால், நாயகனின் அந்த அரசியலை மணிரத்னம் அருமையாகச் சித்திரித்திருந்தார். ரஞ்சித் அந்த விஷயத்தில் மிகப் பெரிய தவறுகளைச் செய்திருக்கிறார். கபாலியின் சமூக அக்கறைகள் வெற்று வசனங்களாக, மிகை புகழ்ச்சிகளாகவே அசட்டுக் காட்சிகளாகவே தேங்கிவிட்டன. இந்தத் தவறை சரிசெய்திருந்தால் படம் சிறப்பானதாக நாயகனுக்கு இணையாக வந்திருக்கும். ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் படத்துக்கு நாயகனைவிடப் பலமடங்கு வெற்றியைத் தந்திருக்கும். இதை இப்படிச் சொல்லலாம்...நாயகனின் ரீமேக்கை ரஜினிகாந்தை வைத்து மணிரத்னம் செய்தால் நாயகனைவிட பெரு வெற்றியை எட்டும். இதுவரை வெளிவந்திருக்கும் கமலின் நடிப்புத் திறமையைவிட உள்ளே உறங்கிக் கிடக்கும் ரஜினியின் நடிப்புத் திறமை மேலானதுதான்.

இந்தக் கோணத்தில் என் கபாலியை எழுதிப் பார்க்கிறேன்.

கபாலியின் அரசியல் வாழ்க்கை மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. எல்லா நாட்டு இளைஞர்களையும் போலவே இளரத்தம் பாயும் கபாலி கம்யூனிஸத்தின்பால் ஈர்க்கப்படுகிறார். ஊதிய உயர்வு கேட்டு அமைதிவழியில் போராடுகிறார். கோரிக்கைகள் நிராகரிக்கப்படவே வன்முறையைக் கையில் எடுக்கிறார். முதலாளிகளுக்கு சாதகமான காவல்துறை கபாலியைப் பிடித்துச் சிறையில் அடைக்கிறது. பல்வேறு பொய் வழக்குகளை அவர் மேல் போட்டு 25 வருடங்கள் சிறையில் அடைக்கிறது. சிறை வாழ்க்கை கபாலியை மாற்றுகிறது. அங்கு அவர் படிக்கும் புத்தகங்கள், உலகில் அதன் பிறகு நடந்த மாற்றங்கள் எல்லாம் கம்யூனிஸத்தின் போதாமையை அவருக்குப் புரியவைக்கின்றன. வன்முறைப் பாதையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா காந்தியவாதியாக வெளியே வந்ததுபோல் கபாலியும் காந்தியவாதியாக வெளியே வருகிறார்.

25 வருடங்களில் மலேசிய தமிழ் / இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவர் இளைஞராக இருந்த காலகட்டத்தில் மலேசியா தமிழர்களின் கனவு பூமியாக இருந்தது. இன்றோ அது அவர்களுக்கு நரகமாக ஆகிவிட்டிருக்கிறது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் அரசியல் சக்தியாகத் திரள முடியவில்லை. அதனால் அரசு வேலைகள், தனியார் வேலைகள் என அனைத்திலும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறர்கள். கல்வி கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வேலை கிடைப்பதில்லை. எனவே  மலேசியத் தமிழர்களின் இளைய தலைமுறை போதை, கடத்தல் என சீரழிந்துகிடக்கிறது. கடந்த காலத்தைவிட மிகப் பெரிய பொறுப்பு இப்போது தன் மீது சுமத்தப்ட்டிருப்பதை கபாலி உணர்கிறார். 

முதல் வேலையாக அரசு அதிகாரிகளைச் சந்தித்து தமிழ் இளைஞர்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறார். போதை, கடத்தல் என நிழல் உலகத்துடன் அதிக பரிச்சயம் கொண்ட தமிழ் இளைஞர்களை அந்த நிழல் உலகை ஒழிக்க அரசுக்கு உதவும் படையாக மாற்றுகிறார். அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி இதற்குக் கைமாறாக படித்து முடித்திருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு அரசு வேலைகள், தனியார் வேலைகள் தரச் சொல்லிக் கேட்கிறார் நிழல் உலகைக் கட்டுக்குள் வைக்க மலேசிய காவல்துறையும் இந்த டீலுக்கு ஒப்புக்கொள்கிறது. அப்படியாக இளைய தமிழ் தலைமுறையை மெள்ள நேர்வழிக்குக் கொண்டுவருகிறார்.

தமிழகத்தில் இருந்து விபச்சாரத்துக்குக் கொண்டுவரப்படும் சின்னஞ்சிறுமிகளை அதிரடியாக மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கிறார். இளம் சிறுமிகளை அவர் மீட்கப் போன இடத்தில் 43 கேங்கின் பழைய வில்லன் ஒருவனைச் சந்திக்க நேர்கிறது. அவன், கபாலியிடம் உன் மகளும், மனைவியும் கூட இப்படித்தான் எங்காவது விபச்சார விடுதியில்தான் சிக்கியிருப்பர்கள் என்று கொக்கரிக்கிறான். கபாலிக்கு அப்போதுதான் தன் மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதே தெரியவருகிறது.

எங்கே இருக்கிறார்கள் சொல் என்று கெஞ்சுகிறார். கால் கொஞ்சம் வலிக்குது அமுக்கிவிடு என்று சொல்கிறான் வில்லன். கபாலி தன் குடும்பத்தைப் பற்றித்தெரிந்துகொள்ள எதுவேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்லி வில்லனின் காலைப் பிடிக்கிறார். கால் அமுக்கிவிடுவதை ஆனந்தமாக ரசித்தபடியே அந்த வில்லனோ இந்தச் சிறுமிகளை மீட்கும் வேலையைவிட்டுவிடு. உன் குடும்பம் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன் என்கிறான். பாச உணர்வால் கட்டுண்ட கபாலி சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு, சரி என்று சொல்லி அந்தச் சிறுமிகளை விட்டுவிட்டுப் புறப்படுகிறார். அந்தச் சிறுமிகள் அவருடைய காலைப் பிடித்துக்கொண்டு அழுகின்றன. கபாலி அவர்களை உதறித் தள்ளிவிட்டு போகிறார். மாடிப்படிகள் வழியாக தள்ளாடியபடியே இறங்குகிறார். பின்னால் இருந்து கூக்குரல் அதிகரிக்கிறது. ஐயா... எங்களை விட்டுட்டுப் போகாதீங்க ஐயா... என்று கதறுகிறார்கள். அதிலொரு சிறுமி அப்பா... என்னைக் காப்பாத்துங்க அப்பா என்று கதறுகிறது. அந்தக் கூக்குரலைக் கேட்டதும் கபாலிக்கு தூக்கி வாரிப்போடுகிறது. சீறிப் பாய்ந்து சென்று வில்லன்களை துவம்சம் செய்கிறார். 

உன் மகளைக் காப்பாத்த வேண்டாமா? என்று கோபப்படும் வில்லனை அடித்து வீழ்த்திவிட்டு... இந்தக் குழந்தைங்க எல்லாமே என் குழந்தைங்கதாண்டா... அநாதைக் குழந்தைங்க எல்லாருக்குமே இந்த கபாலிதாண்டா அப்பா என்று சொல்லி சிறுமிகளை மீட்கிறார். போதையில் சிக்கிச் சீரழியும் சீன இளைஞர்களை மீட்டு அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்.

மலேசியாவிலும் தமிழர்களிடையே சாதிப் பிரச்னை தலை தூக்குகிறது. அங்கும் நிலவுடமையாளர்களாகவே இருக்கும் கவுண்டர்கள் தமது கோவிலில் தலித்கள் தேர் இழுக்ககூடாது என்று தடுக்கிறார்கள். கபாலி காவல்துறை நீதித்துறை அதிகாரிகளை அழைத்துச்சென்று அந்தத் தலைவர்களைப் பார்த்துப் பேசுகிறார். முடியாது என்று மறுத்துவிடுகிறார்கள். கபாலியின் ஆட்கள் தேர் திருவிழா அன்று கலவரம் செய்யத் திட்டமிடுகிறார்கள். கபாலி அவர்களைத் தடுக்கிறார். அப்போ நாம காலம்பூராவும் அடங்கியேதான் கிடக்கணுமா என்று குமுறுகிறார்கள். அடங்கிக் கிடக்கவும் வேண்டாம்... திருப்பி அடிக்கவும் வேண்டாம்... நாம ஜெயிக்கணும்.. அவங்க தோக்கவும் கூடாது என்று சொல்கிறார். அதெப்படி முடியும் என்று கபாலியின் ஆட்கள் குழம்பிப்போகிறார்கள். காந்தி வழி என்று சொல்லிவிட்டு கபாலி புறப்படுகிறார்.

அடுத்த நாள் செய்தித் தாள்களில், கபாலி கண்ணகி கோவில் கட்டப்போவதாகச் செய்தி வருகிறது. கோவில் பணிகள் மளமளவென நடக்கின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் செங்கல் சேகரிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து பொறியாளர்கள் அழைக்கப்பட்டு கோவில் ஒரே மாதத்தில் கட்டப்பட்டுவிடுகிறது. அதுபோலவே ஒரு பிரமாண்டமான தேரும் செய்யப்படுகிறது. கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பறையர் குல பூசாரி தமிழ் மந்திரங்கள் ஓத பிராமண பூசாரிகள் கங்கை நீர் கலசம் எடுத்துக் கொடுக்க கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தேர் திருவிழாவில் கபாலிக்கு பரிவட்டம் கட்ட முன்வருகிறார்கள். அவரோ அதை மறுத்துவிட்டு ஓரமாக நின்றுகொண்டிருக்கும் அருந்ததிய இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அழைத்துவந்து பரிவட்டம் கட்டிவிட்டு விழாவை அவரை வைத்தே தொடங்க வைக்கிறார். பறை இசை அதிர கண்ணகி தேர் சாதித்தடைகளைக் கடந்தபடி தடதடவென ஓடுகிறது.

தமிழகத்துக்கு வந்து திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரைச் சந்தித்து மலாயா தமிழர்களின் நலனுக்கான திட்டங்களைச் சொல்லி கபாலி நிதி உதவி கேட்கிறார். அந்தப் பணத்தை வைத்து மலேசியாவில் இலவசப் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுகிறார். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சேவைகளை முன்னெடுக்கிறார்.  இதுபோன்ற செயல்களால் கபாலியின் பின்னால் இந்தியர்களும் சீனர்களும், மலாய்களும் அணி திரளுகிறார்கள். கடைமட்டத் தேர்தலில் அவருடைய கட்சி ஆட்கள் நின்று வெற்றி பெறுகிறார்கள். இப்படியான விஷயங்கள் நிழல் உலக தாதாக்களை மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் ஆத்திரம் கொள்ள வைக்கிறது. கபாலியைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். அதில் இருந்தெல்லாம் அதிரடியான சாகசங்களின் மூலம் தப்பிக்கிறார்.

ஒரு நாள் காலை சுட்டெரிக்கும் வெய்யிலில் கபாலியைச் சந்திக்க பத்து புத்த பிக்குகள் வருகிறார்கள். கபாலியின் பிரமாண்ட பங்களா வாசலில் செருப்பு இல்லாத பாதங்களுடன் தரையில் சூடு குறைவாக இருக்கும் பகுதியைத் தேடிச் சென்று நிற்கிறார்கள். செக்யூரிட்டி என்ன விஷயமாக வந்திருப்பதாகக் கேட்கிறார்.

கபாலி எளிய மக்களுக்குச் செய்யும் நன்மைகளைப் பாராட்டவும் புத்தரின் ஆசிகளை அவருக்குத் தரவும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கபாலி தம் அறையில் இருக்கும் வீடியோ கேமராவில் அவர்களைப் பார்க்கிறார். உடனே உள்ளே அனுப்பும்படி செக்யூரிட்டிக்குக் கட்டளையிடுகிறார். பிரமாண்ட இரும்புக் கதவுகள் பெரும் சப்தத்துடன் திறக்கின்றன. பத்து பிக்குகளும் ஒருசேர உள்ளே கம்பீரமாக நுழைகிறார்கள். போர்டிகோ வாசலில் காத்து நிற்கும் வேறு சில செக்யூரிட்டிகள் பிக்குகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை போட வருகிறார்கள். தன் அறையில் இருந்து அதைப் பார்த்துப் பதறும் கபாலி, ”கார்ட்ஸ்... அவர்களை சோதனை போடவேண்டாம்’ என்று சொல்கிறார்.

பாதுகாப்பு பணியாளர்களோ, ”முடியாது சார்... உங்களைக் கொல்ல பலர் சுத்திக்கொண்டிருக்கிறார்கள்... ரிஸ்க் எடுக்க முடியாது’ என்று ரகசியமாக பதில் சொல்கிறார்கள்...
கபாலி தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடியே, ”என்னைக் கொல்ல அந்த எமனாலயே முடியாது... இது அந்த கபாலீஷ்வரன் தந்த உயிர்... அவரால மட்டும்தான் இதை எடுக்கவும் முடியும். பயப்படாதீங்க’ என்று சொல்கிறார்.
புத்த பிக்குகளை அனுப்பிவிட்டு காவலர்கள் பதறியபடியே பின்தொடருகிறார்கள். பிரமாண்ட ஐந்து நட்சத்திர விடுதி போன்ற வீடு. லிப்டில் ஏறி 10-ம் மாடிக்கு வருகிறார்கள். அலங்காரமான வரவேற்பறையொன்றில் புத்த பிக்குகள் உட்காரவைக்கப்படுகிறர்கள். அந்த வரவேற்பறையின் மேஜையில் புத்தர் தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். பிக்குகள் அவர் முன்னால் மண்டியிட்டு வணங்குகிறார்கள். சிறிது நேரத்தில் உள்ளே வரச் சொல்லி செய்தி வருகிறது.
பிக்குகள், நாங்கள் மட்டும் தனியாகச் சென்று சந்திக்கவேண்டும் என்கிறார்கள். காவலர்கள் முடியாது என்று மறுக்கிறார்கள். உள்ளே இருந்து கபாலியின் கம்பீரக் குரல் ஒலிக்கிறது. ”பரவாயில்லை... அவர்களை மட்டும் உள்ளே அனுப்பு. ஒருத்தர் மேல நம்பிக்கை இருந்தா அவங்களை சந்தேகிக்கக்கூடாது. சந்தேகம் இருந்தா அவங்களை நம்பக்கூடாது. நான் புத்த பிக்குகளை நம்பறேன்’ என்கிறார்.
பிக்குகள் உள்ளே நுழைகிறார்கள். பிரமாண்ட அறையில் கபாலி சோபா ஒன்றில், காலுக்கு மேல் கால் போட்ட கடவுள் போல் அமர்ந்திருக்கிறார். அந்தக் கண்ணாடி அறையின் பின்னணியில் மலேசியாவின் பிரமாண்டக் காட்சி தென்படுகிறது.
பிக்குகள் நின்றபடியே கை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள். பின்னால் கதவு மூடப்படுகிறது. ஒரு பிக்கு சிரித்தபடியே சென்று அதன் மேல் தாழ்ப்பாளைப் போடுகிறான். அனைத்து பிக்குகள் முகத்திலும் அமைதிப் புன்னகை மறைந்து அலட்சியப் புன்னகை மலர்கிறது. தங்கள் காவி மேலங்கியை கழட்டி வீசுகிறார்கள். அவர்கள் அனைவருடைய கைகளிலும் துப்பாக்கிகள் மின்னுகின்றன. கபாலியின் முகம் கார்ட்டூன் பார்த்து ரசிக்கும் குழந்தையின் முகம்போல் அதைப் பார்த்து மலர்கிறது.
பிக்குகள் எகத்தாளமாகச் சிரிக்கிறார்கள்.
இப்படி சிங்கம் சிங்கிளா மாட்டிக்கிச்சே...வேட்டைக்காரங்க கூட்டமா வந்துட்டோமே கண்ணா... 
கிழட்டு சிங்கத்துக்கு இத்தனை துப்பாக்கிங்க தேவையில்லைதான்... நீயா அதிர்ச்சியில ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போயிடு கபாலி.
இப்போ என்ன பண்ணப்போற கபாலி... தரைல கால்படாம பறந்துபறந்து அடிக்கப் போறியா..?
நாங்க சரமாரியா சுட்டுத் தள்ளினாலும் ஒரு குண்டுகூட உன்மேல படாம கண்ணாடியை உடைச்சிக்கிட்டு பாய்ஞ்சு தப்பிக்கப் போகிறியா... 10-ஆவது மாடி கண்ணா... கீழ விழுந்தா ஒரு எலும்பு கூட மிஞ்சாது.
என்று நக்கலடிக்கிறார்கள்.
அதெலாம் தேவையே இல்லை கண்ணுங்களா... நீங்க சொன்ன மாதிரியே நீங்க சுடற ஒரு குண்டு கூட என் மேல படாது. பாக்கறியா... இப்புடு சூடு என்று சொல்லியபடியே சுருட்டை எடுத்து ஸ்டைலாகப் பற்றவைத்துக்கொண்டபடியே சட்டென்று தரையில் தன் ஷூ காலால் ஓங்கி அடிக்கிறார். மேலிருந்து ட்ரான்ஃஸ்பரண்ட் சுவர் ஒன்று சட்டென்று கபாலிக்கும் பிக்குகளுக்கும் இடையே கண நேரத்தில் வந்து விழுகிறது. பிக்குகள் அதிர்சியில் உறைகிறார்கள். இருந்தும் சுதாரித்துக்கொண்டு  சரமாரியாகச் சுடுகிறார்கள். ஆனால், அது புல்லட் ப்ரூஃப் சுவர். ஒரு குண்டு கூட அதைக் கடந்து செல்ல முடியவில்லை. கபாலி அசால்ட்டாக சுருட்டைப் புகைத்தபடியே சிரிக்கிறார்.
கண்ணா, வாசல்ல சூடு குறைஞ்ச இடமா பார்த்து நின்னபோதே செருப்புக்குப் பழகின கால்கள்னு தெரிஞ்சிருச்சு. அப்பறம் ரிசப்ஷன்ல இருந்த மஹாவீரரை நீங்க புத்தர்னு நினைச்சு கும்பிட்டதுமே என் சந்தேகம் உறுதியாயிடுச்சு.
என்னை நம்புன்னு சொல்றவங்களை எல்லாம் நாம் நம்பிடறதில்லை கண்ணா. வேஷம் போடறவங்களை நம்பற மாதிரி நானும் நடிப்பேன். நடிப்புல நீங்க ஸ்டார்ன்னா... நான்... (கண்ணாடியைச் சிறிது கீழிறக்கிக் கொண்டு சிறிது இடைவெளி விடுகிறார். உலகமே சூப்பர் ஸ்டார் என்று கத்துகிறது). கபாலி புன்னகைத்து ஆமோதிக்கிறார்.
இந்த கபாலியோட உசுரை அந்த கபாலியாலமட்டும்தான் எடுக்க முடியும்னு சொன்னேன்... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். இந்தக் கபாலியால யார் உசுரையும் எடுக்க முடியும். நான் நல்லவனுக்கு மட்டும்தான் நல்லவன்... கெட்டவங்களுக்கு எமண்டா என்று சோபாவில் இருக்கும் ஒரு சுவிட்சைத் தட்டுகிறார். பிக்குகளின் பின் பக்கம் இருக்கும் சுவரில் இருந்து பத்து துப்பாக்கிகள் முளைக்கின்றன. ஆட்டோமேட்டிக் கன்னான அவை அவர்களைச் சரமாரியாகச் சுட்டு வீழ்த்துகின்றன.
புல்லட் ப்ரூஃப் சுவர் மேலே ஏறுகிறது. குற்றுயிரும் குலையியிருமாக விழுந்து கிடப்பவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே ”புத்தம் மரணம் கச்சாமி’ என்று மண்டியிட்டு வணங்குகிறார் கபாலி!

தனது குடும்பத்தைத் தேடிப் புறப்படுகிறார். இலங்கையில் சாரதா ஆஸ்ரமத்தில் அவருடைய மகள் ஆசிரியராகப் பணிபுரிவது தெரியவருகிறது. குமுதவல்லி 25 வருடங்களாக கோமா நிலையில் இருப்பதால் கபாலியின் மகளுக்குத் தன் அப்பா யார் என்பது தெரியாது. கபாலி இலங்கை சென்று சாரதா மிஷனில் இருக்கும் தன் மகளையும் மனைவியையும் பார்த்து உண்மைகளைச் சொல்கிறார். மனைவிக்கு தமது இல்லற கால சம்பவங்களை அழுதபடியே விவரிக்கிறார். குமுதவல்லியோ எந்தச் சலனமும் இல்லாமல் அவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையிலயா நான் உன்னைப் பார்க்கணும்.... இதுக்கு நான் நீ இறந்ததாவே நினைச்சு இருந்திருக்கலாமே என்று கதறுகிறார். 

மகளையும் மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆனால், அவருடைய மகளோ அதை மறுத்துவிட்டு அந்தப் பள்ளியிலேயே இருக்கப்போவதாகச் சொல்கிறார். அவ்வப்போது வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கனத்த இதயத்துடன் விடைபெறுகிறார் கபாலி. இறுதி முயற்சியாக இளவயதில் தோட்ட வேலைக்குச் செல்லும்போது தூக்குச் சட்டியுடன் செல்லும் கபாலி யாருக்கும் தெரியாமல் மனைவிக்கு ஸ்டைலாகப் பறக்கும் முத்தம் கொடுப்பது வழக்கம். இப்போதும் அதை அழுதபடியே செய்துவிட்டுப் புறப்படுவார். 25 வருடங்களக அசைவற்றுக் கிடந்த குமுதவல்லியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கும். கபாலியின் மகள் ஆனந்தக் கூச்சலிடுவாள். காரில் ஏறிய கபாலி விழுந்தடித்து ஓடிவந்து மனைவியைக் கட்டித் தழுவிக் கொள்வார். நீங்கள் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். மெள்ள மெள்ள நினைவு வந்துவிடும் என்று சொல்லி சாரதா மிஷன் நிர்வாகிகள் குமுதவல்லியை கபாலியுடன் அனுப்பிவைப்பார்கள். உடன் மகளும் புறப்பட்டுச் செல்வார்.

இதனிடையில் கபாலியின் குடும்பத்தை இந்த கதிக்கு ஆளாக்கிய வில்லனின் இருப்பிடம் பற்றிய தகவல் கபாலிக்குக் கிடைக்கும். அவனை அடித்து இழுத்துக்கொண்டு கபாலியின் கோட்டைக்கு இழுத்து வருவார்கள்.

”நிராயுதபாணியான உன்னைக் கொன்னா அது தப்பு. இந்தத் துப்பாக்கியை மேஜைல வைக்கறேன். நீயாவே எடுத்து சுட்டுக்கோ’ என்று சொல்லியபடியே திரும்பி நின்று சுருட்டு பற்றவைக்கிறார். அவனும் பயந்தபடியே அதை எடுத்துக்கொள்கிறான். தன்னைச் சுட்டுக் கொள்ள காதுப்பக்கம் கொண்டு செல்பவன் சட்டென்று துப்பாக்கியை கபாலி பக்கம் திருப்புகிறான்.
கபாலியோ சிறிதும் பயப்படாமல், சுருட்டைப் பற்றவைத்து புகையை ஊதியபடியே, நீ இப்படிச் செய்வன்னுதான் கண்ணா அதுல நான் குண்டு போடலை... என்கிறார்.
வில்லன் துப்பாக்கியை எடைபோட்டுப் பார்ப்பதுபோல் பார்த்து, நான் முப்பது வருஷமா இந்தத் துப்பாக்கியை தூக்கி சுட்டிருக்கேன். வெத்து துப்பாக்கிக்கும் குண்டு உள்ள துப்பாக்கிக்கும் எனக்கு வெயிட் வித்தியாசம் தெரியும். இதுல குண்டு இருக்கு என்று சொல்லியபடியே சுடுகிறான். ஆனால், அதில் இருந்து குண்டு எதுவும் வராமல் போகவே லேசாக அதிர்பவன் அடுத்த ரவுண்டும் சுடுகிறான். அதுவும் வெற்றாகப் போகிறது. அதற்கு அடுத்ததாகவும் சுடுகிறான். அதுவும் பொக்காகப் போகிறது. அதிர்ச்சியில் உறைபவன் துப்பாக்கியைத் தாழ்த்துகிறான். கபாலி துப்பாக்கியை வாங்கிக் கொள்ள கையை நீட்டுகிறார். அதிர்ச்சியில் உறைந்த வில்லனும் வெற்றுத் துப்பாக்கிதானே என்று அதைக் கொடுத்துவிடுகிறான்.
மகிழ்ச்சி... நிராயுதபாணியா நின்ன என்னைச் சுட முயற்சி செஞ்சிருக்க. அதனால இப்ப உன்னைச் சுடலாம் தப்பே இல்லை என்று சொல்லிச் சுடுகிறார். தோட்டா சீறிப் பாய்ந்து அவன் நெற்றியைத் துளைக்கிறது.
கண்ணா, நான் குண்டு போடலைன்னுதான் சொன்னேன். குண்டே போடலைன்னு சொல்லலை. முதல் மூணு ரவுண்ட்ல குண்டு போடலை. பாவம் நீ அதை மட்டும் சுட்டுட்டு என் கிட்டக் கொடுத்திட்ட. இதுக்குத்தான் பெரியவங்க என்ன சொல்லியிருக்காங்கன்னா தொடர்ந்து முயற்சி பண்ணனும். பாதில நிறுத்திட்டா இப்படித்தான், பாதிலயே சாக வேண்டி வந்துரும் என்றுசொல்லிவிட்டு இறந்தவனை காலால் தள்ளிவிட்டு கம்பீர நடை போடுகிறார். உடன் வரும் அடியாள், நான்காவது ரவுண்டும் அவன் சுட்டிருந்தா என்ன ஆயிருக்கும் பாஸ்...
நான் என் ஆயுதத்தை நம்பலை... அந்த ஆண்டவனை நம்பறேன். நாலாவது ரவுண்ட் சுடாம தடுக்கற பொறுப்பை அந்த ஆண்டவன் கிட்ட விட்டுட்டேன். ஒருவேளை அவன் நாலாவது ரவுண்டும் சுட்டு நான் செத்தா அந்த ஆண்டவனே நான் வாழ்ந்தது போதும்னு முடிவு பண்ணிட்டான்னு அர்த்தம் என்று சொல்லியபடியே ஸ்டைலாக கூலிங் கிளாஸை மாட்டிக்கொள்கிறார்.

மலாய் அரசியல் தலைவர்கள் கபாலியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறர்கள். அவரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள். ஒரு மலாயா மாநாட்டில் தமிழர் பிரதிநிதியாக கபாலியைப் பேச அழைத்திருக்கிறார்கள். ஆனால், அவர் மேடையில் ஏறும்போது சிலர் குறுக்கிட்டு உங்களுக்குக் கீழே முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பேச அழைக்கப்படும்போது மேடை ஏறினால் போதும் என்று அவமானப்படுத்துகிறார்கள். சிரித்தபடியே கீழிறங்கும் கபாலி, நீங்க இதை முன்னாலயே சொல்லியிருந்தா நான்  கீழயே இருந்திருப்பேனே என்று சொல்லியபடியே இறங்குகிறார். பஞ்சம் பொழைக்க வந்தவனோட இடம் என்னங்கறதை ஊருக்கே காட்டணுங்கறதுக்காகத்தான் அப்படிச் செஞ்சேன் என்கிறார் விழா அமைப்பாளர். கபாலியின் ஆட்கள் இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் கூட்டத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள். கபாலி அவர்களை அமைதிப்படுத்துகிறார். சிரித்தபடியே முன் வரிசையில் ஒரு ஓரமாக உட்கார்ந்துகொள்கிறார். அவர் பெயர் அழைக்கப்படுகிறது. பேச மேடை ஏறுகிறார். கூட்டத்தில் இருந்து சிலர் ஊளையிடுகிறார்கள். தமிழன் டவுன் டவுன்... வந்தேறி நாயே சொந்த ஊருக்குப் போ என்று கூக்குரலிடுகிறார்கள்.

கபாலி நிதானமாக மைக் முன்னால் வந்து நின்று, ”பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆஃப் மலேசியா’ என்று தொடங்குகிறார்... கூட்டத்தில் சட்டென்று மின்சாரம் பாய்ந்ததுபோல் அனைவரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். அவமானப்படுத்த நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். மேடையில் இருப்பவர்களும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். கபாலியை அவமானப்படுத்தவேண்டுமென்று நினைத்த விழா தலைவரும் வேறு வழியின்றி எழுந்து நிற்கிறார்.

கபாலி தமிழர்கள் மலாயா மண்ணில் சிந்திய கண்ணீரையும் ரத்தத்தையும் உருக்கமாகச் சொல்கிறார். மரண ரயில்பாதை அமைக்கப்பட்டதில் உயிர் துறந்த மலாய்களையும் தமிழர்களையும் பற்றிச் சொல்கிறார். தமிழன் தான் சென்ற நாடுகளையெல்லாம் தன் உழைப்பால் செழிக்கச் செய்ததைச் சொல்கிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என தன் நாட்டுக்கு வந்தவர்களையெல்லாம் வாழவைத்ததைச் சொல்கிறார். தமிழனை போட்டியிட்டு வெல்லுங்கள்...பொறாமையில் வெல்ல நினைக்காதீர்கள் என்று சொல்லித் தன் பேச்சை முடிக்கிறார். பேசி முடித்துவிட்டு கீழிறங்கிச் செல்பவரைப் பார்வையாளர்கள் தடுத்து மேடையில் நடுநாயகமாக உட்கார்ந்திருப்பவரை எழுப்பிவிட்டு அதில் உட்கார வைக்கிறார்கள். இரண்டாம் முறையாக அவரைப் பேசச் சொல்கிறார்கள். கம்பீரமாக தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாடத் தொடங்குகிறார். ஒட்டு மொத்த அரங்கமும் அவர் பின்னால் பாடுகிறது.  

கபாலியின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க மலேசியாவில் நிலைமை மோசமாகிறது. தமிழர்களை குறிவைத்துத் தாக்குதல்கள் நடக்கின்றன. தமிழர்களுக்கும் நாய்களுக்கும் இடம் இல்லை என்று உணவு விடுதியில் எழுதிப்போடுகிறார்கள். கபாலியின் ஆட்கள் மலாய்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று கொதிக்கிறார்கள். கபாலி அவர்களை அமைதிப்படுத்துகிறார். பொங்கல் திருநாளை விமர்சையாகக் கொண்டாடுகிறார். மலாய் ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள் தருகிறார். அனைவருக்கும் அன்னதானம் நடக்கிறது. ஆனால், எதிரிகள் அந்த உணவில் விஷம் கலந்துவைத்துவிடுகிறார்கள். இதனால் பலர் வாந்த்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்கள். மலாய்காரர்களுக்குப் போடப்பட்ட உணவில் மட்டுமே விஷம் கலக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். மலாய் அடிப்படைவாதிகள் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு மலாய்காரர்களைக் கொல்ல தமிழன் கபாலியின் சதி என்று தமிழர்களையெல்லாம் அடிக்கிறார்கள். காவல்துறை கபாலியை அண்டர்வேருடன் நடு ரோட்டில் இழுத்துச் சென்று சிறையில் அடைக்கிறது. பரோலில் வெளியே வரும் கபாலி உணவில் விஷம் கலந்தவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்.

மெயின் வில்லனான டோனி லீ இப்போது பெரிய அரசியல் தலைவராகிவிட்டிருப்பார். அவரைக் கொல்ல கபாலி ஸ்கெட்ச் போடுவார். ஜப்பானுக்கு பயணம் செய்யவிருப்பதாக பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்துவிட்டு சொந்த விமானத்தில் ஜப்பானுக்குப் புறப்படுவார். வழியில் ஒரு காடு ஒன்றைக் கடக்கையில் ஹெலிகாப்டர் கதவு திறக்கப்பட்டு நூலேணி ஒன்று கீழே இறக்கப்படும். கபாலி அதன் வழியாக இறங்குவார். அங்கு ஏற்கெனவே ஒரு சுமோ நின்றுகொண்டிருக்கும். அதில் ஏறி நேராக டோனி லீயின் கெஸ்ட் ஹவுஸுக்கு விரைவார். ஏற்கெனவே அவருடைய ஆட்கள் பிரமாண்ட கேட்டின் கீழ்ப்பக்கத்தில் இரும்பு கம்பி ஒன்றை செருகியிருப்பார்கள். கதவு மூடப்படாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்துக்கான மின் இணைப்பையும் துண்டித்திருப்பார்கள்.
 செக்யூரிட்டிகள் காலை உணவு உண்ணும் நேரத்தில் கபாலி நைஸாக வீட்டுக்குள் நுழைந்துவிடுவார். இரண்டாம் கதவில் செக்யூரிட்டிகள் நின்றுகொண்டிருப்பார்கள். முதல் கதவின் வழியாக ஒருவர் வருகிறார் என்றால் டோனி லீயின் அனுமதி பெற்றுத்தான் வந்திருப்பார் என்று நம்பி மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்வார்கள். கபாலி முன்னதாகவே தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிடுவார். அவர்கள் சோதிப்பதைப் பார்த்து மெள்ளச் சிரித்தபடியே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார். மொழி புரியாத அவர்கள் என்ன என்ன அதிந்துபோய்க் கேட்கவே, கோல்டன் வேர்ட்ஸ் கேனாட் பி ரிபீட்டட் என்று சொல்லியபடியே உள்ளே செல்வார்.

மாடி அறையில் அமர்ந்திருக்கும் டோனி லீ கபாலியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைவார். நீயா.. நீ எப்படி இங்க வந்த..? என்று அதிர்ச்சி அடைவார். இந்த உலகத்துல இரண்டு பேரோட வருகையை யாராலும் தடுக்க முடியாது. ஒண்ணு எமன்... இன்னொன்னு இந்தக் கபாலி.. இப்போ அந்த கபாலியே எமனா வந்திருக்கான். அப்போ எப்படிடா தடுக்க முடியும் என்கிறார். உன் கிட்டதான் ஆயுதமே இல்லையே என்னை எப்படி கொல்லுவ என்று டோனி லீ எகத்தாளம் செய்யவே... வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.. இந்தக் கபாலிக்கு கையும் ஆயுதம் என்று சொல்லி டோனி லீயைக் கழுத்தை நெரித்துக் கொல்வார். மூச்சுத் திணறும் டோனி லீ, நீ காந்தி வழிக்குத் திரும்பினதா சொன்னாங்களே.. இல்லைன்னா ஜெயில இருந்து நீ வந்ததுமே உன்னைக் கொன்னிருப்பேனே... என்கிறார். மக்கள் பிரச்னைக்குத்தான் காந்தி வழி... சொந்தப் பிரச்னைக்கு என்னிக்குமே கபாலி வழிதாண்டா என்று சொல்லி டோனி லீயின் கதையை முடிக்கிறார்.

அங்கிருந்து நேராக காடியை எடுத்துக்கொண்டு காட்டுக்குச் செல்கிறார். ஹெலிகாப்டர் வருகிறது. நூலேணி இறக்கப்படுகிறது. ஏறி ஜப்பானுக்குச் சென்று சேருகிறார். அங்கு அவரை வரவேற்கும் நண்பர் மகிழ்ச்சியுடன் கபாலி உனக்கு ஒரு நியூஸ் தெரியுமா... டோனி லீ செத்துட்டானாம்.
ஓ.. ஐ.ஸீ...
நக்கலாகச் சிரித்தபடியே, நல்ல மனுஷன்...  May his soul rest in Peace. என்கிறார் அந்த நண்பர்.
கபாலி மறுப்பதுபோல் தலையை அசைத்தபடியே நோ.. நோ.... இட் வில் வாண்டர் இன் வைல்ட் என்று சொல்லிச் சிரிக்கிறார்.
அதைக் கேட்டதும் திடுக்கிடும் நண்பர் சட்டென்று உண்மையைப் புரிந்துகொண்டு அப்படியா என்று கண்கள் மலரக் கேட்கிறார்.
கபாலி வானத்தை நோக்கிக் கை காட்டி அந்த எமன் சொன்னான்... இந்த எமன் முடிச்சிட்டான் என்று சிரிக்கிறார்.

நிழல் உலகத்தினர், மலாய் அரசியல்வாதிகள், சீன அரசியல்வாதிகள், காவல் துறையினர் எல்லாரும் கபாலியை ஒழிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். கபாலியின் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் தமிழ் நேசனின் பேரனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கபாலி தினமும் காலையில் பூங்காவில் நடைப்பயிற்சி போவது வழக்கம். அப்போது அவருக்கு அருகில் பாதுகாவலர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழ் நேசனின் பேரன் யதேச்சையாக வருவதுபோல் பூங்காவில் கபாலியைச் சந்திப்பார். கபாலியும் அவனைப் பார்த்து மகிழ்ந்தபடியே இளைய தலைமுறையும் இப்படித்தான் உடம்பை நல்லா ஃபிட்டா வெச்சுக்கணும் என்று சொல்லி அவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். 

தான் இப்போது குனிந்து நிமிர்ந்து உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி தன் துப்பாக்கியை தமிழ் நேசனின் பேரன் கையில் கொடுப்பார். சிறிது நேரம் தயங்கும் அவன் மெள்ள அதை வாங்கிக் கொள்வான். அதையே சிறுதி நேரம் ஆசையுடனும் அதிர்ச்சியுடனும் உற்றுப் பார்ப்பான். கேமரா மெள்ள அங்கிருந்து நகர்ந்து பக்கத்தில் இலையெல்லாம் சிவப்பு மலர்களாக தீபோல் பற்றி எரியும் குல்மோஹர் மரத்தின் மீது குவியும். சட்டென்று ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து அந்த மரத்தில் இருந்து பறவைகள் பதறியபடியே சிறகடித்துப் புறப்படுவதும் காட்டப்படும்.
மெள்ள திரையில் கருமை பரவும். அதில் ரத்தத் துளி ஒன்று மேலிருந்து கீழாக வழியும்.
A Film By B.R.Mahadevan