Tuesday 23 August 2016

ஜோக்கர்

 மாறுபட்ட கதை, சிறப்பான நடிப்பு, அருமையான பாடல்கள், இதமான காதல் காட்சிகள், சமூக அக்கறை, அனைத்து அதிகார மையங்கள் மீதான விமர்சனம் என பல அம்சங்களில் ஜோக்கர் திரைப்படம் அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

படத்தில் வரும் கதாநாயகன் சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கிறான். ஆனால், அவனை உலகம் கோமாளி என்கிறது என்று போராளிகள் மீது ஒருபக்கத்தில் கரிசனத்தைக் கோருகிறது. மறுபக்கம், சமூக அநீதிகளைத் துணிச்சலாக, தந்திரமாக ஜோக்கர் வேடத்தில் வந்து பேசி மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் என்று பாராட்டவும்படுகிறது. இருந்தும் ஜோக்கரின் சிந்தனையும் செயல்பாடுகளும் சிதறலாகப் பல விஷயங்களைப் பேசுவதால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாமல் போய்விட்டிருக்கிறது.




திரைப்படத்தில் பல அடிப்படை, அரசியல் குறைபாடுகள் உள்ளன.
முதலாவதாக, அது பெரும்பாலான தமிழ் திரைப்படங்களைப்போல் இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறது. கழிப்பிடம் கட்டக்கூட வசதியில்லாத ஒரு ஏழைக் கிராமத்தானின் வேதனை நிறைந்த வாழ்க்கை ஒருபக்கம். சமூகச் சீர்கேடுகளை லூசுத்தனமான அறச்சீற்றத்துடன் எதிர்க்கும் நபர் பற்றிய சித்திரம் மறுபுறம் என இரண்டு மாறுபட்ட விஷயங்கள் படத்தில் பிரதானமாகச் சித்திரிக்கப்படுகின்றன. அப்பாவி கிராமத்தான் விதிவசத்தால் ஜோக்கர் போராளியாக மாறுவது படத்தில் படு செயற்கையாக நிகழ்கிறது. கக்கூஸ் சுவர் இடிந்து விழுவதால் கோமா நிலைக்குச் சென்றுவிடும் மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோருகிறான் நாயகன். அது முடியாது என்று நீதிமன்றம் சொன்னதும் நாயகன் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா..?  சட்டத்துல முடியாதுன்னு சொல்லிட்டா போதுமா... நாம ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் அரசை டிஸ்மிஸ் செய்ய நமக்கு உரிமை கிடையாதா? என்று சீறுகிறார்.

இந்த டிரெஸ்ஸைப் போட்டா ஜனாதிபதி மாதிரி இருப்ப, கொடுக்கலைன்னா எடுக்கணும், ஜனாதிபதிக்குத்தான் ஃபுல் பவரு என்ற காட்பாதர் கதாபாத்திரத்தின் வசனங்கள் இடம்பெறுகின்றன. என்றாலும் கதாநாயகனின் பிந்தைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும்வகையில் இடம்பெறும் இந்த வசனம் எளிய கிராமத்தானுக்கும் கோமாளிப் போராளிக்கும் இடையிலான உரு மாற்றத்தைப் பிரதிபலிக்கும் பலவீனமான வசனமாக இடம்பெற்றிருக்கிறது.

ஒரு கதாபாத்திரம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளைத் தேடித் தேடிக் கொல்கிறது என்றால், அதன் ஃப்ளாஷ்பேக்கில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளால் பெரும் இழப்பை அந்தக் கதாபாத்திரம் சந்தித்ததாகக் காட்டுவார்கள். அதுபோல் அழகான பெண் ஒருத்தியால் ஏமாற்றப்படும் நபர் அழகான பெண்களையெல்லாம் கொலை செய்யப் புறப்படுவார்... அரசியல்வாதியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அரசியல்வதிகளைத் தேடிப் பழிவாங்குவார்... இப்படியாக கதாநாயகனின் பிற்காலச் செயல்களுக்கு அவன் வாழ்க்கையில் முற்காலத்தில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக இருக்கிறது என்ற திரைக்கதை வகைமை நியாயமானது, தர்க்கரீதியாகச் சரியானதுதான். ஜோக்கரில் ஜோக்கருக்குக் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு அதிகாரவர்க்கத்தின் அலட்சியம் காரணமாகக் காட்டப்படுகிறது. ஆனால், உடனே சித்தம் கலங்கி அல்லது சித்தம் தெளிந்து தன்னையே அதிகாரவர்க்கத்தின் தலைவராக நினைத்துக்கொண்டுவிடுகிறார். இது கொஞ்சம் அதீத ஜம்ப்.

ஒரு நிகழ்வின் தூண்டுதல், ஒரு இழப்பின் வலி அதற்கு இணையான எதிர்வினையைத் தூண்டினால்தான் நம்ப முடிவதாக இருக்கும். ஒரு சாலை விபத்தில் தன் மகனைப் பறி கொடுக்கும் நபர் அந்த விபத்து நடந்த சிக்னலில் தினமும் வந்து நின்று வேறு விபத்துகள் எதுவும் நடக்கவிடாமல் தடுத்தார் என்றால் அது யதார்த்தமான படம்... அதே தந்தை சிக்னலில் இருக்கும் காவலர், வாகனத் தயரிப்பாளர்கள், போக்குவரத்து அமைச்சர் என அனைவரையும் கொல்கிறார் என்று சொன்னால் அது ஹீரோயிஸப் படம். ஜோக்கர் யதார்த்தமாகவும் எதிர்வினையாற்றவில்லை. சாகஸ ஹீரோவாகவும் நடந்து கொள்ளவில்லை.

எனவே, எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒருவர் சமூக அநீதிகளைத் தானாகவே எதிர்த்துப் போராடுகிறார் என்று காட்டியிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். டிராஃபிக் ராமசாமியும் நாகர்கோவில் பூமேடையும், சசி பெருமாளும் எந்த சொந்த இழப்புகளைப் பார்த்துவிட்டு போராடக் களம் இறங்கினார்கள். இந்தப் படத்தில்கூட ஜெயகாந்தன் தாத்தா எந்தவித சொந்த வாழ்க்கைக் காரணமும் இல்லாமல்தான் போரட முன்வந்திருக்கிறார். இசையும்கூட எந்தவித தனிப்பட்ட காரணமும் இல்லாமல்தான் போராட வந்திருக்கிறார். ஆனால், நாயகனுக்கு பலவீனமான ஒரு காரணம் விரிவாகக் காட்டப்படுகிறது.

காரணம்... தமிழ் நாயகனுக்கு காதல் இல்லாமல் இருக்கலாமா என்ன..? அவன் மன நோயாளியாக இருந்தாலே காதல் இருக்கும். இங்கு முதலில் நாயகன் தெளிந்த சிந்தையுடன் காதலிக்கத் தோதான மனதுடன் தானே இருக்கிறான். எனவே, அவனுடைய வாழ்க்கையில் முதல் பாதியில் எளிய, ஆத்மார்த்தமான காதல் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், இயக்குநரின் நோக்கம் காதல்கதை சொல்வது அல்லவே... ஜோக்கர் போராளிதானே அவருடைய நாயகன். எனவே வணிக சமரசமாக உருவாக்கிய காதல் நாயகனை ஜோக்கர் போராளியாக ஆக்கியாக வேண்டிவருகிறது. அதில்தான் சிறு நிரடல். இந்த இடத்தில்தான் தமிழ் திரையுலகின் உள்ளார்ந்த பலவீனம் தலைதூக்குகிறது. வேறு நாட்டுத் திரைப்படமென்றால் காதல் கதையைத் தனிப் படமாக எடுப்பார்கள்; ஜோக்கரை வேறொரு படமாக எடுப்பார்கள்.
*


இந்தப் படத்தின் அடுத்த முக்கிய பலம்/பலவீனம் நாயகன். பொதுவாக ஒருவர் சமூக அநீதிகளை எதிர்கொள்ளும்போது காணாததுபோல் ஒதுங்கிப் போகலாம். அல்லது எதிர்த்துப் போராடலாம். நிஜத்தில் ஒதுங்கிப் போவதே அதிகம் என்றாலும் நிழலில் எதிர்த்துப் போராடுவதே அதிகம். நிழல் நாயகன் பெரும்பாலும் தனது சாகசத் திறமைகள் மூலம் தனி ஒருவனாகவே போராடி வெற்றிபெறுவான்.

அதிலும் திரைப்படங்களில் நாயகனுடைய வழிமுறை புத்திசாலித்தனம் மிகுந்ததாகவும் பெரும்பாலும் நாயகனுக்கு இறுதியில் வெற்றி கிடைப்பதாகவும் இருக்கும். நிஜத்தில் எதிர்த்துப் போராடும் ஒரு நபர் ஏதேனும் கட்சியில் சேர்ந்து போராட ஆரம்பிக்கலாம். ஏதேனும் சங்கத்தில் சேர்ந்துகொண்டு அல்லது ஏதேனும் அமைப்பில் சேர்ந்துகொண்டு போராட ஆரம்பிக்கலாம். தான் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பிறரையும் சேர்த்துக்கொண்டு போராடலாம். நண்பர்கள் சேர்ந்துகொண்டு போராடலாம். இவையெல்லாம்தான் சாதாரணமாக ஒருவர் செய்யும் வழிமுறை.

ஜோக்கர் சாகச நாயகன் போலவும் நடந்துகொள்ளவில்லை. யதார்த்த மனிதன் போலவும் நடந்துகொள்ளவில்லை. டிராஃபிக் ராமசாமி, பூமேடை, சசி பெருமாள் போன்றவர்கள் போல் நடந்துகொள்கிறான். இவர்கள் எல்லாம் சுத்த சுயம்புவான ஒன் மேன் ஆர்மிகள். அவர்களுடைய போராட்ட வழிமுறைகள் கொஞ்சம் வேடிக்கையாகவே இருக்கும். அவர்கள் அப்படியான போராட்ட வழிமுறையை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நாட்டில் இருக்கும் கட்சிகள், அமைப்புகள் மீதான அதிருப்தியும் கோபமுமே அவர்கள் கூட இணைந்து போராடாமல் தனித்துச் செயல்படவைக்கின்றன என்று ஒரு காரணம் சொல்லலாம். இந்த ஜோக்கர்களுக்கு அப்படியான அரசியல் புரிதல் இருக்குமா என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நாட்டில் இருக்கும் அமைப்புகள் எல்லாமே தள்ளி நின்று பார்த்தாலே நாறும் அளவுக்கு அரசியல் சாக்கடையகவும் ஊழல் குட்டைகளாகவும்தான் இருக்கின்றன. எனவே, ஒரு நேர்மையான போராளி இவற்றில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதை நாம் கேள்விகேட்கவே முடியாது. இதன் எதிர் நிலையில் இவர்களுடைய போராட்ட வழிமுறைகள் மீது அமைப்புகளுக்கு ஒருவித எள்ளல் மனோபாவமே இருக்கும். சீத்தாராம் யெச்சூரியைக் கூப்பிட்டு மழை நீர் தேங்கிய சாலையில் உருளச் சொன்னால் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தையே கலைத்துவிட்டு ஓடிவிடுவார். இதுபோன்ற கோமாளிப் போராளிகளுக்கு கட்சிகள், அமைப்புகள் எல்லாம் வெளியில் இருந்துதான் ஆதரவு தரமுடியும். அப்படியாக ஜோக்கர் போராளியும் அரசியல் இயக்கமும் சேர்ந்து இயங்கவே முடியாது.

ஜோக்கர்ர்களுடைய சமூக அக்கறையையோ துணிச்சலையோ, நேர்மையையோ நிச்சயம் குறை சொல்லமுடியாது. ஆனால், அவர்களுடைய போராட்ட வழிமுறை செயல் திறன் குறைந்தது. அவர்களுடைய உழைப்பை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியும் அதிகாரமும் செல்வாக்கும் மிக மிகக் குறைவாக இருக்கும். டான் குயிசாட் காற்றாலையை எதிர்த்து போர் புரியப் புறப்படுவதுபோல் இவர்களுடைய போராட்டங்கள் ஆகிவிடுகின்றன. அந்தவகையில் இந்த ஜோக்கர் கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் சீனிவாசர் நடித்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியை எட்டியிருக்கும். படத்தின் சீரியஸ்னெஸ் குறைந்திருக்கும் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், வேறுவகையில் அதை சமன்படுத்தியிருக்கவேண்டும்.

மேலும் ஜோக்கர்களின் லட்சியம் சரியானது என்றாலும் வழிமுறை கேலிக்குரியதாக இருப்பதால் லட்சியத்தின் மீதான மதிப்பும் போராடுபவர் மீதான மதிப்பும் குறைந்துவிடுகிறது. கடன் தொல்லை தாங்க முடியாமல் போகும்போது ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். அதுவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு வழிதான். அதை ஒருவர் ஏற்க முடியாதென்றாலும் பிரச்னையின் தீவிரத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதில் அது அதிக வெற்றி பெறும். சேற்றில் குளிக்கிறேன்... தவழ்ந்தபடியே நடக்கப்போகிறேன் என்றெல்லாம் நடத்தப்படும் போராட்டங்கள் வெறும் கவன ஈர்ப்பு என்பதைத் தாண்டி எதையும் சாதிக்காது. இதுதான் யதார்த்தம்.



அதோடு இன்றைய காலகட்டத்தில் ஆதிக்கசக்தியாக இருப்பதுமட்டுமல்ல... ஆதிக்க சக்தியை எதிர்ப்பதுமே நல்ல வருமானம் தரக்கூடிய விஷயமாகிவிட்டிருக்கிறது. இன்று நாட்டின் பெரும்பாலான அதிகாரமையங்களில் சொகுசாக, அழுத்தமாக உட்கார்ந்துகொண்டு அதிகாரத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் இடதுசாரி சக்திகளுக்குப் பஞ்சமே இல்லை. பணக்காரனைவிட ஏழைக்காக என்.ஜி.ஓ. நடத்துபவன் பெரும் பணக்காரனாக இருக்கும் காலம் இது. எனவே ஜோக்கர் அந்த சாமர்த்தியமும் இல்லாமல் இருக்கிறான் என்று அவன் மேல் வருத்தமே நமக்கு வருகிறது. ஒரு காந்தியவாதியாக நேர்மையாக நடந்துகொண்டு பிழைக்கத் தெரியாமல் இருப்பதைவிட ஒரு கலகக்காரராக இருந்துகொண்டு சம்பாதிக்கத் தெரியாமல் இருப்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம் (ஆனால் ஜோக்கர்தான் அப்படி முட்டாளாக இருக்கிறானே தவிர இயக்குநர் படு கெட்டிதான். சகாயத்துக்கு ஒரு ஷொட்டு, பார்ப்பானுக்கு ஒரு குட்டு; கொடுக்கலைன்னா எடுத்துடணும், தமிழகக் குக்கிராமத்தில் கக்கூஸ் இல்லைன்னாலும் தில்லியே காரணம் என இடதுசாரி புஷ்பக விமானத்தில் தன்னுடைய ஜன்னலோர இருக்கையை வெகு அருமையாக உறுதிசெய்துகொண்டுதானிருக்கிறார்).

அதோடு, ஜோக்கர் சுயம்புவான ஜோக்கராக இருந்திருந்தால் அவர் செய்யும் போராட்டங்களான ஆமையை அவிழ்த்துவிடுதல், கோமணம் கட்டிக்கொண்டு போராடுதல், பாம்புடன் தனியாக இருத்தல், தீ வைத்துக் கொள்ளுதல் என்பவையெல்லாம் கடைசிவரை ரசிக்க முடிந்திருக்கும். ஆனால், ஜோக்கருக்கு காதலி ஒருவர் காட்டப்பட்டதாலும் அவருடைய கோமா நிலை என்ற வேதனை நிறைந்த கதையைக் காட்டி பாறைபோல் பார்வையாளர் மனதைக் கனக்கச் செய்துவிட்டதாலும் அந்த கேணத்தனத்தின் நீட்சியாக கருணைக் கொலையை அவர் தீர்வாக முன்வைக்கும்போது எரிச்சலே வருகிறது.
*

அடுத்ததாக, காதல் கதையின் முடிவுக்கு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும் கக்கூஸ் எபிசோட் படத்தின் மிகப் பெரிய பலவீனம். அல்லது அதை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். கதை சமகாலத்தில் நிகழ்கிறது. நாயகனும் நாயகியும் குவார்ட்டர், பிரியாணிக்காக கட்சிக் கூட்டங்களுக்குப் போய்வருகிறார்கள். அங்குதான் அவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. உலக சினிமாக்களில் கதை நிகழும் காலமும் கதாபாத்திரங்களும் மண் வாசனையோடு பதிவு பெறுவதுபோல் இந்தக் காதலர்களும் பொதுக்கூட்டக் காட்சிகளும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த 2000க்குப் பிந்தைய காலகட்டத்திலும் வீட்டில் கக்கூஸ் இல்லை என்பது நம்ப முடிவதாக இல்லை. அதிலும் தூய்மை இந்தியா என பல லட்ச ரூபாய்செலவில் நவீன டாய்லெட்கள் கிராமந்தோறும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது பார்வையாளர்களுக்கு நெருக்கமான பிரச்னையாக இருக்கவே இல்லை.



அப்படியே இப்போதும் கிராமத்தினருக்கு அது பெரியதொரு பிரச்னையே என்று ஒரு பேச்சுக்காக எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணம் யார் என்ற அரசியல் திரைப்படத்தில் அழுத்தமாக இடம்பெறவில்லை. அல்லது தவறான நபரை அதற்கான காரணமாகச் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் மத்திய அரசுதான் ஓரளவுக்காவது இந்தப் பிரச்னையை தீர்க்க உருப்படியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. எந்த மாநில அரசு மத்திய அரசுடன் ஒழுங்காகக் கை கோர்க்கிறதோ அந்த மாநிலத்தில் தூய்மையும் சுகாதாரமும் நிலவும். மத்திய அரசால் பணத்தைக் கொடுக்கத்தான்முடியும். ஒழுங்காக வேலை செய்ய வேண்டியது மாநில அரசுதான். தமிழக மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும், கிராமப் பஞ்சாயத்துகளும்தான் இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்கின்றன. அவைதான் உண்மையான குற்றவாளிகள். திரைப்படத்தில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு தில்லி தலைமை அழுத்தமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறது. ஜோக்கருக்குள் இப்படியான அபாய அரசியல் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.

நிறைமாத கர்ப்பிணியான நாயகி மழைபெய்யும் நள்ளிரவில் கழிப்பறைக்குத் தனியாகச் செல்கிறாள். உண்மையில் அவள் தன் கணவனைத்தான் எழுப்பிக்கொண்டு சென்றிருக்கவேண்டும். அதுதான் நிஜத்தில் நடக்கும். அன்புக் கணவனைத் தூக்கத்தில் இருந்து எழுப்பவேண்டாம் என்ற காதலைவிட வயிற்றில் வளரும் வாரிசின் மீதான தாய்ப்பாசமே மிகுதியாக இருக்கும். எனவே, கணவனை எழுப்பிக் கொண்டுதான் போவாள். சரி... அதுதான் இல்லை என்றாலும் கக்கூஸ் சுவர் இடிந்துவிழுந்ததும் கூக்குரல் எழுப்பி இருப்பாளே... அந்த கக்கூஸ் அவர்களுடைய வீட்டுக்கு வெகு அருகில்தான் இருக்கிறது. அக்கம் பக்கத்திலும் வீடுகள் இருக்கின்றன. என்னதான் மழை பெய்தாலும் ஒரு உயிரின் அதுவும் வயிற்றில் குழந்தையை வைத்திருக்கும் ஒருத்தியின் அபயக் குரல்  ஓங்கியே ஒலித்திருக்கும்.

சரி... அதுகூட யாருக்கும் கேட்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம்... மறு நாள் ஆறேழு மணிக்காவது நாயகன் எழுந்திருந்து பார்த்திருக்கமாட்டானா... அவன் இந்திய ஜனாதிபதி பத்து பதினோருமணி அளவில் வந்து கூட்டத்தில் பேசும்வரை காத்திருக்கத்தான் வேண்டுமா..? கர்ப்பிணி நாயகி உயிருக்குப் போராடுகிறாள்... நாயகன் அவளை மருத்துவமனைக்குக்கொண்டு செல்லத் துடிக்கிறான். இந்திய ஜனாதிபதி நேரம்காலம் புரியாமல் பெண்கள் முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரையும் இந்திய அரசையும் வில்லனாக, தெளிவாக, விலாவாரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இத்தனைக்கும் லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசின் பிரதிநிதி அவர். லஞ்ச ஊழலால் அதை சுரண்டிச் சென்ற பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட அதிகாரிகளும் எம்.எல்.ஏ.வும் இங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்திய ஜனாதிபதி முழு வில்லனாகச் சித்திரிக்கப்படுகிறார். அவர் தான் முக்கிய குற்றவாளி என்று காட்டப்படுவதற்காகத்தான் நள்ளிரவில் விபத்தில் சிக்கிய நாயகி சொட்டச் சொட்ட இரவுமுழுவதும் மட்டுமல்ல பகல் பத்து பதினோரு மணிவரை யார் கண்ணிலும் படாமல் வயிற்றில் குழந்தையுடன் இடிபாடுகளுக்கு நடுவே தவித்துக்கொண்டிருக்கும்படிவிடப்பட்டிருக்கிறாள்.

இந்திய அரசைக் குற்றம் சாட்டவேண்டியதுதான். அதற்காக இப்படியா..?
உண்மையில் இந்தக் காட்சி எப்படி எடுக்கப்பட்டிருக்கவேண்டும். நாயகி சிரமப்பட்டு எழுந்ததைப் பார்த்ததுமே நாயகனுக்கும் தூக்கம் கலைந்துவிட்டிருக்கவேண்டும். அவனுக்கும் அவள் மேல் காதல் உண்டுதானே... எனவே, அவனே அவளைக் கைத்தாங்கலாக கழிப்பறைக்கு அந்த மழை பெய்யும் நள்ளிரவில் அழைத்துச் செல்கிறான். அவளை அங்கே விட்டுவிட்டு கக்கூஸ் மேலே சாக்கு ஒன்றைப் போர்த்திவிட்டு குடிசைக்கு வந்து ஒடுங்கிக் கொள்கிறான். திடீரென்று இடி இடித்து மின்னல் வெட்டி கக்கூஸ் இடிந்து விழுந்துவிடுகிறது. நாயகன் பதறி அடித்தபடி ஓடிச் சென்று கற்களை விலக்கிவிட்டு அவளைத் தூக்கி வீட்டில் கிடத்துகிறான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கச் சொல்கிறான்.

முதல் வீட்டில், ‘நெருப்புடா நெருங்குடா’ என்று பாடலை அதிர வைத்தபடி படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாயகன் வாசலில் நின்று கொண்டு கத்துவது அவர்களுக்குக் கேட்கவே இல்லை. அடுத்ததாக  இன்னொரு வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டுகிறான். அங்கே, ‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே என்றோ இந்த நாட்டாமை சொல்றதுதாண்டா தீர்ப்பு என்றோ டி.வி. முழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் நாயகனின் கூக்குரல் கேட்பதில்லை.

வேறோரு வீட்டுக்கு ஓடுகிறான். அங்கே மாரியாத்தா வேப்பிலை அடித்துக்கொண்டு சன்னதம் கொண்டு ஆடுகிறாள். இன்னொரு வீட்டில் அல்லேலூயா சத்தம்,   நிறுத்துங்கள் என்று ஏசுவே சொல்லும் அளவுக்கு ஒலிக்கிறது. அவர்களுக்கும் நாயகனுடைய அபயக் குரல் கேட்கவில்லை.
பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்கு ஓடுகிறான். அவரோ தொலைபேசியில் பேசும் எதிர்முனைக்கு ரிசீவர் காலில் விழுந்து கும்பிட்டபடியே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக நாயகன் சென்று தட்டும் உள் புறம் தாழிடப்பட்ட வீடுகளில் ஒன்றுகூடத் திறக்காமல் இருக்கின்றன. நாயகன் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு  ஓடுகிறான். மனைவியைத் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு இழுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறான் என்று இந்தக் காட்சியைச் சித்திரித்திருக்கவேண்டும். ஏனென்றால், கிராமத்தில் ஒரு வீட்டில் கக்கூஸ் இல்லையென்றால் இந்த நபர்கள்தான் முதல் குற்றவாளிகள். இவர்களை விமர்சித்தால் கோவித்துக்கொள்வார்கள்... இந்திய தில்லி அரசை விமர்சித்தால் முற்போக்கு பிம்பம் கிடைக்கும். இடதுசாரிகளில் ஆரம்பித்து பிராந்திய ஆதிக்க சக்திகள், சிறுபான்மையினர், தலித் சக்திகள் என அனைவருடைய ஆதரவும் கிடைக்கும் என்ற தெளிவான கணக்கு இதன் பின்னால் இருக்கிறது. (படம் வன்னியர்களின் கோட்டையான தர்மபுரியில் நடப்பதால் திருமாவளவன் கம்பீரமாக வந்து இந்தப் படத்தை வாழ்த்திவிட்டிருக்கிறார்). இந்த அனைத்து சக்திகள் குறித்த மென்மையான விமர்சனங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன என்பது உண்மைதான். பிற தமிழ் படங்களில் இந்த அளவுக்கூட அவைமீது விமர்சனம் வைக்கப்பட்டதில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அது இந்தப் படத்தின் இந்த அபாய அரசியலை ஒருபோதும் நியாயப்படுத்திவிடாது.

இந்திய அரசை விமர்சிக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. இந்திய அரசை விமர்சிப்பது உங்கள் நோக்கமென்றால், அதை ஒழுங்காகச் செய்யுங்கள். கக்கூஸ் கட்டிக் கொடுக்காமல் இருப்பது இந்திய அரசின் தவறு அல்ல... இன்றும் மனித மலத்தை மனிதரே அள்ளும்படிச் செய்துவருகிறதே அதுதான் இந்திய அரசின் மாபெரும் தவறு. அந்தப் பிரச்னை தமிழகத்தில் இல்லை என்றால் எங்கு அந்தப் பிரச்னை இருக்கிறதோ அங்கு கதையை நகர்த்தியிருக்கவேண்டும். கக்கூஸ் கட்டித் தராததற்கு தலித் கட்சிகள், ஆண்ட பரம்பரைகள், அம்மன் கோஷ்டியினர், அல்லேலூயா கோஷ்டியினர், அதிமுக, திமுக அல்லக்கைகள் என அனைவரையும் விமர்சிக்கவேண்டும். அதன் பிறகு இந்திய அரசையும் விமர்சிக்கும் நோக்கில் கதையை மனித மலத்தை மனிதர்களே அள்ளும் இடமான உத்தரபிரதேஷுக்கு நகர்த்தியிருக்கவேண்டும்.

உத்தரபிரதேஷின் நிலை இதைவிடப் படு மோசமானது. இந்தியாவின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும்  அளவுக்குச் செல்வாக்கு படைந்த அந்த மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்ந்து நடந்துவருகிறது. கிராமங்களை அழுகி நாறும் குட்டைகளாக வெறுத்து விமர்சித்த நேருவும் சரி அவருடைய வாரிசுகளும் சரி அவருடைய பக்தர்களும் சரி யாருமே அந்த அவலத்தை அழிக்க எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. மேற்கத்திய தொழில்மயமும் உயர் கல்வியுமே நமக்கான விடுதலை என்று நம்பியவர் நேரு. உண்மையில் அவர் இந்திய கிராமங்களை விமர்சித்ததற்கு உண்மைக்காரணம் அதில் துயரத்தில் இருந்தவர்கள் மீதான அக்கறை அல்ல. மேற்கத்திய எஜமானர்களுக்கு அதுதான் பிடிக்கும் என்பதால் அப்படிப் பேசினார்.. இந்திய கிராமங்களுக்குத் தேவையான தொழில்நுட்பமென்று யோசித்திருந்தால் முதன் முதலில் அத்தனை வீடுகளுக்கும் ஃபிளஷ் அவுட் டாய்லெட் என்பதுதான் அவருக்குத் தோன்றியிருக்கும். தோட்டி ஜாதியில் பிறந்த ஒருவர் முதல்வராகியிருந்தாலோ பண்டிட் நேரு தோட்டி ஜாதியில் பிறந்திருந்தாலோ அல்லது ஒரு காந்தியவாதி பிரதமராகியிருந்தாலோ அதைத்தான் செய்திருப்பார்.. இத்தனைக்கும் காங்கிரஸின் கோட்டையான ரேபெரேலியும் அமேதியும் உத்தரபிரதேசத்தில்தான் இருக்கின்றன.



அரசியல் சாசனத்தை அழுத்தமாக எழுதிய அம்பேத்கரும் சம வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நாட்டில் சகோதரத்துவமும் சமத்துவமும் தானாக ஏற்பட்டு தலித்களின் இழிநிலை தானாக மாறிவிடும் என்று பேசாமல் இருந்துவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஒன்று வலுவாக உருவான பூமியும் அதுதான். அவர்களும் அந்த அவலத்தைப் போக்கியிருக்கவில்லை.

சாதி வெறியை எதிர்த்து போராடிக் கொண்டே வரும் திராவிடர் பூமியில் கூட தலித் கட்சிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருந்திருக்கவில்லை. 20 சதவிகித தலித்களின் பிரதிநிதியான திருமா சட்டசபைத்தேர்தலில் குறைந்தது 50 சீட்டாவது தரவேண்டும் என்று கேட்கும் தார்மிக வலுகொண்டவர். ஆனால், அவர் கூட 5-10 சீட் என பிறர் சாப்பிட்டு புறக்கடையில் போடும் எச்சில் இலையைப் பொறுக்குவதுபோல் திராவிட ஆண்டைகள் எறிவதை எடுத்துக்கொண்டு திருப்திப்பட்டுத்தான் வந்திருக்கிறார். ஆனால், உத்தரபிரதேசத்தில் ஒரு தலித் அதுவும் தலித் பெண் முதல்வராகவே ஆகியிருக்கிறார். அதன் பிறகும் மனித மலத்தை மனிதர் அள்ளுவது முடிவுக்கு வந்திருக்கவில்லை.

கம்யூனிஸம், முதலாளித்துவம் என எல்லாமே எத்தனையோ வெற்றிகளைக் குவித்து விட்டிருக்கின்றன. எனினும் இன்னும் மனிதமலத்தை மனிதரே அள்ளுகிறார்.

மத மாற்றத்துக்கு மிகவும் அருமையான களம் என்ற நிலையிலும் கூட கிறிஸ்தவமோ இஸ்லாமோ இந்த அவலத்தைப் போக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள்  அந்தப்பக்கம் போகவில்லை என்பதால் இந்துத்துவர்களும் தோட்டித் தொழிலை சீர்திருத்த பெரிய அக்கறை காட்டவில்லை. இந்து சாம்ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் என முழங்கும் இந்துத்துவம் இன்று ஆட்சிப் பொறுப்புக்கே வந்துவிட்டிருக்கிறது. அயோத்தியில் ராமருக்கு ஆலயம் கட்டுவதில் காட்டும் அக்கறையில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட மனித மலத்தை மனிதரே அள்ளுவதைத் தடுப்பதில் காட்டவில்லை. இது ஒட்டு மொத்த இந்தியாவின் அவமானம்.

இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், நேருவியர்களில் ஆரம்பித்து இடதுசாரிகள். இடைநிலை சாதிகள். தலித்கள், ஒற்றை இறைத் திணிப்பு மதத்தினர் என அனைவருமே இந்தப் பிரச்னைக்கு மனுவே காரணம் என்று சொல்லித் தமது பொறூப்பைத் தட்டிக்கழித்துவருகிறார்கள். இத்தனைக்கும் மனுவின் காலத்தில் மனித மலத்தை மனிதர் அள்ளியிருக்கவில்லை. இத்தனை மோசமான சாக்கடைகள் இருந்திருக்கவில்லை. மருத்துவக் கழிவுகள், குப்பைகள் இருந்திருக்கவில்லை. ஒருவேளை அவர் காலத்தில் இவையெல்லாம் இருந்திருந்தால் குலத் தொழிலில் குறைந்தபட்சம் தோட்டிகளுக்காவது விலக்கு தந்திருப்பார். சுமார் 70 ஆண்டுகளாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்துவருபவர்கள் அனைவருமே 70 நாட்களில் தீர்த்திருக்க முடிந்த இந்தப் பிரச்னைக்கு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனுவைக் குற்றம்சாட்டுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்.

ஃபிள்ஷ் அவுட் டாய்லெட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை உலகம் முழுவதிலுமே மனித மலத்தை மனிதர்களே அள்ளியிருகிறார்கள் என்பது உண்மைதான் ஆனால், இன்று உலகில் எங்குமே அந்தக் கேவலம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டிருக்கிறது. ஆனால், இந்தியா அப்படிப் பெருமைப்பட முடியவில்லை. 
முன்பைவிட வெகுவாகக் குறைந்திருக்கிறது என்ற வாதத்துக்கு இடமே கிடையாது. ஒரே ஒரு நபர் தலையில் மலக்கூடை இருந்தாலும் அது அவமானத்துக்குரியதே. அதை ஜோக்கர் எடுத்துக்கொண்டு அம்பலப்படுத்தியிருக்கவேண்டும்.

தமிழகத்தில் கக்கூஸ் இடிந்ததால் தன் குழந்தையையும் மனைவியையும் இழக்கும் நாயகன் ஊர் ஊராக பைத்தியம் போல் அலைகிறான். ஒருகட்டத்தில் உத்தரபிரதேசம் வருகிறான். அங்கு மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகிறான். நாம் காலைக் கடன்கழிக்க ஒரு மறைவிடம் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டோம். இங்கோ ஒரு மனிதனுடைய தலையையே கழிப்பிடமாக ஆக்கும் கொடூரம்  இன்னும் நடக்கிறதே என்று ஆத்திரப்படுகிறான்.

இந்த இடத்தில் கக்கூஸ், மனிதக் கழிவு போன்ற அம்சங்களை கொஞ்சம் அழுத்தமாக சித்திரிக்கும் கடமையை இயக்குநர் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும். நாயக நாயகியை தோட்டி ஜாதியினராகச் சித்திரிப்பது படத்துக்குக் கூடுதல் கனத்தைத் தரும். நாயகியின் அப்பா, ‘என் பொண்ணு கல்யாணமே ஆகாம செத்தாலும் பரவாயில்லை... ஒரு தோட்டிக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன் என்கிறார். ஐயர்மாரும் ஆண்டைமாரும் அவனுங்க வளக்கற பசுவோடயும் காளையோடவும் மூஞ்சில முழிப்பானுங்க... நாம அவனுங்க பேண்டு வைக்கற பீயிலதான் முழிக்கணும்.

ஒவ்வொருத்தரும் எப்பாடா விடியும்... என்னென்னா வேலையெல்லாம் செய்யலாம்னு ஆசை ஆசையா படுத்துத் தூங்குவானுங்க... நாம மட்டும்தான் ஐய்யய்யோ இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடுமேன்னு பதறிக்கிட்டே தூங்காமத் தவிக்க வேண்டி வந்திருச்சி... எல்லாரும் வெளிச்சத்தைத்தான் விரும்புவாங்க... இருட்டை விரும்பற மனுஷனைப் பாத்திருக்கியா... இருட்டுலயே வாழ்ந்து இருட்டுலயே செத்துப் பொயிடணும்னு நினைக்கறவனைப் பாத்திருக்கியா... அன்னிக்குப் பீ... இன்னிக்கு சாக்கடை... நல்ல முன்னேற்றம்தான்... இந்த கஷ்டத்தை என் மக இனியும் படக்கூடாது. ஒரு தோட்டிக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்.  

அப்படின்னா வேற யாரு கட்டிப்பாங்க என்று நாயகன் கேட்கவே, பிறந்தது தோட்டி சாதியில இருந்தாலும் அந்த வேலையைப் பாக்காத ஒருத்தனைத்தான் மருமகனா ஏத்துப்பேன். தனியார் வேலைலயோ சொந்தமா வேலை பார்த்தாலோ கட்டிக்கொடுக்கமாட்டேன். அரசாங்க வேலைல இருந்தாத்தான் அதை மாத்திக்காம இருப்பான். அதனால அரசாங்க வேலைல இருக்கறவனைத்தான் கட்டி வைப்பேன் என்கிறார்.
தனது இடதுசாரித் தோழரின் செல்வாக்கைப் பயன்படுத்தி நாயகன் ரயில்வேயில் வேலையில் சேருகிறான்.



ஒருநாள் அவனைப் பார்க்க வருங்கால மாமனாரும் மாமியாரும் மச்சினியும் நாயகியும் ஆர்வத்துடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். நாயகன் ஷெட்டில் நிற்கும் வண்டியில் இருக்கிறான் என்று சொல்கிறார்கள். குடும்பத்தினர் அனைவரும்  சிரிப்பும் கும்மாளமுமாக அங்கு செல்கிறார்கள். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கும் இவர்களைப் பார்த்ததும் நாயகனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. சட்டென்று பெட்டிக்குள் ஒளிந்துகொள்கிறான். அதைப் பார்த்துவிடும் மச்சினியும் நாயகியும் ஓடிச் சென்று ரயிலில் ஏறி இருண்ட பெட்டியில் ஒவ்வொரு விளக்கையாகப் போட்டபடியே அவனைத் தேடிச் செல்கிறார்கள்.

மாமனாரும் மாமியாரும் சின்னஞ்சிறுசுகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்தபடியே வெளியில் இருந்தபடியே அதோ ஓடறான்.. பிடி பிடி என்று உற்சாகப்படுத்துகிறார்கள். நாயகன் இருளில் பெட்டி பெட்டியாக ஓடிச் செல்கிறான். நாயகியும் மச்சினியும் சிரித்துப் பேசியபடியே ஓடி வருகிறார்கள். கடைசிப் பெட்டி வந்து சேருகிறது. இனியும் தப்பிக்க முடியாதென்று கழிப்பறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொள்கிறான். நாயகி வெளியில் இருந்தபடியே தட்டுகிறாள்.

இவர்கள் சத்தம் போடுவதைக் கேட்டு ரயில்வே காவலர் விரைந்துவருகிறார். உள்ளே நாயகன் கதைவைப் பூட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் யார் என்று தெரியாமல் வெளியே வந்துவிடச் சொல்லி அதட்டுகிறான். நாயகன் வேறு வழியில்லாமல் கதவின் தாழ்ப்பாளை விலக்குகிறான்... கதவு மெள்ளத் திறக்கிறது. உள்ளே நாயகன் துப்புரவுப் பணியாளரின் சீருடையில் கையில் விளக்கமாறும் வாளியுமாக நின்றுகொண்டிருக்கிறான். நாயகிக்கும் மச்சினிக்கும் தூக்கிவாரிப்போடுகிறது. நாயகி என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கைவைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்துவிடுகிறாள்.

வருங்கால மாமனாரும் மாமியாரும் என்ன என்று புரியாமல் பெட்டியில் ஏறிப் பார்க்கிறார்கள். நாயகன் அவமானத்தில் கூனிக் குறுகி நிற்கிறான். மாமனாருக்கு அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வருகிறது. அந்தத் தாயோளி மத்தவங்களுக்கு சந்தனக் கையால தலை எழுத்தை எழுதிட்டு நமக்கு பீ கையால எழுதியிருக்கான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதை அழிக்க முடியாதா... என்று கதறுகிறார். வேடிக்கை பார்க்கும் காவலரைப் பார்த்து காறி உமிழ்ந்தபடியே நீங்க பேண்டதை நீங்களே கழுவ வேண்டியதுதானடா என்று சீறுகிறார். நாயகன் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவர்கள் நடக்க நடக்க நீண்டு கொண்டே செல்கிறது இருண்ட ஃபிளாட்ஃபார்ம்.

உத்தர பிரதேசத்தில் இன்னொரு காட்சி. வயதான பிராமணர் அதிகாலையில் எழுந்து தன் பேரனையும் அழைத்துக்கொண்டு நதியில் நீராடச் செல்கிறார். நதிக்கரையோரமாகவும் அருகில் இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கியும் பெண்களும் ஆண்களும் சாரை சாரையாகப் போகிறார்கள். அவர்களைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தபடியே பிராமணர் நதிக்கரையில் இறங்குகிறார்.
யார் தாத்தா இவாள்லாம். குளிக்க வராம நேரா காட்டுக்குள்ள ஏன் போறா..?

சிரித்தபடியே, அவாள்லாம் கொல்லைக்குப் போறா..

ஏன் ஆத்துல போலாமே. காட்டுக்கு ஏன் போறா..? அங்கெல்லாம் ஒரே அசிங்கமா ஆயிடுமே.

காட்டுல போய் ஆய்ப்போனா நாய், பன்னில்லாம் அதைச் சாப்பிட்டுட்டு போயிடும். அசிங்கமால்லாம் ஆகாது.

அப்போ நாமளும் அவாள மாதிரி காட்டுல போய் ஆய் போலாமே. ஆத்துல ஏன் போறோம்?

ஏன்னா நாமள்ளாம் உசந்தவா. அவாள்லாம் தாழ்ந்தவா...

எப்படித் தாத்தா... பன்னியும் நாயும் வந்து போற இடத்துல ஆய்ப்போறதுதானே சரி... நாம போய் வைக்கற ஆயை எல்லாம் ஒரு மனுஷன வரச் சொல்லி தலைல அள்ளிண்டு போக வைக்கறது தப்பில்லையா... நம்மளவிட உண்மையிலயே அவாதானே உசந்தவா...

பிராமணர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

சிறிது சுதாரித்துகொண்டு, நம்ம ஆத்து பொம்மனாட்டியெல்லாம் காட்டுல மேட்டுல அலைய வேண்டாமேன்னுதான் ஆத்துக்குப் பின்னாலயே கட்டி வெச்சிருக்கோம்.

நம்ம ஆத்துப் பொம்மனாட்டிகள் மேல இருந்த அக்கறைல கொஞ்சமாவது அதைத் தூக்கிண்டு போக வர்றவா மேல நாம காட்டியிருக்கலாமே தாத்தா.

பெருமூச்சு விட்டபடியே, காட்டியிருக்கலாம்தான். என்ன பண்றது... யார் யார் என்ன செய்யணும்னு அந்த பகவான் எழுதி வெச்சிருக்கான். அதை மாத்த யாரால முடியும்?

அவா நாலைஞ்சு பன்னியையும் நாயையும் நம்ம ஆத்துக்குக் கொண்டுவந்து சுத்தம் பண்ணியிருக்கலேமே...

தாத்தா முகம் மலர்ந்து, ஆமாம் அதைச் செய்திருக்கலாமோல்லியோ... அவாளுக்கு மூளை கிடையாது. அதான் கஷ்டப்படறா.

அவாளுக்குத்தான் மூளை இல்லை... நமக்கு உண்டோல்லியோ. நாம சொல்லித் தந்திருக்கலாமே... அந்த இதயம் நமக்கு இல்லாம போச்சே... அது தப்பில்லையா..?

ஆமாண்டா குழந்தை, சரியாச் சொன்னாய்... கீழ இருந்தவாளுக்கு தங்களோட கஷ்டத்தைப் போக்கிக்கற மூளை இல்லை... மேல இருந்தவாளுக்கு அவாளோட கஷ்டத்தைப் போக்கற இதயம் இல்லை... நாம சில விஷயங்கள்ல ரொம்பப் பெரிய தப்பு பண்ணிண்டிருக்கோம். பகவான்தான் நம்ம எல்லாரையும் கரையேத்தணும் என்று சொல்லியபடியே நதிநீரில் முங்கி எழுகிறார். கரையில் நிற்கும் குழந்தைக்குப் பின்னால் இருக்கும் வானில் உதிக்கும் புதிய சூரியனின் கதிர்கள் இருண்ட நதியை ஒளி பெறச் செய்கிறது.
*


சுலப் இண்டர்நெஷனலுக்குத் தகவல் தெரிவித்தால் கழிப்பறை கட்டிக் கொடுத்து மலத்திலிருந்து உரமோ எரிவாயுவோ தயாரிக்கக் கற்றுக் கொடுக்கவும் செய்வார்கள் என்ற தீர்வைப் படத்தில் காட்டினால் அது வெறும் டாக்குமெண்டரியாகிப் போய்விடும். எனவே, தீர்க்க முடியாத பிரச்னையாக அது நீடிப்பதாக வைத்துக்கொண்டுதான் கதை செய்தாகவேண்டியிருக்கும்.

உத்தரபிரதேச தோட்டிகளின் வேதனையைப் பார்க்கும் ஜோக்கர் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிடுகிறான். ஊருக்கு ஒரு பொதுக் கழிப்பறை கட்டித் தரச் சொல்லித் தன் போராட்டத்தை ஆரம்பிக்கிறான். மெத்தனமாக நடந்துகொள்ளும் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் ஆமையை அவிழ்த்துவிடுகிறான். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பை அவிழ்த்துவிடுகிறான். சுகாதார அமைச்சர் வீட்டு முன்னால் மலக்கூடையைக் கொட்டிப் போராடுகிறான். சேற்றில் குளித்தல், ரோட்டில் தவழ்ந்து செல்லுதல், தீ வைத்துக்கொள்ளுதல் என எல்லா போராட்டங்களையும் பொதுக் கழிப்பிடம் என்ற ஒற்றை இலக்கை முன்வைத்துப் போராடுகிறான்.

அவனுடைய போராட்டம் அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்புப் போர் போல் மாநில அளவில், தேச அளவில், உலக அளவில் என பெரிதாகிறது.  இந்தியா மிளிர்கிறது என்ற பதாகைகளில் எல்லாம் இந்தியா நாறுகிறது என்று எழுதுகிறார். இடதுசாரிகள், எதிர்கட்சிகள், தலித் அமைப்புகள், ஊடகங்கள் எல்லாம் பெரும் ஆதரவு தருகின்றன. புண்ணிய சாக்கடை நதியில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு போராட அனைவரையும் அழைக்கிறான். அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

ஜோக்கரின் லட்சியம் சரிதான். ஆனால், இயங்கியல் பொருள் முதல் வாதமும் கருத்தியல் எதிர் பிரதிவாதமும் கொள்ளும் முரணியக்கத்தில் உருவாகும் நவீன பூர்ஷ்வா ஆதிக்க மையங்களை அரவணைத்தபடியே எதிர்க்கவும் எதிர்த்தபடியே அரவணைக்கவுமான வழிமுறைகளைத் தேடுவதே நம் முன்னால் இருக்கும் பெரும் சவால் என்பதை நாம் புரிந்துகொளும்போது இந்தப் போராட்ட முறையின் போதாமையும் நமக்குப் புரியவரும் என்று இடாலியன் செண்ட் மணம் கமழும் கம்யூனிஸ்ட் பிராமணர்கள் (இரட்டுற மொழிதல்?!) மேற்கு வங்காளத்திலேயே உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

தெய்வத்திண்ட சொந்த தேசத்து தோழர்கள் அடிபொளி தெறி முழக்கங்கள் தயாரித்து அனுப்பி தமது ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். அறிவுஜீவிப் போராளிகள் அன்று சம்பளப் பட்டுவாடா தினமாகையால் தங்களால் பெருந்திரளில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து ஆன் லைன் ஆதரவுக் கடிதத்தில் ஒருவர் விடாமல் கையெழுத்து போட்டு தமது பேராதரவைத் தருகிறார்கள்.

அல்ட்ரா மாடர்ன் இந்து ராஷ்டிர, ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர சபதமெடுத்த இந்துத்துவர்கள் அன்றைய தினம் அமாவாசையாகிப்போய்விட்டதால் அடுத்த போராட்டத்தில் கட்டாயம் பங்குபெறுவோம் என்றும் பீமாராவ்ஜியின் வழியில் தமது பகுஜன் விகாஸ் விஷால் விலாஷ் யோஜ்னா தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று உறுதி தெரிவிக்கின்றனர்.

ஊடகத்தினர் ஹெலிகாப்டரில் இருந்தபடியே அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலை தூர கேமராவில் இருந்து இந்த அரிய காட்சியைப் படம் பிடித்து உலகெங்கும் கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்கள். வானம் ஹெலிகாப்டர்களால் நிரம்புகிறது. கை நகத்தில் மிகப் பெரிய அடிபட்டுவிட்டதாகத் தான் கனவு கண்டதால் எழுந்து நிற்கவேமுடியவில்லை என்று திராவிட, தமிழின, தலித்திய சிறுபான்மை போராளியான கருணாநிதி போராட்டத்தில் இருந்து தனக்கு கருணையுடன் விலக்கு தரும்படிக் கேட்டுக்கொள்கிறார். ஈ.வே.ராவின் பாதையில் உலகம் தன்னைப் போலவே நடந்து போராட்டம் வெற்றி பெற தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்.

தியாக தீபம், எளிமையின் இமயம், காங்கிரஸின் நிரந்தர தலைவர் அன்னை சோனியா தனது உள் மனதின் உத்தரவுக்காக காத்துக்கொண்டு இருப்பதால் கட்சித்தலைவர்களை அனுப்பிவைப்பதாகத் தெரிவிக்கிறார். காங்கிரஸ் பவனில் நீ போயேன் நீ போயேன் என அனைத்து தலைவர்களும் உலக அதிசயமாக ஏக மனதுடன் ஜனநாயக மாண்பு மிளிர நள்ளிரவு தாண்டியும் (வாகான தலையணைகளில் சாய்ந்துகொண்டு)  தீவிரமாக கலந்தாலோசிக்கிறார்கள்.

ஜோக்கரும் ஜெயகாந்தன் தாத்தாவும் இளம் போராளி இசையும் சாக்கடை நதியில் இறங்குகிறார்கள். துரதிஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக அவர்கள் இறங்கிய இடம் புதைமணல் பகுதியாக இருக்கிறது. மெள்ள மெள்ள அவர்களுடைய உடல் சாக்கடை நதிக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது. பெருந்திரளாகக் கூடிய இளைய தலைமுறை பல்வேறு போஸ்களில் செல்ஃபி எடுத்தபடி தமது உற்சாக ஆதரவை ஜோக்கருக்குத் தருகிறது.
ஒட்டுமொத்த சமூகம் வேடிக்கை பார்க்க ஜோக்கர்கள் மெள்ள மூழ்குகிறார்கள். இசை நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து அபயக்குரல் எழுப்பி காப்பாற்றச் சொல்வோம் என்று சொல்கிறார்.

இப்படியான சமூகத்தில் நாம் வாழ்ந்து எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. நம் மரணமாவது இவர்களுடைய தடித்த தோலில் சொரணையை ஏற்படுத்தட்டும் என்று ஜோக்கர் சொல்கிறார்.

ஜெயகாந்தனும் அதுதான் சரி என்கிறார். மார்பளவுக்கு உடல் புதைகிறது. வேடிக்கை பார்க்கும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

நாம யாருக்காகப் போராடறோமோ அவங்களே நம்மள ஜோக்கரா நினைக்கறாங்களே... கக்கூஸ் இடிஞ்சு மனைவி செத்துபோனா கட்டின கொத்தனாரையும் காண்டிராக்டரையும் பஞ்சாயத்து தலைவரையும் எம்.எல்.ஏயையும் பறந்து பறந்து அடிச்சுக் கொல்ற மாதிரி நடிக்கறவனை இந்த உலகம் கொண்டாடும். அவன் பின்னால ஆட்டுமந்தைமாதிரி கூடி நிக்கும். அவன் கைல ஆட்சியைக் கொடுக்கும். அவன் நாளைக்கு வர்றேன்... நாளன்னிக்கு வர்றேன்னு ஃபிலிம் காட்டினா அப்பயும் அவன் வீட்டு வாசல்ல பழியாக் காத்துக்கிடக்கும். நம்மள மாதிரி உண்மையா தெருல இறங்கிப் போராடறவங்களை கோமாளியாப் பாத்து சிரிக்கும்.  நாம சமூகத்தோட கண்ணாடி மாதிரி... கண்ணாடி முன்னால நின்னு சிரிக்கறவன், அதுவும் கண்ணாடில தெரியற தன்னோட பிம்பத்தைப் பார்த்துச் சிரிக்கறவனுக்கு, அந்தக் கண்ணாடியில்லை... தான் தான் ஜோக்கர்ங்கறது கடைசிவரை புரியறதே இல்லை என்று சொல்லி வருந்துகிறார்.

நாம ஜெயிச்சிருந்தா இந்த மக்கள் நம்ம பின்னால வந்துநின்னிருப்பாங்க இல்லையா என்கிறாள் இசை ஏக்கமாக.

அப்படி இல்லைம்மா... மக்கள் பின்னால வந்து நின்னாத்தான் நாம் ஜெயிக்க முடியும். சரியான ஆள் பின்னால போய் நின்னாத்தான் ரெண்டுபேருமே ஜெயிக்க முடியும். கதவுதான் திறந்து வழி கொடுக்கும். சுவரு வழிகொடுக்காதும்மா... நாம கதவு... இவனுங்க கல் சுவத்துக்கு முன்னால  போல் காலமெல்லாம் காத்துக்கிட்டு நிக்கறாங்க. அவங்க நம்மளைப் பார்த்துச் சிரிக்கும்போது கோபம் வரலைம்மா... பரிதாபம்தான் வருது... சரி, நீ வேணும்னா போய்க்கோம்மா... எங்களுக்கு இனி ஒண்ணும் இல்லை வாழ வேண்டிய வயசு. நீ வாழணும் என்று ஜோக்கர் இசையிடம் சொல்கிறார்.

இவங்க மத்தியில வாழ்றதைவிட சாகறதே மேல் தோழர் என்கிறாள் கண்களில் நீர் கோக்க.

மூவரும் கைகளைக் கோர்த்துக்கொள்கிறார்கள். கழுத்தளவுக்கு புதைகிறார்கள். கூடியிருப்பவர்களுக்கு மெள்ள விபரீதம் புரிகிறது. அனைவருடைய சத்தமும் மெதுவாக அடங்குகிறது. மூக்கு வரை மூழ்குகிறார்கள். மூவரும் தமது கைகளைக் கோர்த்தபடியே மேலே தூக்குகிறார்கள். கண்கள் மூழ்குகின்றன. மேலே உயர்ந்த கைகளின் உறுதி கூடுகிறது. தலை வரை சாக்கடை நதிக்குள் மூழ்குகிறார்கள். நீருக்கு மேலே தென்படும் கரங்களில் உயிர் பிரியும் வலியும் பிடிவாதமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் உறுதியும் தென்படுகின்றன. கைகோர்த்து நின்ற கரங்கள், ஏன் எங்களைக் கைவிட்டீர் ஆண்டவரே என்று வான் பார்த்துக் கதறும் வகையில் மெள்ளப் பிரிந்து உறைகின்றன. 

No comments:

Post a Comment