Tuesday 16 August 2016

குஜராத் ‘தலித் எழுச்சி’யும் கார்ப்பரேட் கோசாலைகளும்


குஜராத்தில் இருக்கும் யுனா - பகுதியில் தலித்களில் ஒரு பிரிவினர் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். மாட்டுத் தோல் நீக்கும் தொழிலில் இனியும் ஈடுபடமாட்டோம்... எங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தரவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடியிருக்கிறார்கள். ரோஹித் வெமுலாவின் தாய், ஜே.என்.யு. கன்னையா குமார் எனப் பலரும் பங்குபெற்ற போராட்டம் ஆகஸ்ட் 15 அன்று நடந்திருக்கிறது. முஸ்லிம் தலித் பாய் பாய் என்ற முழக்கங்களுடன் பெருந்திரளான முஸ்லிம்களும் இந்த தலித் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்தில் சில தலித்கள் இறந்த மாட்டின் தோலை உரித்தற்காகத் தாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து குஜராத் ‘தலித் எழுச்சி’ ஆரம்பித்திருக்கிறது.



இந்த தலித் - முஸ்லிம் கூட்டு பல வகைகளில் அபாயகரமானது. உண்மையில் இது தலித் - முஸ்லிம் கூட்டு அல்ல. இஸ்லாமிய தீவிரவாதம் தலித் அடிப்படைவாதத்தைத் தனது முகமூடியாகப் பயன்படுத்துகிறது. தலித் அடிப்படைவாதம் எளிய தலித் முகத்தைத் தனது முகமூடியைப் பயன்படுத்திக்கொள்கிறது. இந்து மத அழிப்பை தலித் அடிப்படைவதிகள் முன்வைக்கிறார்கள். இந்திய உடைப்பை இஸ்லாமிய தீவிரவாதிகள் முன்வைக்கிறார்கள். இந்து-இந்திய அழிப்பை எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற அரசியல் கணக்குகளின்படி இஸ்லாமிய, தலித் அடிப்படைவாதிகள் முன்னெடுக்கிறார்கள்.

உண்மையில் தலித் அடிப்படைவாதம் என்பது இதுவரை கிறிஸ்தவ மிஷநரிகளால்தான் இதுவரை பட்டை தீட்டப்பட்டுவந்தது. இன்று இஸ்லாமிய தீவிரவாதத்துடன் கைகோக்க அனுப்பிவைத்திருக்கிறது. ஆக, இந்து இந்திய சக்திகளும் தலித் இஸ்லாமிய சக்திகளும் தமக்குள் சண்டையிட்டு மடிந்தால் தேவனின் சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மலர அது வழிவகுக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எது எப்படியானாலும் இந்த அபாயகரமான முன்னெடுப்புகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்.  ஆனால், தலித்-இஸ்லாமிய அடிப்படைவாதக் கூட்டை எதிர்க்கும் நோக்கில் மேல்சாதி - இந்து/இந்தியத் தேசிய அடிப்படைவாதக் கூட்டு உருவாகிவிடக்கூடாது.. தீயை அணைக்க நீரைப் பயன்படுத்தவேண்டும். அதைவிட பலமான தீயையோ காற்றையோ பயன்படுத்தினால் அது தீயை அணைக்காது. மேலும் பரவவே செய்யும்.

இந்தப் பிரச்னையின் அடிநாதமான பசு அரசியலில் இருந்து ஆரம்பிப்போம். உலகில் விவசாயமும் மேய்ச்சலும் எல்லா இடங்களிலும் பிரதான தொழிலாக இருந்திருக்கின்றன என்றாலும் இந்தியாவைத்தவிர பசுக்கள் எங்குமே புனிதமாக மதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியாவில் பசு மட்டுமல்ல நதிகள், மரங்கள், நாக ராஜா, கஜமுகன், வானரராயன், பைரவர் போன்ற விலங்குகள் எனப் பலவும் புனிதமாக மதிக்கப்பட்டிருக்கின்றன. இந்துக்களுக்கு இன்பச்சுற்றுலாகூட கோவில்களுக்கான புனித யாத்திரைதான். இப்போதும் இந்த மதிப்பீடுகள் பெருமளவுக்கு மாறிவிடவில்லை. ஆனால், இந்த புனிதம் என்பது வெறும் சடங்காக சாரம் இழந்ததாக ஆகிவருகிறது. எல்லா நதியையும் கங்கையாக மதித்து வணங்கும் அதே இந்தியாவில் அந்த கங்கையையே அசுத்தமாக்கிவிட்டிருக்கிறோம். புண்ணிய க்ஷேத்ரங்கள் எல்லாம் குப்பைக்காடாக, மல மேடாக ஆகிக்கொண்டிருகின்றன.

இந்தச் சீரழிவுகள் சுமார் ஐம்பது ஆண்டுகளாக நடந்தவையே. அதற்கு முக்கிய காரணம் நகர்ப்புற, நவீன வாழ்க்கை. அது மரபில் இருந்து நம்மைப் பிரித்துவிட்டதாலும் நவீன வாழ்க்கையின் தொழில்நுட்பங்கள், விஞ்ஞான அணுகுமுறை, குடிமை மனோபாவம் நமக்கு இன்னும் முழுவதுமாக கிடைக்கப் பெறாததாலும் இந்த வருந்தத்தக்க நிலை உருவாகிவிட்டிருக்கிறது. அதோடு நமது மக்கள் தொகை மிக மிக அதிகம் என்பதால் நகரங்களும் சுற்றுலாமையங்களும் அந்தந்த நகராட்சி அமைப்புகளால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு அசுத்தமாகிவருகின்றன. இப்போது கங்கை ஓரளவுக்கு சீரமைக்கப்பட்டுவிட்டிருக்கிறது. எனினும் யமுனை, கூவம் என இன்னும் சரி செய்யப்படவேண்டிய நதிகள் ஏராளம்.



இந்து கோவில்களில் இருந்து கிடக்கும் வருவாய் அந்தந்த கோவிலையும் அதன் சுற்றுவட்டாரங்களையும் தூய்மையாக வைக்கப் பயன்படுத்தப்படவேண்டும். அன்னதானம் என்பது தூய்மைப் பணியை சிரமதானமாகச் செய்து முடிப்பவர்களுக்கு (முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு விதிவிலக்கு) தரப்படும் சம்பளம் என்று சிறிது மாற்றி அமைக்கப்படவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது ஆக்கப்பூர்வமான தூய்மை/சுகாதாரத் திட்டமாக மாற்றப்படவேண்டும். சுற்றுலா மையங்கள், கோவில்கள், குளங்கள், விழாக்கள் ஆகியவற்றை தூய்மையாகப் பராமரிக்க இந்த வேலை நாட்களையும் நபர்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இன்று இந்தத் திட்டத்துக்கு செலவிடப்படும் கோடிகளை ஒப்பிடும்போது அதன் மூலம் உருவாகும் நன்மை என்பது மிக மிகக் குறைவு. ஒரு சுற்றுலா மையத்தை தூய்மையாகப் பராமரிக்கிறீர்களென்றால் அந்த மையத்தின் வருவாயைப் பெருக்குகிறீர்கள் என்று அர்த்தம். அதன் வருமானம் அதிகரித்தால் பணியாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும். இது நேர்மையான சக்கரச் சுழற்சி.



முன்பு கிராமப் பஞ்சாயத்துகள் துடிப்புடன் இருந்ததால் ஒவ்வொரு கிராமமும் அதன் கோவில்களும் குளங்களும் இன்னபிற அம்சங்களும் அவர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டன. இன்று அதிகாரம் எங்கோ தொலைவில் தில்லியிலும் மாநகத் தலைமை மையங்களிலும் குவிந்து கிடக்கிறது. அதிகாரவர்க்கத்தின் ஊழல், அலட்சியம் ஆகியவற்றால் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட மக்களின் ஒருவித கையாலாகாத தன்மையாலும் விலகலாலும் நிலைமை மோசமாகிவருகிறது. மையத்தில் வலுவான அரசு உருவாவதென்பது நிதி/வரிச் சேகரிப்பு மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பின் மூலமாக பல பிரமாண்டமான, நல்ல விஷயங்கள் நடந்தேற வழி செய்திருக்கும் அதே நேரத்தில் இப்படியான விடுபடல்களும் போதாமைகளும் அதில் இருக்கத்தான் செய்கின்றன.

நதிச் சீரமைப்பு போலவே இந்திய சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் பசு பாதுகாப்பு.  மாமிசம் சாப்பிடுவது தவறென்றால் எல்லா உயிர்கள் மீதுமே கரிசனம் இருக்கவேண்டும். ஏன் பசுவுக்கு மட்டும் தனி முக்கியத்துவம் என்ற கேள்வி கேட்கப்படுவதுண்டு. உண்மையில் கொல்லாமையை முன்வைக்கும் புத்தரும் வள்ளுவரும் எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்றுதான் சொல்லவும் செய்கிறார்கள். பிராமணர்களும் அதையேதான் சொல்கிறார்கள். ஆனால், பசுவுக்கு மட்டும் பிராமணர்கள் கூடுதல் முக்கியத்துவம் ஏன் தருகிறார்களென்றால் அது ஒரு தாயைப்போல் பால் தருகிறது. அதனால் அது தாய்க்கு சமமாக மதிக்கப்பட்டு அதை கொல்லக்கூடாது என்று புனிதப்படுத்தப்பட்டது.



பசு அந்தப் பாலை நிச்சயம் விரும்பித் தந்திருக்கவில்லை. மனிதர் திருடித்தான் எடுத்துக்கொள்கிறார் என்றாலும் ஒரு குறைந்தபட்ச நன்றி உணர்வாக அதைக் கொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் பிராமணர்கள். அதை ஒட்டுமொத்த சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் செய்திருக்கிறது. கோவில் விழாக்களில் கோழி, ஆடு, பன்றி பலி கொடுக்கும் தலித்கள்கூட பசுவைப் பலி கொடுத்து எந்த விழாவையும் கொண்டாடுவதில்லை. அரசியல் மூளைச் சலவை செய்யப்படாத தலித்களுக்கு பசு மாமிசத்தை உண்பது குறித்து குற்ற உணர்ச்சி இருக்கவே செய்கிறது.  இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இருக்கும் தமிழகத்தில் அறுவடைப் பொங்கல் திருநாளில் பசுவை வணங்கும் பாரம்பரியம்தான் உண்டு. இந்தியாவில் வடகிழக்கு மற்றும் கேரள, வங்காளம் தவிர பிற மாநிலங்கள் அனைத்திலுமே பி.ஜே.பி.க்கு முன்பிருந்தே பசு கொலைக்கு எதிரான சட்டங்கள் வலுவாக உண்டு.


பவுத்தம்தான் முதலில் கொல்லாமையை முன்வைத்தது. வேதகாலத்தில் பிராமணர்கள் பசுவை  உண்டு வந்திருக்கிறார்கள் என்று பலவீனமான உதாரணங்களைக் கொண்டுவந்து நிறுத்துபவர்கள் குறைந்தபட்சம் புத்தர் சொன்ன பிறகாவது உயிர் கொலையை அவர்கள் விட்டுவிட்டார்களே. அதுபோல் ஏன் பிறர் நிறுத்தவில்லை என்ற கேள்விக்கு என்ன பதில்தான் சொல்லிவிடமுடியும். பிராமணர்கள் பசுவைப் புனிதம் என்று சொல்வதால் அதை மறுத்தே ஆகவேண்டும் என்று சொல்பவர்கள் கொல்லாமையை முன்வைத்த புத்தரையும் வள்ளுவரையும் மிதித்தபடியேதான் தமது அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

உண்மையில் பிராமணர்கள் பசுவை புனிதம் என்று சொல்வதை எதிர்ப்பதென்றால் பசு மட்டுமல்ல கோழியும் ஆடும் பன்றியுமே கூடப் புனிதமானதுதான் என்றுதான் வள்ளுவரையும் புத்தரையும் மதிப்பவர்கள் சொல்லவேண்டும். ஆனால், நேர்மாறாக பசுவுமே புனிதமல்ல என்று சொல்வதையே தங்கள் அரசியலாக முன்வைக்கிறார்கள். இது முழுக்கவே தவறு.



மேலும் புத்தர் முன்வைத்த கொல்லாமையை பவுத்த தேசங்கள் எதுவுமே பின்பற்றவில்லை. இந்து மதத் தாக்கம் மிகுதியாக இருக்கும் இந்தியாவில்தான் பசுக் கொலை மிகவும் குறைவாக இருக்கிறது. அதோடு பசு பாதுகாப்பு என்பதை பிராமணர்களுடைய மதிப்பீடு என்பதோடு நிறுத்தாமல் அதை ஆர்.எஸ்.எஸின் அரசியல் கொள்கையாகப் பார்க்கும் அசட்டுத்தனமும் இருக்கிறது. உண்மையில் அது இடைநிலை சாதிகளின் மதிப்பீடு. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் எல்லாவற்றையும் எதிர்ப்பதே முற்போக்கு என்று செயல்படுபவர்கள் பசு விஷயத்தில்(லும்) உண்மையில் இடைநிலை சாதிகளின் மதிப்பீடுகளோடுதான் மோதுகிறார்கள். இடைநிலை சாதிகளின் முக்கியமான கோட்டையான திராவிடத் தமிழகத்திலும் மாட்டுக்கறி மகிமை பற்றி எந்தவொரு திராவிடத் தலைவரும் பெரிய அளவில் இதுவரை பேசியதில்லை. அது இடைநிலை சாதிகளிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திவிடும் என்ற அச்சமே காரணம்.

மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் துணையோடு பசுக் கொலையை முன்னெடுப்பது மிகவும் அபாயகரமான செயல். இஸ்லாமியத் தீவிரவாதம் அல்லாவின் ராஜ்ஜியத்தைத் தவிர வேறு எதையும் ஏற்காது. அதற்கான எளிய, அண்மை உதாரணம் காஷ்மீர். உங்களுக்கு சாலை வசதி செய்து தர இந்தியா வேண்டும்... மின்சாரம் எடுத்துத்தர இந்தியா வேண்டும்... கல்வி தர இந்தியா வேண்டும்... ஆனால், நீங்கள் மட்டும் இந்தியாவுடன் முழுவதுமாக இணையமாட்டீர்களா என்று அம்பேத்கர் 1950களிலேயே கேட்டது எவ்வளவு தீர்கக் தரிசனமிக்க வார்த்தைகள். இன்று இருந்திருந்தால் உங்களை வெள்ளங்கள், பூகம்பங்களில் இருந்து காப்பாற்ற இந்திய ராணுவம் வேண்டும்... உங்களுக்கு கோடிக்கணக்கில் நிதிகளைக் கொட்டிக்கொடுக்க இந்தியா வேண்டும்... ஆனால் நீங்கள் இந்தியக் கொடியை எரிப்பீர்களா... என்று கேட்டிருப்பார். 

இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தில் இருப்பவரையும்விட ஒரு தனி நபருக்காக மத்திய அரசு செலவிடும் தொகை காஷ்மீருக்குத்தான் மிக மிக அதிகம். அப்படியான நிலையிலும் இந்தியாவே வெளியேறு என்று அவர்கள் சொல்வதன் ஒரே காரணம் இஸ்லாமிய அரசைத்தவிர வேறு எதையும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஏற்காது என்பதுதான். அப்படியான ஓர் அழிவு சக்தியுடன் தலித்கள் கைகோர்ப்பது தன் வீட்டுக்குத் தானே குண்டு வைத்துக்கொள்வதற்கு சமம். கிறிஸ்தவத்துடன் கை கோர்ப்பதும் தலித்களுக்கு அடையாள அழிப்பில் ஆரம்பித்து பல்வேறு பின்னடைவுகளையே தரும். நவீன காலகட்டத்துக்கு ஏற்ப தன்னைச் சீரமைத்துக்கொண்டுவரும் இந்து சமூகமே தலித்களின் இயல்பான விடுதலைக்கு வழிவகுத்துத் தரமுடியும். அதற்கு பசு விஷயத்தில் இடைநிலை சாதிகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதே சரி. முற்போக்கு மற்றும் மதவாத ஆசான்கள் ஆர்.எஸ்.எஸை எதிர்க்கும் வழி என்று சொல்லித் தூண்டிவிடும்போது, உண்மையில் அது இடைநிலை சாதியுடனான மோதலையே பெரிதாக்குகின்றன... எனவே, உங்கள் கரிசனத்துக்கு நன்றி என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்புவதே தலித் அடிப்படைவாதிகளுக்கு நல்லது.

பசு அரசியல் பற்றி அதன் கலாசார அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் இன்னொரு உண்மை புரியும். ஜே.சி.குமரப்பா பசு சார்ந்த பொருளாதாரத்தை மனித அமைதி வாழ்க்கைக்கான பொருளாதாரமாகப் பார்க்கிறார். பசு, காளை ஆகியவற்றைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுவந்தபோது மனிதன் வன்முறை குறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். கரியைக் கண்டுபிடித்த பிறகு உற்பத்தியும் போக்குவரத்து வசதிகளும் பெருகின. அது சந்தைக்கான போட்டியையும் வன்முறையையும் உருவாக்கியது. பெட்ரோல் கண்டுபிடிப்பு அந்தப் போட்டியை மேலும் வன்முறையானதாக்கியது.

மேலும் பசு பொருளாதார காலகட்டத்தில் நாம் பயன்படுத்திய சக்தி மூலங்கள் நிரந்தரமானவை. கரி, பெட்ரோல் எல்லாம் தற்காலிகமானவை. எடுக்க எடுக்கக் குறைபவை.  எனவே தன்னிறைவான எளிய பசு பொருளாதாரமே நிம்மதியான மனித வாழ்க்கைக்கு உகந்தது என்கிறார் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் புறக்கணிக்கப்பட்ட பொருளாதார மேதையான ஜே.சி.குமரப்பா. ஆனால், அந்தப் பசு பொருளாதார காலகட்டத்தில் தலித் மக்களின் நிலை மிகவும் வேதனை நிறைந்ததாக இருந்தது என்று கருதுபவர்கள் புதிய கரி-பெட்ரோல் காலகட்ட வாழ்க்கையை தலித் விடுதலைக்கான காலகட்டமாகச் சொல்லமுடியாது. சாதிய இழிவைவிட வர்க்க இழிவு மேலானதுதான் என்றாலும் இரண்டுவகை இழிவும் இல்லாததைத்தானே உண்மையான மீட்சியாகச் சொல்லமுடியும்.

பசு விஷயத்தில் இரண்டு பிரச்னைகள் முன்னால் இருக்கின்றன... ஒன்று பசுவை உண்ணுதல், இரண்டாவது இறக்கும் பசுக்களை அப்புறப்படுத்துதல். இந்த இரண்டுக்குமே ஒரே எளிய தீர்வு கோசாலைகளை அமைத்து பசுக்களைப் பராமரித்தலே.


நவீன மனம் கோசாலைகளுக்குப் பதிலாக கோ-கொலைசாலைகளை அதிகம் திறக்கவேண்டும் என்று சொல்லக்கூடும். பல நூற்றாண்டுகளாக புனிதமாக மதிக்கப்பட்டுவரும் நம்பிக்கை அப்படி எளிதில் அழிக்கப்பட்டுவிடவேண்டாம். பொதுவாக நம் முன் ஒரு பிரச்னை வரும்போது இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் (Win-Win Solution) வழிமுறைகளை முன்னெடுப்பதே புத்திசாலித்தனம். பாம்பும் சாகணும்... தடியும் உடையக்கூடாது.

விவசாயம், மேய்ச்சல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடாத நாவிதர், வண்ணார், வெட்டியார், தோட்டி, சக்கிலியர் போன்ற தலித் சாதிகளே மாட்டுக்கறியை அதிகமும் உண்டுவந்திருக்கிறார்கள். விவசாயத்தோடு தொடர்புடைய பள்ளர்கள் போல் பலர் தலித்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் மாட்டுக்கறி உண்பதில்லை. இஸ்லாம், கிறிஸ்தவத்துக்கு மாறிய இந்துக்கள் மாட்டுக்கறி உண்பதுண்டு.

மாட்டு வகைகளின் இறைச்சி விலை குறைவாக இருப்பதால் வறுமையிலும் சாதி அடுக்கின் கடைசிப் படிகளிலும் இருப்பவர்களுக்கு மாட்டு இறைச்சி எளிதில் வாங்க முடிந்த உணவாக இருக்கிறது. எனவே, மாட்டுக்கறி கூடாது என்று சொல்வதென்றால், அதைவிடக் குறைந்த விலையில் பிற மாமிசங்கள் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு.

சைவ உணவா... அசைவ உணவா எது சிறந்தது என்று கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம். மனிதருக்கு இறைச்சியைக் குத்திக் கிழிக்க கூர் நகங்களும் கோரைப் பல்லும் கிடையாது. மாமிசத்தைப் பச்சையாகச் சாப்பிட முடியாது போன்றவையெல்லாம் மனிதனை தாவர பட்சிணியாகவே இயற்கை படைத்திருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகின்றன. ஆதி மனிதன் வேட்டையாடுவதற்கு முன்பாக காய் கனிகளைப் பொறுக்கித் தின்பவனாகவே பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். தீ கண்டுபிடிக்கப்பட்ட பிறகே மாமிசத்துக்கு நகர்ந்திருக்கிறான்.

இவையெல்லாவற்றையும்விட கேவலம் ருசிக்காக ஓர் உயிரைக் கொல்லவேண்டுமா. அதுவும் எளிய விலங்கு ஒன்றைக் கொல்லவேண்டுமா என்ற கேள்வியை ஒருவர் கேட்டுப் பார்த்தாலே போதும். மாமிசத்தைச் சாப்பிட்டே தீருவோம் என்று சொல்லும் போராளிகள் அனைவருமே தம்மை எளிய மக்களின் பிரதிநிதிகளாகவே சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களைவிட எளிய விலங்குகளைக் கொல்வதை நியாயம் என்றும் சொல்கிறார்கள். இது கொடூரமான முரண். உண்மையில் அவர்கள் சிங்கம், புலி என மிருகங்களில் ஆதிக்கசக்திகளான இருக்கும் வன் மிருகங்களைத்தான் கொன்று தின்னவேண்டும். பசுவையும் கோழியையும் ஆட்டையும் தமது அரசியல் சார்ந்து காப்பாற்றவே வேண்டும். ஆனால், பிராமணர்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே அசைவ உணவை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.



இதில் இன்னொரு விஷயம்... மாமிசத்துக்கு தனியான, விசேஷமான சுவையே கிடையாது. அதில் சேர்க்கப்படும் மிளகாய், தேங்காய், எண்ணெய், பிற மசாலாக்கள் இவையே மாமிசத்துக்கு சுவையைத் தருகின்றன. எனவே, சுவைக்கு அடிமையான ஒருவர் மாமிசத்தை வெளியே எடுத்து வீசிவிட்டு காய்களையோ மீல்மேக்கர்களையோ அந்த மசாலாவுடன் சேர்த்துச் சாப்பிட்டாலும் நல்ல ருசி கிடைக்கத்தான் செய்யும். எனவே, ஓர் எளிய உயிரைக் கொன்றுதான் மனிதன் தன் நாக்கைத் திருப்திப்படுத்தவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

ஒரு மனிதனுக்கு, தான் எதை உண்ணவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்தரம் உண்டு என்று சொல்பவர்கள் நம்மைப் போலவே இந்த உலகில் வாழ உரிமையுடைய இன்னொரு எளிய உயிரின் சுதந்தரத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும். மனிதரை மட்டுமே மையமாக வைத்து சிந்திக்கும் அராஜகம் கூடாது. மேல் சாதியினரும் மேல் வர்க்கத்தினரும் தம்மை மட்டுமே மையமாக வைத்து சிந்திக்கும் அராஜகத்துக்குச் சற்றும் குறையாதது அது.

உண்ணும் உணவை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் பிராமண மனோபாவம் தவறென்று சொல்வதுண்டு. ஆனால், அணில், காகம் போன்றவற்றை உண்ணும் நரிக்குறவர் போன்ற நாடோடி ஜாதியினரையும் பன்றிக் கறி சாப்பிடும் தலித்களையும் மாட்டுக்கறி உண்ணும் தலித் பிரிவினர் அந்தக் காரணத்துக்காகவே  இழிவாகப் பார்க்கிறார்கள். ஆடு, கோழி சாப்பிடும் சூத்திரர்கள் பிற வகைக் கறி சாப்பிடுபவர்களை அதைச் சொல்லியே இழிவாகப் பார்க்கிறார்கள் என்ற உண்மையை யோசித்துப் பார்த்தால் உணவின் அடிப்படையிலான சமூக அந்தஸ்து வெறும் பிராமணிய உருவாக்கம் மட்டுமே அல்ல என்ற முடிவுக்கே வருவார்கள்.

அடுத்ததாக, இறந்த பசுக்களை அப்புறப்படுத்துதல்...
இன்று நகர்ப்புறங்கள் மற்றும் புறநகர்களில் பசு வளர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால் பெரிதும் இடை, கடைநிலை சாதியினராகவே இருப்பார்கள். மேல்சாதியினர் குறிப்பாக பிராமணர் நவீன வேலைகளுக்கும் நகர்ப்புறத்துக்கும் மாறிவிட்டதால் அவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் இப்போது பசு வளர்ப்பில் இருந்து வெளியேறிவிட்டனர். கிராமங்களில் பசு வளர்ப்பும் பசுவைப் புதைத்தலும் பெரிய பிரச்னையாக இல்லை. நகர்ப்புறத்தில் அது ஏன் பிரச்னையாக இருக்கிறதென்றால், அதை வளர்க்கும் ஏழை மக்களுக்குப் பசுவைப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் மேய்ச்சல் நிலங்கள் கிடையாது என்பதால் அவர்களால் போதிய உணவைக் கொடுக்க முடிவதில்லை. எனவே, தங்கள் பசுக்களை அப்படியே அவிழ்த்துவிட்டுவிடுகிறார்கள். அவை தெருத்தெருவாக அலைந்து கிடைப்பதை உண்டு வாழ்கின்றன.

மேலும் ஏழைகளுக்குத் தொழுவங்கள் கட்டும் அளவுக்கு வசதிகள் இல்லை என்பதால் வீட்டுக்கு அருகில் தெருவிலேயே அவற்றை தூங்க வைக்கிறார்கள். பால் கறக்கும் காலத்தில் மட்டுமே பசுக்களை அவர்கள் சற்று அக்கறையுடன் நடத்துகிறார்கள். இதில் அவர்கள் மேல் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்களுக்கு பசு என்பது செலவில்லாமல் வருமானம் தரும் ஒரு விலங்கு மட்டுமே. சமூகத்தின் பிற சாதியினர் பசு மாமிசத்தைத் தவிர்க்கும்நிலையில், பசுக்களைப் பூட்டி வைக்காமல் மேயவிடுவதில் அவர்களுக்கு எந்த நஷ்டமும் பயமும் இல்லை. கோழியைப்போல் பசு மாமிசத்தையும் இந்து சமூகம் விரும்பிச் சாப்பிடுவதாக இருந்தால் பசுக்களைத் தெருக்களில் யாரும் அலையவிடமாட்டார்கள்.


இப்படி பசுவைப் பராமரிக்கும் வசதியும் அக்கறையும் இல்லாதவர்களிடம் இருக்கும் பசுக்கள்தான் எங்கேனும் இறந்துவிடும்போது பிரச்னையை உருவாக்குகின்றன. அவற்றை வளர்ப்பவர்களுக்கு, அதைப் புதைக்கும் வசதியும் கிடையாது. எனவே, அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால், மா-நகராட்சி அப்படியே விடுவிடமுடியாது. தலித்களிலேயே இருக்கும் இன்னொரு பிரிவினரை அழைத்துவந்து பசுவைப் புதைக்கச் சொல்கிறார்கள். அரசுப் பணம் பல வழிகளில் சுரண்டப்படுவதுண்டு என்றாலும் பசுவைப் புதைக்க அதைச் செலவிட அதிகாரத்தில் இருக்கும் இடைநிலை சாதியினருக்கு அக்கறை இல்லை. எனவே, பசுவைப் புதைக்கும் வேலையைச் செய்யும் தலித் பிரிவினருக்கு உரிய கூலி கிடைப்பதில்லை. அது இயற்கையாக இறந்திருந்தால்கூட அதை வெட்டி உண்ண முடிந்திருக்கும். முந்தைய காலகட்டத்தில் அப்படி இறக்கும் பசுக்கள், ஒரு பெரிய விருந்துக்கான வாய்ப்பாகவே அதை அப்புறப்படுத்திய சாதியினரால் பார்க்கப்பட்டது. ஆனால், நோய்வாய்பட்டு இறக்கும் பசுக்களை அப்படி உண்ணவும் முடியாது. அது எந்தவகையிலும் நன்மை தராத வேலையாகவே ஆகிவிட்டது. எனவே, ஒரு குறிப்பிட்ட சாதியைப் பிறப்பின் அடிப்படையில் அந்த வேலையில் திணிப்பது இன்று பெரிய தவறாகிவிட்டிருக்கிறது.

இடதுசாரிகள் கல்விப்புலங்களில் ஆரம்பித்து ஊடகங்கள் வரை அனைத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள்; இடைநிலை சாதி முற்போக்காளர்கள் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்; அரசு சாரா நிறுவனங்கள் தலித் விடுதலைக்காக அயராது பாடுபட்டுவருகின்றன; அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் தலித்களைப் பெருங்கருணையுடன் நடத்துகின்றன; அரசியல் சாசனம் அனைவருக்கும் கல்வியிலும் வேலையிலும் சம வசதி வாய்ப்புகளையும் சலுகைகளையும் உறுதிப்படுத்தியிருக்கிறது; தலித் கட்சிகள் கணிசமான செல்வாக்கு பெற்றுவிட்டிருக்கின்றன. நவீனத்துவமும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கோலோச்சத் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் சில தலித் சாதிகள் இவற்றின் எந்த நன்மையும் கிடைக்காமல் இருளிலேயே நீடிக்கும் அவல அதிசயம் புரியவே இல்லை. இதுமட்டுமா இப்படியான கடினமான இழிவான வேலைகள் எதுவும் இருந்திராத காலகட்டத்தில், உலகின் பிற பகுதிகளைப் போலவே பிறப்பின் அடிப்படையில் தொழிலை முன்வைத்த மனுவும் இந்துமதமும்தான் இதற்குக் காரணம் என்று அடிவயிற்றில் இருந்து கத்துகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்துத்துவர்களும் இந்தக் காட்டுக் கத்தலில் கூட்டுச் சேர்திருக்கிறார்கள். உண்மையில் மேலே சொல்லப்பட்ட சக்திகளில் ஏதேனும் ஒன்று ஒரு நிமிடமாவது இந்த வேதனைக்கு நாமும் ஒரு காரணமே... எளிதில் தீர்க்க முடிந்த ஒரு பிரச்னையே இது என்று நினைத்திருந்தால் எப்போதோ இதிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும். ஆனால், மலம் அள்ளுதல், கழிவுகளை அகற்றுதல் போன்ற கடைநிலைப் பணிகளில் ஈடுபட்டுவந்த தலித் சாதியினரில் இருந்து எந்தவொரு தலைவரும் வரவில்லை என்பதாலும் அவர்களுடைய வேதனைகளைச் சொல்லிக் காட்டி ஆதாயங்களை பெற்றுச் சென்ற பிற முன்னேறிய தலித் சாதியினருக்கு அவர்களுடைய வேதனையைத் தீர்ப்பதில் எந்த அக்கறையும் இல்லை என்பதாலும் இந்த வேதனைகள் தொடர்கதையாகிவருகின்றன. வேறென்ன தாய்க்கும் பிள்ளைக்குமேகூட வாயும் வயிறும் வேறுதானே.

பசுக்களை வளர்ப்பவர்களே அதைப் புதைக்க ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லலாம்; சம்பளம் தரும் வேலையாக யார் வேண்டுமானாலும் அந்த வேலைக்கு நியமிக்கப்படலாம்; அந்த வேலைக்கு இரண்டு மூன்று மடங்கு சம்பளத்தை அதிகரிக்கலாம். ஒருவேளை முன்பு பசுவைப் புதைக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களே அதைச் செய்ய விரும்பினால் அதில் அவர்களுக்கு முன்னுரிமை தரலாம். ஆனால், அது நிச்சயமாக நிர்பந்தமாக இருக்கவே கூடாது. இதுவே உடனடியாகச் செய்யவேண்டிய விஷயம்.
*
நீண்டகால நோக்கில் கோசாலைகள் அமைப்பதே இந்தப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். கோசாலைகளை அமைத்துப் பசுக்களை வளர்க்கவேண்டும். ஆனால், அதன் இறைச்சியை உண்ணக்கூடாதென்றால், அது லாபகரமான தொழிலாக இருக்காது. அதில் இருந்து கிடைக்கும் பால் போதாது. அதோடு பசுவின் உணவுக்கு அதிகம் செலவாகும். இந்த நடைமுறைச் சிக்கலைப் போக்க என்னென்ன வழிகள் உண்டென்று பார்ப்போம். அதாவது, கார்ப்பரேட் நிபுணத்துவத்துடன் ஒரு கோசாலையை நடத்துவது எப்படி?

கிறிஸ்தவ இஸ்லாமிய சக்திகள் தமது நலன்களை முன்னெடுக்க உலகம் முழுவதும் அனுப்பிவைக்கும் பணத்தில் நடக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் எல்லாமே தன்னிறைவாகச் செயல்படுபவை அல்ல. முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளில் தமது மதத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட எளிய மனம் கொண்டவர்களாலும் தனது மதத்தைப் பரப்பியே தீரவேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களாலும் தரப்படும் நிதிகளை வைத்தே அந்த நிறுவனங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. எனவே, ஒரு இந்து மதிப்பீட்டைப் பாதுகாக்க முன்வரும் இயக்கமும் அமைப்பும் மட்டும் பொருளாதாரரீதியாக தன்னிறைவு பெற்றதாக இருந்தாகவேண்டுமா என்ன என்று கேட்கலாம்தான். எனினும் ஓரளவுக்கு தனக்கான நிதியை அதுவே உற்பத்தி செய்துகொண்டுவிடுமென்றால் நல்லதுதானே என்ற வகையில் இதைப் பார்ப்போம்.

இந்துக்களில் பெரும்பாலானோர் மேலும் சரியாகச் சொல்வதென்றால், பொருளாதாரரீதியாகவும் அரசியல் அதிகாரரீதியாகவும் செல்வாக்குடன் இருக்கும் பிரிவினர் கோசாலைகளுக்குப் பெருமளவில் நன்கொடை கொடுக்கத் தயாராகவே இருப்பார்கள். எனவே, முதலீட்டுக்கும் ஆரம்பகட்டப் பராமரிப்புக்கும் பெரிய நிதிச் சிக்கல் எதுவும் இருக்காது.

அடுத்ததாக, கன்று குடித்ததுபோக எஞ்சும் பசுவின் பாலை வைத்து இனிப்புப் பொருட்களைத் தயாரிக்க முடியும். அதை விற்று ஓரளவுக்கு நிதியைச் சேகரிக்க முடியும். பசுவின் கழிவுகளைக்கொண்டு நல்ல உரங்கள் தயாரிக்கலாம். அந்த உரங்களைக் கொண்டு பசுவுக்குத் தேவையான புல், இழைதழைக்கான மரங்கள் வளர்ப்பதோடு காய்கனிவகைகளையும் வளர்க்கலாம். நகரங்களில் மேய்ச்சல் நிலத்துக்கு போதிய இட வசதி இருக்காது. ஆனால், ஷெல்ஃப் ஃபார்மிங், மாடித் தோட்டம் என பல வகைகளில் புல் வகைகளை வளர்ப்பது மிகவும் எளிது. அதோடு எல்லா வீடுகளிலும் தற்போது காய்கறிக் கழிவுகளை குப்பை வண்டியில் போடுகிறார்கள். அதைத் தனியாகச் சேகரித்து கோசாலைகளுக்குக் கொண்டுவரலாம். வீடுகளில் ஊசிப்போன, பூஞ்சை பிடித்த உணவு போன்றவற்றையும் சேர்த்துப் போட்டுவிடுவார்கள். அது பசுவுக்குக் கெடுதலைத் தரும். எனவே, வீடுகளில் இருந்து கிடைக்கும் இழைதழைகளை மிகுந்த கவனத்துடனே பயன்படுத்தவேண்டும்.


ஆனால், தற்போது காய்கறிச் சந்தைகளில் இலை தழைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கவும் குப்பையில் போடப்படவும்தான் செய்கின்றன. அவற்றை முறையாகச் சேகரித்தால் கோசாலைப் பசுக்களுக்கான உணவு முழுவதுமாகவே கிடைத்துவிடும். 30-40 கடைகள் உள்ள சந்தையில் கிடைக்கும் இழை தழைகளை வைத்து 15-20 பசுக்களை நல்லமுறையில் பராமரித்துவிட முடியும். காய்கறிச் சந்தைகளைத் தூய்மையாக வைத்தது போலவும் ஆகும். தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட கோசாலைப் பராமரிப்பை ஆக்கிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோசாலையை அமைத்து அங்கேயே மரங்கள், புல் வகைகளை வளர்க்கலாம். பிறவகை காய்களையும் பயிரிடலாம். ஒரு பசுவை அங்கு அனுப்பும் ஏழைக்கு அந்தப் பசுவில் இருந்து கறக்கப்படும் பாலில் ஒரு பாதியை அவருக்கே கொடுத்துவிடலாம். அது ஈனும் கன்றுகள் வளர்ந்து தரும் பாலில் இருந்தும் அவருக்கு ஒரு பங்கு தரலாம். அந்த கோசாலையில் விளையும் காய்களை அவருக்கு சலுகை விலையில் கொடுத்து அவருடைய உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யலாம். அவர் மாமிசம் சாப்பிட்டே தீரவேண்டும் என்று விரும்பினால் தன் வீட்டில் கோழி, ஆடு, பன்றி போன்றவற்றை வளர்த்து அவை இறந்த பிறகு அவற்றைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். கோசாலையில் இருந்து கிடைக்கும் காய்களை தன் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கலாம்.

டிராக்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டநிலையில் காளைகளின் தேவை இப்போது அறவே குறைந்துவிட்டிருக்கிறது. எனவே, காளைகளின் வரவு ஒருவகையில் சுமையானதே. கருக்கலைப்பு தவறுதான். என்றாலும் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தேவையான அளவுக்கு மட்டுமே காளைகள் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளலாம். காளைகளில் இருந்து கிடைக்கும் சாணி, இறந்தபின் கிடைக்கும்  தோல் ஆகியவை காளையின் பராமரிப்புக்கு ஆகும் செலவில் பத்தில் இருந்து 20 சதவிகிதத்தை ஈட்டித்தருமென்றாலோ வீடுகளில் இருந்து கிடைக்கும் காய்கறிகளே காளைகளையும் நன்கு பராமரிக்கப் போதுமானதாக இருக்குமென்றாலோ காளைகளை இயல்பாக வரவேற்கலாம்.

அப்படியாக நகரில் எங்குமே பசுக்கள் அலைந்து திரியவிடாமல் அவற்றை கோசாலையில் வைத்துப் பராமரிக்கலாம். கோசாலைகளில் இறக்கும் பசுக்களை மின் மயான முறையில் எரியூட்டலாம். அல்லது இறக்கும் பசுவின் உடலை மட்கச் செய்து உரம் தயாரிக்கலாம். மாமிச உணவைத் தவிர்ப்பதே லட்சியம் என்றாலும் ஒரு தற்காலிக ஏற்பாடாக, தானாக இறக்கும் பசுக்களின் மாமிசத்தையும் உணவாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது முற்றிப்போய் சுவை குறைவாக இருக்குமென்றால் நன்கு அரைத்து அல்லது வேறு வேதி வினைகளுக்கு உட்படுத்தி அதை மிருதுவாக்கி உண்ணலாம். மாமிசம் உண்டு பழகியவர்கள், ஓர் உயிரைக் கொல்லாமல் பெறப்பட்ட மாமிசம் இது என்ற ஒற்றைக் காரணத்துக்காக, அதன் சுவையில் உள்ள குறைபாட்டைப் பொறுத்துக்கொள்ளலாம். தானாக இறந்த விலங்கின் மாமிசத்தைச் சாப்பிடும் ஒருவர் ஓர் எளிய உயிரைக் காப்பாற்றியவராகிறார். நாகரிகத்தின் படிகளில் ஓர் அடி கூடுதலாக எடுத்துவைத்தவராகிறார். நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவரென்றால் உங்களைப் படைத்த அதே தெய்வம்தான் அந்த எளிய விலங்குகளையும் படைத்திருக்கிறார். அந்தவகையில் அவை உங்களுடைய சகோதரர் போன்றவை. உடன் பிறப்பைக் கொன்று தின்னாதிருப்பீர்...

வேதாகமம்கூட  Thou shall not kill...  என்றுதான் சொல்லியிருக்கிறது; Thou shall not murder... என்று சொல்லவில்லை (அதையே அதே வேதாகமத்தைச் சொல்லிக்காட்டி செய்வது நடக்கிறதென்பது வேறு வேதனைக்கான விஷயம்).


பசுக்களை வளர்க்கும்போது அதன் சாணியைக் கையாள்வது, குளிப்பாட்டுவது போன்ற கடைநிலைப் பணிகள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு நிச்சயம் தலித்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு மேல் சாதிக்காரர் சாணி அள்ளும் வேலைக்கு முன்வந்தால் நிச்சயம் அதை அனுமதிக்கலாம். ஆனால், தலித் சாதிகளில் இருக்கும் ஒருவர் அதைச் செய்ய முன்வந்தால் அனுமதிக்கக்கூடாது. அதற்கு பதிலாக அவர்களை அந்த கோசாலையின் பூசாரியாக நியமிக்கலாம். அல்லது சாணத்தைப் பயன்படுத்தி எரிவாயு, உரங்கள் தயாரிக்கும் பிளாண்ட் அமைத்தால் அதை நிர்வகிக்கும் பணியில் ஒரு தலித்தை நியமிக்கலாம். அதோடு, சாணியைக் கையால் தொடாமலேயே உரக்கிடங்குக்கோ எரிவாயுக் கிடங்குக்கோ கொண்டுசெல்ல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவேண்டும். தலித் ஒருவருக்கு உயர் கல்வி மையத்தில் இடம் கொடுப்பது எவ்வளவு அவசியமோ அதேஅளவுக்கு இழிவான, கடினமான வேலைகளுக்கு நவீன தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டுசொல்லும்வகையில் உயர் கல்விப் பாடங்களை மாற்றி அமைப்பதும் அவசியமே. ஒரு தனிநபர் தான் மட்டும் பல படிகள் முன்னேறுவதைவிட சொந்த சமூகத்தை ஒரு சில அடியாவது முன்னேற்றுவது நல்லதல்லவா. அமெரிக்க ஐரோப்பிய எஜமானர்களுக்கு சேவைப் பணி செய்வதால் அந்நியச் செலவணி அதிகம் கிடைத்து நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்து பட்ஜெட் புத்தகங்களில் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால், சொந்த சகோதரனின் வாழ்க்கைத் தரம் நிஜ இந்தியாவில் உயர்வது அதைவிட முக்கியம். அறிவினான் ஆவதுண்டோ சக மனிதனின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை.


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு, ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு என்று செயல்படுபவர்கள் கோமாதா திவஸ், கங்கா திவஸ் என புதிய கொண்டாட்ட தினங்களை ஆரம்பிக்கலாம். கோமாதா தினத்தில் திருவள்ளுவர் போல் தாடியும் மஞ்சள் சால்வையும் அணிந்துகொண்டு குழந்தைகள் அனைவரும் ஒரு கட்டு புல் அல்லது ஒரு சீப்பு பழங்களை வாங்கிச் சென்று தமது கையால் பசுக்களுக்குக் கொடுக்கும் விழாவாக அதை ஆக்கலாம். அதோடு பிறந்தநாள், திருமண நாள் என எதுவாக இருந்தாலும் பசுவுக்கு உணவு கொடுப்பதையும் அங்கு ஒரு மரக்கன்று நடுவதையும் வழக்கமாகக் கொள்ளலாம்.

மிருகங்கள் அடைக்கப்பட்டிருக்கும் மிருக காட்சி சாலைக்குச் செல்லும் வழக்கத்தை மாற்றி பசுக்களைச் சென்று பார்த்து கன்றுகளுடன் விளையாட வழி செய்து சந்தோஷமான அனுபவமாக அதை மாற்றலாம். தந்தத்தில் செய்வதுபோல் பசுவின் எலும்பில் இருந்து கலைப் பொருட்கள் தயாரிக்கலாம். தானாக இறக்கும் பசுவின் தோலைப் பயன்படுத்தி பைகள், பர்ஸ்கள் செய்யலாம். இவையெல்லாம் ஒரு கோசாலையைத் தன்னிறைவுடன் நடத்தப் பெருமளவுக்கு உதவும். அந்த கோசாலையை அரசு வேலைகள் கிடைக்காத தலித்களைக்கொண்டு பராமரிக்கச் செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான வசதியையும் ஏற்படுத்தித் தரலாம்.

அப்படியான இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் வழியையே நாம் முன்னெடுக்கவேண்டும். ஏனென்றால், ‘தலித்’களும் ‘சாதி இந்து’க்களும் நட்புசாதிகளே... நீங்கள் ஓர் இந்துவாக இருந்தால் சண்டைபோடும் இருவரும் சகோதர சாதிகளே என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். நீங்கள் மொழிப்பற்று கொண்டவராக இருந்தால் சண்டைபோடும் இருவரும் ஒரே மொழியைப் பேசுபவரே என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். நீங்கள் உங்களை இந்தியராக உணர்பவர் என்றால் சண்டையிடும் இரு பிரிவினரும் இந்தியாவின் குடிமகன்களே என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். புத்தர் மீதோ வள்ளுவர் மீதோ மரியாதை கொண்டவர் என்றால் அவருடைய கொல்லாமையை முன்னெடுக்கும் வழிமுறையாக இதை ஆதரியுங்கள். அம்பேத்காரியவாதியாக உங்களை உணர்கிறீர்கள் என்றால் தலித் நலன் சார்ந்த திட்டமாக இதை முன்னெடுங்கள். உண்மைக்கு நெருக்கமாக வரமுடியாவிட்டாலும் உங்கள் அரசியலையாவது உருப்படியாகச் செய்யுங்கள்.

No comments:

Post a Comment