Saturday 27 October 2018

இந்து விழாக்கள்... விமர்சனங்கள்...

·                     விநாயக சதுர்த்தியின் போது களிமண் அல்லாத விநாயகர் பொம்மைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் அவை மாசடைகின்றன.
·                     தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
·                     கோவில்களில் யானையைத் துன்புறுத்துகிறார்கள்...
இவை போன்ற பாதுகாப்பான-சுய ஆதாயம் மிகுந்த விமர்சனங்களில் இந்து விழாக்களை அழிக்கும் நோக்கம் இருப்பது உண்மைதான்.
·                     ஆண்டில் 364 நாட்கள் ஆலைகள், வாகனங்கள் மூலம் மாசடைவதைவிடவா ஒரே ஒரு நாள் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதால் மாசடைந்துவிடப்போகிறது?
·                     ரத்தம் சிந்தா பக்ரீத் என்று சொல்லிப் பாருங்களேன்.
·                     இறை வழிபாட்டில் கத்தியால் வெட்டிக்கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுங்களேன்.
·                     ஆங்கில புதுவருடம், கிறிஸ்மஸ் போன்றவற்றுக்கு பட்டாசு வெடிப்பதில்லையா... மின்சாரத்தை வீணடிப்பதில்லையா..?
·                     பிரிட்டிஷ் காலகட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட சர்ச் நிலங்களை 100 வருட குத்தகை முடிந்த பிறகு அரசிடம் ஒப்படைக்கவேண்டியதுதானே... அல்லது இன்றைய மார்க்கெட் விலைக்கு வாடகையை கொடுக்கவோ அரசின் கட்டுப்பாட்டுக்கு  உட்படவோ வேண்டியதுதானே...
போன்ற கேள்விகளும் கேட்கப்படவேண்டியவையே.
ஆனால், இவற்றுக்கான எதிர்வினையாக, பட்டாசு வெடிக்கக்கூடாது என்கிறாயா... அதற்காகவே கூடுதலாக வாங்கி வெடிப்பேன்.
பெரிய விநாயகர் சிலைகள் கூடாதா..? அதற்காகவே அவற்றை வைப்பேன் என்பவையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான வீரமான நடவடிக்கைகளாகவே தெரியும். ஆனால், பரந்த, தொலைநோக்குப் பார்வையில் இவை அவ்வளவு விவேகமான எதிர்வினைகள் அல்ல.
நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்: இந்து மறு மலர்ச்சி, இந்து ஒற்றுமை, இந்து கலாசார பாதுகாப்பு ஆகியவைதானே ஒழிய வேறெதுவும் இல்லை.
இந்து மத விழாக்கள், சடங்குகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற நோக்கம் 40% இருக்கிறது. பிற மத, அதிகாரமையங்கள் மேல் விமர்சனம் வைக்காமல் இருப்பது என்ற தந்திரம் 40% இருக்கிறது. அதே நேரம் இந்துக்கள் தம்மைச் சீர்திருத்திக்கொள்ளவும் பலப்படுத்திக்கொள்ளவுமான தேவையும் அந்த விமர்சனங்களில் 20% இருக்கத்தான் செய்கிறது.
இந்து ஒற்றுமை என்ற கோணத்தில் பார்த்தால் அந்த 20% நமக்கு 100%க்கும் மேலான முக்கியத்துவம் வாய்ந்தது. 80% விரோதத்துக்கு பதிலடியாக உடனடி எதிர்ப்பு காட்டுவதோடு நிற்காமல் இதுவே மிக மிக முக்கியம்.
ஐம்பது மதிப்பெண் பெற்றவனைப் பார்த்து ஒருவன் நீ ஃபர்ஸ்ட் க்ளாஸ் மார்க் வாங்கலியே என்று எள்ளிநகையாடினால், நீ இரட்டை இலக்கத்தை எப்போதடா எட்டுவாய் என்று பதிலடி கொடுத்து அவன் வாயை அடைக்கத்தான் வேண்டும். அதேநேரம் 80-90 மதிப்பெண் பெற்றும் அவன் வாயை அடைக்க முடியும்.
இன்னும் எளிதில் புரியும்படியான நடைமுறை உதாரணம் சொல்வதென்றால் பிராமண சமூகம் இடப்பங்கீட்டை எதிர்கொண்டவிதத்தைச் சொல்லலாம். திறமையின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியில்  அரசுப் பணிகளில் அதிக அளவில் இடம்பெற்றிருந்த பிராமணர்களுடைய வாய்ப்புகள் சுதந்தர இந்தியாவில் அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப நேர்படுத்தப்பட்டன. அது நிச்சயமாக பிராமணர்களுக்கு எதிரான நடவடிக்கையே.
ஆனால், அவர்களோ இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமல்லாமல் பிற இடைநிலை சாதிகளே, நில உடமை, அரச நிர்வாம், வணிக அமைப்புகள் என அனைத்திலும் முன்னணியில் இருந்தார்களே... எங்களை மட்டும் ஏன் கட்டம் கட்டுகிறீர்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு அரசுப் பணிகளில் இடம் கொடு என்று போராடவில்லை. தனியார் வேலை, அயல் மாநில வேலை, அயல் நாட்டுவேலை என்று தங்களுடைய திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறிக் காட்டியிருக்கிறார்கள்.
இந்தியா என்ற அளவிலும் கூட உலக நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்தோ, உயர் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளமாட்டேன் என்று மறுத்தோ நம்மை ஒதுக்கும்போது நாம் நம் திறமையால் முன்னேறிக் காட்டியிருக்கிறோம்.
எதிரியின் தரத்துக்கு இறங்கி சண்டையும் போடலாம். எதிரியால் எட்டவே முடியாத  உயரத்துக்குப் போய் ஜெயிக்கவும் செய்யலாம்.
தேர்வு நமதே...
*
இப்போது இந்து மதம் மீது (மட்டுமே) வைக்கப்படும் விமர்சனங்களை கம்பீரமாக எதிர்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
அதாவது, இந்த விழாக்களை உண்மையான இந்து மறுமலர்ச்சியாக இந்து நவீனமாக மாற்றிக்கொள்வது எப்படி? 
இந்து மதத்தை விமர்சிக்கும் தார்மிக பலம் ஒருவருக்கு எதன் மூலம் கிடைக்கிறது?, இந்து மதத்தின் ஜாதிய வாழ்க்கை பற்றிய விமர்சனபூர்வமான பார்வைதான் அந்த பலத்தை ஒருவருக்குத் தருகிறது. ஒரு இந்து என்னதான் பெருமை பேசினாலும் ஜாதி என்ற ஒன்றை வைத்துத்தான் அவரை மற்றவர்கள் மட்டம் தட்டுகிறார்கள். 
மதம், இனம், நிறம், மொழி,தேசம் போன்ற குழு மனப்பான்மைகளில் ஜாதி கடைநிலையில் இருக்கும் ஆக மிதமான கெடுதல் என்பதைப் புரிந்துகொள்ளும் காலம் வரும்வரையில் ஜாதி சார்ந்த மிகை விமர்சனங்களுக்கு இதமாகவே எதிர்வினையாற்றியாகவேண்டும்.
இந்து விழாக்களின் நவீனத்துவம், இந்து மறுமலர்ச்சி என்பதை ஜாதி சார்ந்த மறுமலர்ச்சிக்கு உகந்ததாக ஆக்கவேண்டும்.
திருவிளக்கு பூஜை, விநாயக சதுர்த்தி போன்றவற்றின் மூலம் இந்து ஒற்றுமையை  முன்னெடுப்பதுபோலவே பிற இந்து விழாக்களையும் ஜாதி சமூக ஒற்றுமைக்கு ஏற்றதாக மாற்றவேண்டும்.
உதாரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு பிரமாண்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் பொம்மைகளுக்குப் பதிலாக கடைநிலை ஜாதியினரிடம் களிமண் மற்றும் அச்சுக்களைக் கொடுத்து சிறிய அழகிய விநாயகர் பொம்மைகளை உருவாக்கச் சொல்லி ஒவ்வொருவரும் அதைத் தமது வீட்டுக்கு வாங்கி வந்து பூஜை செய்து கடைநிலை ஜாதியினரிடமே திருப்பிக் கொடுத்துக் கரைக்கச் சொல்லிவிடவேண்டும்.
அப்படித் திருப்பிக் கொடுக்கும்போது வீட்டு உறவினருக்குச் செய்வதுபோலவே, கோவில் அர்ச்சகருக்குத் தருவதுபோலவே கொழுக்கட்டை, வெத்தலை பாக்கு, பழம், வேஷ்டி, புடவை கொடுக்கலாம். தற்போது கடைநிலை ஜாதியினர் எல்லா திருவிழாக்களிலும் கடைநிலைப் பணிகளை, பொருட்களை விலைக்கு விற்கிறார்கள். அதை மாற்றி ஒவ்வொரு விழாவிலும் அவர்களை  அங்கத்தினராக ஆக்கவேண்டும்.
தற்போது வீடுகளில் வேலை செய்பவர்களுக்கு இதுபோன்றவற்றைத்  தருவதுண்டு. ஆனால், அதை உரிய கண்ணியத்துடன் செய்ய வேண்டும். நவராத்திரி போன்ற விழாக்களில் சொந்த ஜாதிப் பெண்களுக்கு செய்யும் மரியாதைபோல் வீட்டுக்குள் அழைத்து ஸ்வாமி அறையில் உட்காரவைத்துகொடுக்கவேண்டும்.
கடைநிலை ஜாதியினரின் குடியிருப்புகளுக்கு சென்று 108 அல்லது 1008 களிமண் விநாயகர் பொம்மைகளைச் செய்து ஒரு பெரிய விழாவாக அதைக் கொண்டாடலாம்.
ஒவ்வொரு விநாயகர் கோவிலிலும் அதுபோல் நூற்றுக்கணக்கில் விநாயகர் பொம்மைகளை கோவில் மதில் சுவரில் கொலுபோல் வைத்து அவற்றுக்கு சிறிய அகல் விளக்கால் ஒளி ஏற்றி வணங்கலாம்.
ஒவ்வொரு கிராம தெய்வத்தின் விக்ரகத்தையும் களிமண் விநாயகர்களையும் பல்லக்கில் வைத்து அனைத்து ஜாதி, அனைத்து மதத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாகக் கொண்டு சென்று கிராம நல்லிணக்கத்தை பலப்படுத்தலாம்.
*
தீபாவளியை எடுத்துக்கொண்டால், முன்பெல்லாம் கோவில் திருநாளின் போது சொக்கப்பனை, வாண வேடிக்கை என நடத்துவார்கள். அதுபோல் தீபாவளியன்று இரவு அவரவர் பகுதியில் இருக்கும் கோவிலில் ஸ்வாமி உலா ஏற்பாடு செய்து தெப்பக் குளம் இருந்தால் தெப்ப உற்சவம் நடத்தி வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தலாம்.
ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து ஜாதியினரும் ஒன்று கூடி ஒரு அறக்கட்டளை போல் அமைத்து தீபாவளியைக் கொண்டாடலாம். அவரவருக்கு முடிந்த தொகையை திருமணமொய் கவர் போல் ஒன்றில் போட்டு கோவிலில் கொடுத்துவிடவேண்டும். அந்தப் பணத்தை வைத்து கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் சீருடை போன்று ஒரே விதமான ஆடையை  வாங்கித் தரலாம். பள்ளிச் சீருடை போல் அல்லாமல் வண்ணமயமான ஆடையாக அதை வாங்கி கிராமத்தில் அனைவரும் அணிவது கிராமத்தின் அனைத்து ஜாதியினரிடையே நட்புறவை பலப்படுத்தும்.
பணிபுரியும் இடங்களில் கூட்டுறவு அமைப்பு போல் அல்லது சீட்டுக் கட்டி தீபாவளிக்கான பட்டாசு, பலகாரங்கள் வாங்குவதுபோல் கிராமத்திலும் அனைவருக்கும் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். உண்மையில் கிராமத்தில்தான் இந்த கூட்டுறவு முறை முதலில் அமலாகியிருக்கவேண்டும்.
நகரம் கிராமம் நட்புறவை பலப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். நகரத்தில் இருந்து குழுக்களாக கிராமங்களுக்குச் சென்று அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடலாம். இந்திய வானில் (தென்னிந்திய வானில்?) சூழும் பட்டாசுப் புகை மூலம் தீபாவளியை நம் முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்து பழகியவர்களுக்கு வண்ணமயமான ஒற்றைச் சீருடையில் அனைத்து ஜாதியினரும் ஒவ்வொரு கோவில்களை வலம்வருவதைப் பார்ப்பது பேரானந்தமாகவே இருக்கும்.
ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அம்மன் கோவிலில் அந்த ஆண்டு என்ன நிற மேலாடை, என்ன நிற இடையாடை என்று சிறுவர்களைவிட்டுத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அப்படியான உடையை ஊர் முழுவதும் அணியவேண்டும்.
சீருடை என்பது அதை அணியும் குழுவினரிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். இன்று நகைக்கடை, உணவு விடுதி, விமானசேவை போன்றவற்றுக்கு தனியான சீருடை இருப்பதைப் பார்த்திருப்போம். அதை அவர்கள் தனி அடையாளம் என்ற வகையில் மட்டுமல்ல பணியாளர்களிடையே ஒற்றுமை என்ற வகையிலும் முன்னெடுக்கிறார்கள். எனவே, தீபாவளிக்கு ஒரு கிராமத்தில், தெருவில் இருக்கும் அனைத்து ஜாதியினரும் ஒரே நிற உடை அணிவதென்பது அவர்களிடையே நல்லுறவை பலப்படுத்தும்.
வெளியூரில் இருப்பவர்கள் கூட தமது கிராமத்து சீருடையை அணிந்து ஃபேஸ்புக்,வாட்ஸப்பில் புகைப்படங்களை வெளியிட்டு ஊர்ப்பாசத்தை வெளிப்படுத்திகொள்ள முடியும். ஒரே நிற உடை என்பதால் செலவும் குறையும். துணி நிறுவனங்களுக்கும் லாபகரமான வழிமுறையாக இது இருக்கும்.
இந்த விழாக்களில் ஜாதி நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது எளிது. ஒரு கோவிலின் பாரம்பரிய விழாக்களில் இருக்கும் ஜாதி சார்ந்த அம்சம் இதில் இருக்காது. நவீன கால விழா என்பதால் ஆரம்பிக்கும்போதே ஜாதி நல்லிணக்கத்துடன் இதைத் தொடங்க முடியும். ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்த 9 அல்லது 18 அல்லது 108 என அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் முளைப்பாரி எடுத்து பால் குடம் எடுத்து விழாவைத் தொடங்கலாம்.
வட இந்திய பாணியில் கோவில்களை அகல் விளக்குகளால் அலங்கரிக்கலாம்.  
இவையெல்லாம் பெரியோர்களுக்கான சீர்திருத்தங்கள். சிறுவர்களைப் பொறுத்தவரையில் வண்ணமயமான வாண வேடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்ப்பதைவிட ஒற்றை ஊசிப்பட்டாசாக இருந்தாலும் தானே பற்றவைத்து வெடித்தால்தான் சந்தோஷமாக இருக்கும். சிறுவர்களிடமிருந்து அந்த சந்தோஷத்தைப் பறித்துவிடக்கூடாது. எனவே அவர்களுக்கு பட்டாசுகள் தந்தாகவேண்டும்.
வெடி வகைகளுக்கு பதிலாக வண்ண வண்ண மத்தாப்புகளை அதிகம் பயன்படுத்தவைப்பது (குடிசைகள் பெருமளவுக்கு வழக்கொழிந்துவிட்ட நிலையில்)  இன்னும் நல்லது. அவர்கள் தமது வீட்டு வாசலில் வெடிக்கும் ஒரு மத்தாப்பின் நட்சத்திரச் சிதறல்கள் அதை உற்பத்தி செய்யும் சக இந்திய தொழிலாளியின் வீட்டில் வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பெருமிதம் கொள்ளச் செய்யலாம்.  
நாய், பூனை மற்றும் பிற கால்நடைகள் போன்ற வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் காதுகளில் பஞ்சு அல்லது  விலங்கு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் சொல்லும் வழியிலான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
எளிய உயிர்களை கிராமங்களில் சற்று ஒதுக்குப்புறமான இடங்களுக்குக் கொண்டு சென்று ஓரிரு நாட்கள் பராமரிக்க ஏற்பாடு செய்யவேண்டும். வேடந்தாக்கல் பக்கத்தில் என்று நினைக்கிறேன். ஒரு கிராமத்தில் பறவைகளுக்கு துன்பம் தரக்கூடாதென்று பட்டாசு வெடிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவரின் வாரிசுகளான நாம் அந்தக் கருணை ஒளியைக் கொஞ்சம் தூண்டிவிட்டுக் கொள்ளவேண்டும்.
பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சிறுவர்கள் வேறொரு விஷயமும் செய்ய வேண்டும். தீபாவளி நாளில் சூழல் பற்றி அக்கறைகொள்வதோடு நின்றுவிடும் சூழலியல் அமைப்பில் தொடங்கி ”நோ பட்டாசுகள்’ கேம்பெய்னில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களுடைய வீடுகளுக்குச் செல்லவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் கார்கள், பைக்குகளில் உங்கள் சுற்றுச் சூழல் அக்கறை தீபாவளி தாண்டியும் விரியட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.  தொழிற்சாலைகள், சூழலியல் மாநாடுகள் ஆகியவற்றுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் கைப்பட எழுதிக் கொடுக்கலாம். கார்டுகள் அனுப்பலாம்.
போராளிகள் அக்கம் பக்கத்தில் இருந்தால் அவர்கள் வீட்டின் முன்னால் சென்று விழிப்பு உணர்வு பேரணிகள் கூட நடத்தலாம்.  நாங்கள் ஒரு நாள் பட்டாசு வெடித்தற்கு பிராயச்சித்தமாக இதைச் செய்துவிட்டோம்... நீங்கள் உங்கள் பங்கை எப்போது செய்வீர்கள் என்று கேட்கச் செய்யலாம். 
*
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம், காதலர் தினம் போன்றவற்றை மேற்கத்தியர்கள் எப்படி உலகம் முழுவதும் புகுத்துகிறார்களோ அதுபோல் அல்லாமல் நமது பாரம்பரிய விழாக்களின் நல்லம்சங்களை ஒருங்கிணைத்து புதிய விழாக்களை அல்லது பாரம்பரிய விழாக்கள் சிலவற்றுடன் புதிதாகச் சேர்த்து மீட்டெடுக்கவேண்டும்.
அட்சய திருதியை போன்ற வணிக இலக்கு கொண்ட விழாக்கள் போலல்லாமல் பாரம்பரிய மறுமலர்ச்சியாக இந்து சமூக ஒற்றுமையாக இந்த விழாக்களை வடிவமைக்கவேண்டும்.
கோவில்களில் யானைகள் கூடாதென்கிறார்களா..? நல்லது... மிருக காட்சி சாலையில் இருக்கும் விலங்குகள், பறவைகளையும் காடுகளுக்கு அனுப்பிவிடலாம். யானைகளின் வானரங்களின் மயில்களின் பசுக்களின் சரணாலயங்களை கோவில்களாக்கிக் கொள்ளலாம். திறந்த வெளியில் சுதந்தரமாக வாழும் அவற்றுக்கு அந்த கோவிலில் பூஜை செய்யப் பழக்கினால்போதும்.
தினமும் அவற்றுக்கான உணவு நேரத்துக்கு முன்பாக யானைகளை இறைவன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து, தூப தீபம் ஏற்றி ஆரத்தி காட்டி வணங்கச் செய்து அதை நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். கோவில்களில் பூஜை, தீபாராதனை நடப்பதைப் பார்க்க பக்தர்கள் குழுமுவதைப் போல யானைகள் காட்டில் வழிபாடு செய்வதைப் பார்க்கவும் அந்த நேரத்தில் பக்தர்கள் கூடுவார்கள்.
திருக்கழுகுன்றம் போன்ற இடங்களில் கருடன் தினமும் மதிய நேரம் சரியாக வந்து ஆசியளித்துப் பிரசாதம் பெற்றுச் செல்வதைப் பார்த்திருப்போம். சில ஊர்களில் திருநாட்களில் கருடன் ஸ்வாமி விக்ரகத்தை வானிலிருந்தே மூன்று முறை வட்டமிடுவதுபோல் இதைக் காணவும் பக்தர்கள் ஆர்வத்துடன் வருவார்கள்.
உலகக் கோப்பை போட்டியில் எந்த அணி வெல்லும் என்று ஆமையிடமும் ஆக்டோபஸிடமும் கேட்கும் மேற்குலகுக்கு மாற்றாக நம்மிடம் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் உண்டு. அதை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
காட்டுக் கோவிலில் மயில்கள் எல்லாம் கூடி நின்று முருகா முருகா என்று அகவியபடியே பூஜை செய்துவிட்டு, சரணாயலக் காப்பாளர் தூவும் தானியங்களைக் கொத்தித் தின்பதைப் பார்ப்பது மிகப் பெரிய இறை அனுபவமாக இருக்கும் அல்லவா..?
பாரம்பரிய அம்சங்களை நவீன விழாக்களாக மாற்றுவது என்பதற்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி மிக நல்ல எடுத்துக்காட்டு. இந்து ஒற்றுமையை கலாசாரப் பாதுகாப்புவழியில் முன்னெடுக்கும் நல்ல முயற்சியும் கூட. அதுபோலவே அனைத்து விழாக்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளவேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்து விழாக்களில் நவீன-பாரம்பரிய நல்லம்சங்களைச் சேர்க்கவேண்டும் இந்து ஒற்றுமையை பலப்படுத்தும்வகையில் சீர்திருத்தவேண்டும். அதுவே இந்து விழாக்கள் மீது போலி சூழல் ஆர்வத்துடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக இருக்கும்.
சிவாஜி மட்டுமல்ல...
சாணக்கியரும் நம் குல மூப்பனே!

No comments:

Post a Comment