Monday 1 October 2018

சபரி மலை வழிபாடு

சபரி மலை வழிபாட்டு விஷயத்தில் தற்போது நடப்பது ஆண் பெண் சமத்துவத்துக்கான உரிமைப் போர் அல்ல. பாரம்பரியம் - நவீனத்துவம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான போராட்டமும் அல்ல. இந்த மேல்ப்பூச்சுகளுக்கு அடியில் அடிப்படையில் இது ஒரு மதவாதப் போர். இந்து தர்மத்தின் மீதான தொடர் தாக்குதல்களில் ஒன்று. இன்றைய ராணுவ மொழியில் சொல்வதானால் இந்து மதத்தின் மீதான சர்ஜிக்கல் அட்டாக்.

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் விரல்விட்டு எண்ணமுடிந்த கோவில்களில் குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு அனுமதி இல்லை. அதே நம் தேசத்தில் வெகு சொற்ப கோவில்களில் ஆண்களுக்குமே அனுமதி இல்லை. எஞ்சிய கோவில்கள் அனைத்திலும் ஆண்கள், பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி உண்டு. ஈ.வெ.ரா. போன்ற மூடர் கூட்டத் தலைவன் இந்துக் கோவில்களில் பெண்கள் கும்பிடச் செல்வதே ஆண்களுடன் இடித்து, உரசி இன்பம் காணத்தான் என்று சொல்லும் அளவுக்கு இந்துக் கோவில்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழிபாடுகளில் உரிய முக்கியத்துவமும் சமத்துவமும் தரப்பட்டிருக்கிறது. இருந்தும் இந்து கோவில்களில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்ற அசட்டுத்தனமான, அபாண்டமான, அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்து சபரி மலை விஷயம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்துத்துவர்களிலேயே கூட இந்த சர்ஜிக்கல் தாக்குதலை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் கலங்கி நிற்கும் பரிதாபகரமான நிலையே நிலவுகிறது. எதிரியின் துல்லியமும் தாக்குதலும் அத்தகைய நிபுணத்துவம் மிகுந்தது. ஒற்றை மையம் கொண்டிராத இந்து மரபில் எந்தவொன்றும் யாராலாவது ஆதரிக்கப்படும்; யாராலாவது எதிர்க்கவும்படும் என்பதையும் மீறி இது வேறுவகையான அபாயகரமான தாக்குதல்.

ஐய்யப்ப வழிபாடு இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது அது பிரம்மச்சரிய வழிபாடு. நைஷ்டிக பிரம்மசரிய ஐய்யனை பக்தர்களும் ஒரு மண்டலம் பிரம்மச்சரிய விரதம் பூண்டு வழிபடும் மரபு. ஐய்யப்ப வழிபாட்டில் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. ஒருவகையில் இன்றைய தாக்குதல் அதைக் குறிவைத்துதான்.

சபரி மலை வழிபாடு என்பது பிராமண மரபையும் பிராமணரல்லாதார் மரபையும் இணைக்கும் வழிபாட்டு வழிமுறை.

இந்துக் கோவில்களில் 80-90 சதவிகிதக் கோவில்களில் பிராமணரல்லாதார்தான் பூசாரிகளாக இருக்கிறார்கள். அந்தக் கோவில்களில் பிராமணிய விதிமுறைகளின் முந்தைய வடிவம் நடைமுறையில் இருக்கும். எனவே எல்லா பிராமணரல்லாதார் கோவிலுமே ஒருவகையில் பிராமண- பிராமணரல்லாதார் மரபுகளின் கலப்பால் இயங்குபவையே. என்றாலும் அந்த இரண்டின் இணைப்பானது ஐயப்ப வழிபாட்டில் அதன் உச்சத்தை எட்டியிருப்பதாகவே சொல்லலாம்.

ஒரு பக்கம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பூசாரிகளாக இருப்பவர்கள் கேரள நம்பூதிரிகள். பிராமண ஜாதியிலேயே அதி உயர்ந்த, அதி கறரான சடங்கு சம்பிரதாயங்களை உடையவர்கள் கேரள நம்பூதிரிகளே. அவற்றை இன்றுவரையிலும் கறாராகக் கடைப்பிடிப்பவர்களும் அவர்களே. நம்பூதிரிகள் இருக்கும் கோவில்களில் ஆண்கள் திறந்த மார்புடன் தான் தெய்வத்தைக் கும்பிட்டாக வேண்டும். மன்னரே ஆனாலும் மந்திரியே ஆனாலும் அந்தக் கோவில் தெய்வத்துக்கு அபிஷேக ஆரத்திக்கு என்று வகுக்கப்பட்டிருக்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் எந்த தீபாரதனையும் காட்டப்படாது. பிரசாதம் பெறுபவரின் கை மிகவும் தாழ்வாக இருக்க நம்பூதிரி தன் கையை மிகவும் உயர்த்தி வெளிப்படையாக, நாடகீயமாக வெளிக்காட்டித்தான் பிரசாதம் கொடுப்பார். இப்படியாக பல்வேறு சடங்காசாரங்களை மிகவும் இறுக்கமாகக் கறாராகப் பின்பற்றிவரும் நம்பூதிரிகள் சபரிமலை ஐய்யப்பனின் கோவிலில் பூசகர்களாக இருக்கிறர்கள். இது இந்த வழிபாட்டின் பிராமண மரபின் பங்கு.

இதன் மறுபக்கம் ஐயப்பன் பிராமணரல்லாதாரின்தெய்வம் என்று சொல்லத் தகுந்த அளவில் சபரி மலைக்கு மாலையிட்டுச் செல்பவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் பிராமணரல்லாதோரே. இவர்கள் தத்தமது குக்கிராமத்தில் இருக்கும் எல்லைத் தெய்வம், பரிவார தெய்வத்தின் சன்னதியில் பிராமணரல்லாத பூசாரியிடம் மாலை போட்டுகொண்டு பிராமண சடங்குகள் எதையும் பின்பற்றாமல் ஐயப்ப வழிபாட்டைத் தொடங்கிக் கொள்ளமுடியும். தர்ம சாஸ்தா, சரணம், ஹரி ஹர புத்ரன் என சமஸ்கிருத பெயர்கள், வார்த்தைகள் உண்டு என்றாலும் சரண கோஷங்கள் எளிய மக்களின் பேச்சு மொழியிலேயே பெரிதும் இருக்கும். இந்தியாவில் பொதுவாக வேறு எந்த பெரிய தெய்வத்தின் வழிபாட்டுச் சடங்கும் இப்படி பிராமண பூசாரியின் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்படுவதில்லை.

இந்த ஐயப்ப வழிபாடென்பது முழுக்க முழுக்க பிராமணரல்லாதார் தமது விதிமுறைகளைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டு வடிவமைத்திருக்கும் வழிபாடு. எந்த பழங்கால பிராமண ஆகம நூல்களிலும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. அதிலும் இன்றைய பிரபல்யம் என்பது சுமார் 100 ஆண்டுகளில் உருவானதே. சைவம், வைணவம், சாக்தம் என்ற மரபுகளின் கலவையான இந்த வழிபாடு ஒரு வகையில் மிகச் சமீப காலத்தில் முளைத்து கிளைவிட்டு பூவும் காயுமாக கனியும் விதையுமாக வளர்ந்து நிற்கும் பெரும் மரம் இது. கிட்டத்தட்ட ஐயன் வசிக்கும் காட்டைப் போலவே எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத வழிபாட்டுக் கானகம் இது.

அதே நேரம் கோவில் நந்தனவத்தில் திட்டமிட்டு வளர்க்கப்படும் செடிகளின் அதே பச்சைதான் கானக மரங்களிலும் நிறைந்திருப்பதுபோல் பிராமணாரல்லாதார் மரபில் உருவாகியிருக்கும் வழிபாட்டு அம்சங்களும் பிராமணச் செல்வாக்கில் உருவானவையாகவே இருக்கின்றன. மலைக்கு மாலை போட்டுக் கொள்பவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருக்கவேண்டும். அந்த நாட்களில் தினமும் இரண்டு நேரம் குளிக்க செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் சரண கோஷம் முழங்கவேண்டும். மாமிச உணவு அறவே கூடாது. ஆண்- பெண் உறவு கூடாது. கடும் பிரம்மசரியம் கடைப்பிடித்தாகவேண்டும். பாலியல் வசைசொற்கள் பேசக்கூடாது. காலில் செருப்பு அணியக் கூடாது. குறிப்பிட்ட வயதுப் பெண்களிடமிருந்து முழுவதுமாக விலகி இருக்கவேண்டும். இறப்பு வீடுகளுக்குச் செல்லக்கூடாது.

இந்த விரதக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவேன் என்று உறுதி பூண்டு அதை உலகுக்கும் தனக்கும் அறிவித்துக்கொள்ளும் முகமாக காவி அல்லது கறுப்பு நிற உடை அணிந்துகொள்ளவேண்டும். காவி பிராமண துறவு மரபின் குறியீடு. கறுப்பு பிராமணரல்லாதாரின் கட்டற்ற சுதந்தர மனதின் குறியிடு. பிராமணர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வாழ் நாள் விரதத்தையும் சத்தியத்தையும் உலகுக்கும் அவர்களுக்கும் சதா நினைவுபடுத்தும்வகையில் பூணூல், குடுமி, பஞ்ச கச்சம், திறந்த மார்பு, நெற்றியில் விபூதி அல்லது திருமண் காப்பு என பல்வேறு தர்ம காப்புகள் - வேலிகள் அல்லது ஆபரணங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அதுபோலவே சபரி மலைக்கு மாலை போட்டுக்கொள்ளும் பக்தர்களுக்கும் ஏராளமான விஷயங்கள் வெளிப்படையான வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஐயப்ப பக்தர்களின் வெளிப்படையான குறியீடுகள் எதுவுமே ஓர் அதிகார அமைப்பு மேலிருந்து திணித்ததாக அல்லாமல் எளிய பக்தர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட விதிமுறைகளின் தொகுப்பு இது.

ஒட்டு மொத்த சமூகமுமே இந்த விதிமுறைகளை மதித்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பிராமணர்களை பிராமணரல்லாதவர்கள் சாமி என்று மரியாதையுடன் அழைப்பது வழக்கம். மலைக்கு மாலை போட்டுக்கொள்பவர்களை அந்தக் காலகட்டத்தில் அனைவருமே சாமி என்றே மரியாதையுடன் அழைப்பார்கள். அத்வைத தத்துவத்தின் நடைமுறை வெளிப்பாடு என்றும் சொல்லும் அளவுக்கு பக்தரையே தெய்வமாக மதிக்கும் வழிபாட்டு மரபு.

அப்படியாக பிராமண மரபு ஒருபக்கம்... பிராமணரல்லாத மரபு மறுபக்கம்... இறுக்கம்... நெகிழ்வு. ஆண் தன்மை ... பெண் தன்மை என இரண்டு முற்றிலும் மாறுபட்ட, அதே நேரம் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தும் இரு துருவங்களின் கலப்பினால் உருவான வழிபாடுதான் சபரி மலை ஐயப்ப வழிபாடு. இதுதான் எதிரிகளின் கண்ணை உறுத்தியிருக்கிறது. அதனால்தான் அந்த மரபைத் துல்லியமாகத் தாக்கியிருக்கிறார்கள்.

சபரி மலை வழிபாடு சுமார் ஐம்பது வருடங்களில் உருவாகி நிலைகொண்டதுதான் என்றாலும் அது பாரம்பரியத்தின் அழுத்தமான இயல்பான வலுவான நீட்சியாகவே இருந்துவந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அதில் பல நெகிழ்வுகள் (பிராமணரல்லாதார் மரபில் அது தவிர்க்க முடியாதுதானே) பல்வேறு நெகிழ்வுகள் உருவாகியிருக்கின்றன. ஒரு மண்டல விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு நாள் காலையில் மாலை அணிந்து கோவிலுக்குச் சென்று மறு நாளே திரும்பலாம். காவி, கறுப்பு உடை உடுத்து பணியிடங்களுக்குச் செல்ல முடியாதென்றால் கழுத்தில் சிறு துண்டு போட்டுகொண்டால் போதும். நடந்தே செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. மலையில் வாகனம் செல்லும் தொலைவுக்கு அதிலேயே போய்க்கொள்ளலாம் என்று தொடங்கி குக்கிராமங்களில் ஐயப்ப சாமிக்கென்று தனி க்ளாஸ் என்று சொல்லும்வரை சகல சுதந்தரமும் அதில் நுழைந்திருக்கின்றன. திரைப்படப் பாடல்களின் மெட்டில் ஐய்யப்பனுக்கான பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

பிராமண மரபும் அதற்கே உரிய சமரசங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நவீன உலகில் பெருந்திரளான மக்கள் பங்கெடுக்கும்போது ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத சமரசங்கள். இவை நிச்சயம் தவறுதான். ஆனால், தவிர்க்க முடியாதவை. இந்த மாற்றங்களுக்கு இடையேயும் அனைத்து விதிமுறைகளையும் கறாராகக் கடைப்பிடிக்க விரும்பும் ஒருவருக்கு (பக்தர்களில் கணிசமாணவர்கள் அத்தகையோரே) அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க இந்த நவீன உலகிலும் வாய்ப்பு இருந்துவந்திருக்கிறது. அது இருக்கும்வரை இந்த ஐயப்ப வழிபாடு தன் முக்கியத்துவத்தை இழக்காது. ஐய்யப்ப வழிபாடு இருக்கும்வரை இந்து ஒற்றுமையும் இருக்கும். எனவே அதைக் குலைக்கத்தான் இப்போது திட்டமிட்டிருக்கிறார்கள்.

மகர ஜோதி தொடர்பான “விஞ்ஞானபூர்வ’ ஆராய்ச்சிகள் எல்லாம் முன்பே தொடங்கிவிட்டிருக்கின்றன. அவற்றின் அடுத்த கட்டமாகவே பிரம்மசரியம் என்ற அம்சத்தை ஐய்யப்பனிடமிருந்து அகற்றும் முயற்சியில் இறங்கியிருகிறர்கள். ஐயப்பனின் பலமே அவருடைய பக்தர்கள் கடைப்பிடிக்கும் பிரம்மச்சரியமே... அதை பலவீனப்படுத்தினாலே போதும். ஊருக்கு நடுவே இருக்கும் பெரிய மரத்தை வெட்டருவாளோ கோடாலியோ பயன்படுத்தி வெட்ட முடியாது. எனவே அதில் சாதுவாக ஏறி மரத்தின் நடுத் தண்டில் சிறு துவாரம் செய்து அதில் பாதரசத்தை சிறிய அளவில் வைத்தால்போதும். மரம் இலைகள் உதிர்ந்து, கிளைகள் ஒடிந்து, நின்ற நிலையிலேயே பட்டுப்போகும். இப்போதைய தாக்குதல் கிட்டத்தட்ட அதுதான்.

பத்து -ஐம்பது வயதுப் பெண்கள் சபரி மலைக்கு வரத் தொடங்கினால் உண்மையாக ஒரு மண்டலம் பிரம்மச்சரிய விரதம் இருந்து கோவிலுக்கு வரும் உண்மையான பக்தருக்கு அது பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கும். அப்படி உண்மையான பக்தர்களை ஒரு இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினால் அதன் பிறகு அங்கு வருபவர்கள் அந்த வழிபாட்டு மரபின் சமரச பக்தர்களே. உண்மையான பக்தர்கள் போன பின் ஐய்யப்பன் இன்னொரு தெய்வம் மட்டுமே. யோகாவில் இருந்து அதன் இந்து ஆன்ம இலக்குகளை நீக்கிவிட்டு அதை வெறும் உடல் பயிற்சியாக மனப்பயிற்சியாக ஆக்கியதுபோல் பிரம்மச்சரிய ஐய்யப்பனை இன்னொரு தெய்வமாக்கும் செயல்தான் இது.

இந்து தர்மத்தின் விரோதிகள் விரும்புவது அதுவே...

நவீன காலத்துக்காகச் செய்யப்படும் சமரசம் என்றோ, சமத்துவச் செயல்பாடென்றோ, இந்து மதிப்பீடுகளை விமர்சிக்க அனுமதித்து அதன் மூலம் இந்து சக்திகளை ஓரணியில் திரட்டலாம் என்றோ எந்த காரணத்தின்படி இதை இந்து ஒருவர் ஆதரித்தாலும் அவர் பெரிய தவறொன்றையே செய்கிறார்.

சபரி மலை என்றுமே அங்கு இருக்கும். அது தொடர்பான பயம் தேவையில்லைதான். யோகாவுக்கு சர்வ தேசப் பெருமை (?!) தேடித்தந்ததுபோல் ஐய்யன் கோவிலுக்கும் மிகப் பெரிய சுற்றுலா வளர்ச்சியை உருவாக்கித் தரக்கூட முடியலாம். ஆனால், அங்கு நம் தர்மத்தின் காவலரான சாஸ்தாதான் இருக்கமாட்டார்.

No comments:

Post a Comment