Monday 22 October 2018

தர்மத்தைக் காத்தருள் தர்ம சாஸ்தாவே



அறிந்தும் அறியாமலும்

தெரிந்தும் தெரியாமலும்

அவர்கள் செய்யும் சகல குற்றங்களையும் 


பொறுத்துக் காத்தருள்


தண்டித்து 

தர்மத்தைக் காத்தருள் 



சபரி மலை விஷயத்தில் 10-50 வயதுப் பெண்கள் வரக்கூடாது என்ற பாரம்பரியம் ஏன் உருவானது என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவதாக, அமங்கல காலகட்டம் கொண்ட பெண்கள் வரவேண்டாம்; ஒரு மண்டல விரதம் இருக்க அவர்களால் முடியாது. இந்தக் காரணம்தான் பெரிதாக பலராலும் சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக இன்னொரு காரணமும் இருக்கிறது. அதிகம் பேசப்படாத அதுதான் உண்மைக் காரணம் என்றும் தோன்றுகிறது.

ஐய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. எனவே அவரைப் பார்க்க வரும் பக்தர்களும் அப்படியான கடுமையான பிரமச்சரிய விரதம் இருந்தே மலை ஏற வேண்டும்.

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது சாலை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் மலை ஏற்றம் என்பது பல நாட்கள் ஆகும் பயணம். ஓரிடத்தில் தங்கி வாழும் விவசாய சமூகத்தின் நல்லொழுக்கக் கண்காணிப்பு அமைப்புகள் நாடோடியாக பயணம் மேற்கொள்ளும் இடங்களில், நேரங்களில் சாத்தியமில்லை.

ஒரு மண்டல பிரம்மச்சரிய விரதம், கண்காணிப்பு சாத்தியமில்லாத பல நாள் மலைப் பயணம், நிலவு மட்டுமே பொழியும் குளிர் இரவுகள் இப்படியான சூழலில், அப்படியான இடத்தில் பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாகக் கடைப்பிடித்தாகவேண்டுமென்றால் பெண்கள் அந்தப் பகுதியில் வராமல் இருந்தால்தான் சாத்தியம். உடனே ஐய்யப்ப பக்தர்கள் மேல் நம்பிக்கை இல்லையா, பெண்கள் மேல் நம்பிக்கை இல்லையா என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்றால் ’ஆம் நம்பிக்கை இல்லை’ என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். மனதளவில் கூட அந்த விரதத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதே 10-50 வயதுப் பெண்களை அங்கு வர வேண்டாம் என்று சொல்ல முக்கிய காரணம்.

கோவிலுக்குச் செல்லும் நாட்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பது ஒரு விதிமுறை. எனவேதான் திருப்பதி, பழனி, சபரிமலை என லட்சக்கணக்கானோர் கூடும் இடங்களிலும் அந்த மலைகளில் அசைவ உணவு விற்கப்படுவதில்லை. எப்படி அசைவத் தவிர்ப்புக்கு உதவும் வகையில் அந்த மலைகளில் மாமிசக் கடைகளை அனுமதிப்பதில்லையோ அதுபோலவே பிரம்மச்சரிய விரதத்தை சிறப்பாகக் கடைப்பிடிக்க ஏதுவாக 10-50 வயதுப் பெண்களை சபரிமலைக்கு வராமல் தவிர்த்திருக்கிறார்கள்.

உண்மையில் அந்தக் காலகட்டம் என்பது அமங்கல நாட்களைக் கொண்ட காலகட்டம் மட்டுமே அல்ல... காமம் சார்ந்து செயலூக்கத்துடன் திகழும் காலகட்டமும் கூட. எனவே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களின் பிரம்மச்சரிய விரதத்தைக் காக்கும் நோக்கிலேயே அந்த வயதுப் பெண்களை அங்கு வரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் பர்தா அணிவதற்கும், மசூதிக்குள் பெண்கள் நுழையக்கூடாதென்பதற்கும் சொல்லப்படும் முக்கியமான காரணம் பெண் உடல் ஆணின் மனதில் காம எண்ணங்களைத் தூண்டிவிடும் என்பதுதான். அது ஒடுக்குமுறையின் உச்சபட்ச வடிவம். சபரி மலையில் சொல்லப்படும் கட்டுப்பாடு என்பது அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடக் கிடையாது. அதோடு அது நியாயமான நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் ஒழுக்கம். அதில் பெண்ணின் அமங்கலத் தன்மை குறித்த இழி பார்வையோ சமத்துவமின்மையோ நிச்சயம் காரணமில்லை.

அந்த வயதுப் பெண்களுக்கு மலை ஏறுவதில் ஏற்படும் சிரமங்கள், கர்ப்பப்பை பாதிப்பு போன்றவையெல்லாம் உண்மையான காரணமல்ல.

இந்தக் கோணத்தில் பார்த்தால், பிரம்மச்சாரியான ஐய்யப்பனின் சபரி மலைக்கு 10-50வயதுப் பெண்கள் வரக்கூடாது என்பது முழுக்க முழுக்க நியாயமான குறைந்தபட்ச ஒழுக்க விதி மட்டுமே. எனவே அது காக்கப்பட்டாகவேண்டும்.

ஆனால், சபரி மலை என்பது மேற்கத்திய கிறிஸ்தவ கலாசாரத் தாக்குதலின் மிக முக்கியமான களம். பெரும்பாலான இந்துக்கள் தங்களை இந்துவாக உணர்வது சபரி மலைக்கு மாலை போடுவதன் மூலமே. அவரவருக்கான குல தெய்வ வழிபாடுகள், இன்ன பிற சடங்குகள் என ஏராளம் இருக்கின்றன என்றாலும் அவையெல்லாம் ஒருவகையில் அவரவர் ஜாதி சார்ந்த அம்சங்களே. விநாயகர் வழிபாடு, சபரி மலை, ராம ஜென்ம பூமி போன்றவையே இந்துக்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள்.

இவற்றில் விநாயக சதுர்த்தி, ராம ஜென்ம பூமி போன்றவை வட இந்தியாவில் வெற்றிகரமாக அரசியல் உணர்வை ஊட்டும் விழாவாகவும் இயக்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவிட்டன. தென்னிந்தியாவில் சபரி மலை இயக்கம் இந்துக்களை அரசியல்ரீதியாகத் திரட்ட நிச்சயம் உதவும். அது இந்துக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எதிரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. எனவேதான் அதைத் தகர்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தகர்க்க அவர்கள் எடுத்த முயற்சியையே ஒருங்கிணைக்கக் கிடைத்த வாய்ப்பாக நாம் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும்.

வேற்று மதத்துப் பெண்கள், நாத்திகர்கள் போன்றோரை மலை ஏற வைத்ததென்பது எதிரியின் பலவீனமானதும் சீண்டலை நோக்கமாகவும் கொண்ட காய் நகர்த்தல். ஒருவகையில் உள்ளே வரவிட்டு அடிப்பதுபோன்ற தந்திரம் என்றே தோன்றுகிறது. அல்லது இந்துகளில் சிலரை கோபத்தின் விளிம்புக்குத் தள்ளும் நோக்கம் கொண்ட வலை விரிப்பு.

இந்துக்களில் இருந்தே ஆயிரக்கணக்கானோரை எதிரிகளால் தயாரித்து அனுப்பிவைக்கமுடியும். ஜாதிய மோதல், மத மோதல், மொழி மோதல், வட இந்திய தென் இந்திய மோதல், அரசுக்கும் நீதித்துறைக்கும் எதிரான கலவரம் என பல கோணங்களில் இதை அவர்களால் திசை திருப்பவும் முடியும்.

எனவே, நமக்கு மிகுந்த கவனம் தேவை.

லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்கணக்கில் போராடுவது கோவில் மூடப்படவேண்டும் என்பதற்காக அல்ல; ஆனால் அது நடக்கும் என்று கோவில் நிர்வாகத்தையே சொல்லவைக்கமுடிகிறது. மறைந்து தாக்கும் எதிரி ஓரிரு பெண்களை வைத்து கோவிலை மூடிக்காட்டுவேன் என்று சொல்லாமல் சொல்லி வென்றும் காட்டுகிறான். பால் குடத்தில் அல்ல பாலாற்றில் அல்ல பாற்கடலிலேயே ஒரு துளி விஷத்தைக் கலந்து அதைப் பாழ்படுத்துகிறான்.

மக்களாட்சியில் நீதிமன்றம் சொல்வதே வேதம் என்று செலக்டிவ் ஞானோதயம் பெறும் கட்சிகள், ஆட்சிகளை மீறி எளிய மக்களின் பக்தர்களின் ஆதரவால், பக்தியால் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டுவிட முடியாது.

இந்திய நீதிமன்றம் இந்து உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது.

மாநில அரசு முன் கைஎடுக்காமல் சட்டத் திருத்தம் சாத்தியமில்லையெனில், மத்திய அரசால் நீதித்துறையில் சீர்திருத்தமும் சாத்தியமில்லையெனில் நியாயமான மக்கள் போராட்டமும் சட்ட மீறலாகவே பார்க்கப்படும். மேலும் ஒரு மக்கள் கூட்டத்தை கையாள எந்தத் தலைவராலும் முடியாது. கம்யூனிஸ்ட் அரசு தனது அத்தனை அடக்குமுறையையும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முயற்சி செய்கிறேன் என்ற போர்வையில் நியாயப்படுத்திக்கொண்டுவிடும்.

*

மத விவகாரங்களில் அரசு, நீதித்துறை தலையிடக்கூடாது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்... எந்த அளவுக்கு சரி என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.

நிச்சயமாக இதில் பொதுவான பதிலைச் சொல்லிவிடவே முடியாது. ஒவ்வொரு தனித்தனி விஷயம் சார்ந்தே இதைக் கையாளவேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தமது கோவிலில் திருவிழாவின் போது வேறொரு ஜாதியினர் தீ மிதிக்க அனுமதி இல்லை என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இங்கு பாரம்பரியம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தீ மிதித்து வருவதுதான். அதைக் காப்பாற்ற அவர்களுக்கு உரிமை உண்டா கிடையாதா..?

குறிப்பிட்ட ஜாதியினரை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்வது நிச்சயம் தவறு என்பது இன்று பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டிருக்கிறது. அவர்களே கூட தீ மிதி விழாவைப் பொறுத்தவரை வேறொரு நாள் தீ மிதித்துக்கொள்ளுங்கள் என்றோ உங்களுக்கென்று தனி பூக்குழி வைத்துக்கொள்ளுங்கள் என்றோ சொல்கிறார்களென்றால் அதை எப்படி அணுகுவது?

பாரம்பரியம் என்பதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று அவசியமில்லை. அந்த வழிமுறைக்கு எது ஆதார அம்சம் என்பதைப் பார்த்தே முடிவெடுக்கவேண்டும்.

பர்தாவுக்கு ஆணாதிக்கம் காரணம் என்பதால் அதை மாற்றச் சொல்ல நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு. ஆலய நுழைவு மறுப்புக்கு ஜாதிப் பெருமிதம் காரணமென்றால் அதை மாற்றச் சொல்ல அரசுக்கு அதிகாரம் உண்டு.

பெண்களை போப்களாக நியமிக்கவோ, திருப்பலி பூஜை செய்யவோ, பாவ மன்னிப்பு வழங்கவோ மறுத்தால் அதில் தலையிட்டு சமத்துவத்தைக் கொண்டுவர நீதித்துறைக்கு உரிமை உண்டு. ஏனென்றால் அது சமத்துவ மறுப்பு.

கோவில் அமைந்திருக்கும் மலைப் பகுதியில் அசைவக் கடைகள் இருக்கக்கூடாதென்று விதிமுறை இருந்தால் அதை மாற்ற அரசுக்கு உரிமை கிடையாது. ஏனென்றால் அந்த வழிமுறை எந்தவொரு ஒடுக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

பிரம்மச்சாரி கடவுளை பிரம்மச்சரிய விரதம் இருந்து வணங்க வேண்டும்; அதற்குத் தோதாக பெண்கள் அந்தப் பகுதியில் வரக்கூடாது என்று சொல்லப்பட்டால் அதை மாற்ற நீதித்துறைக்கு அதிகாரம் கிடையாது. ஏனென்றால் அது சமத்துவ மறுப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

கோவில்களில் மிருக பலி கூடாது என்று ஒரு தீர்ப்பு வருகிறதென்றால் அதை எப்படி அணுகவேண்டும். இந்தப் பழக்கத்தின் பின்னால் இருப்பது தொல் பழங்குடி நம்பிக்கை. ஓர் எளிய உயிரின் படுகொலை. அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து மனித இனம் நகரவேண்டிய நாகரிகப் பயணமானது முதலில் கோவிலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது நியாயமான சீர்திருத்தமே.

அப்படியாக பாரம்பரிய அம்சங்களில் எதை மாற்றலாம் மாற்றக்கூடாது என்பவற்றில் நிதித்துறையும் அரசும் நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் அரசியல் செய்யக்கூடாது.

*

அடுத்ததாக, சபரி மலை விஷயத்தில் எதிரி என்னென்ன துருப்புச் சீட்டுகளை இறக்குவார்... அதை எப்படி எதிர்கொள்வது என்பதை நாம் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு எதிரானதாக மட்டுமே இப்போது முன்வைக்கப்படும் இந்த மோதலானது வட தென் இந்திய மோதலாகவும், ஜாதி மோதலாகவும் மாநில மோதலாகவும் மத மோதலாகவும் திரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

வட இந்திய – தென் இந்திய மோதல்

வட இந்தியக் கோவில்களில் கருவறைக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி உண்டு. பக்தர்களே கடவுளுக்கு நேரடியாக அபிஷேகம் கூடச் செய்ய முடியும். தென்னிந்தியக் கோவில்களில் அந்த அனுமதி இல்லை. நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு தீர்ப்பு வழங்கினால் வட இந்தியர்கள் கருவறைக்குள் அனுமதியுங்கள் என்றுதான் சொல்வார்கள். அதற்காக அவர்கள் நமது எதிரிகள் என்றோ நம் உணர்வைப் புரிந்துகொள்ளவில்லையென்றோ அர்த்தமில்லை. இந்து பன்மைத்துவத்தின் இயல்பு இது. ஒற்றைப்படையை அது எங்குமே எதிலுமே அனுமதிக்காது. எனவே, இது சார்ந்து வட இந்திய மனோபாவத்தை நாம் எதிர்க்கவேண்டாம். அது எதிரி விரித்திருக்கும் வலை. கவனம் தேவை.

ஜாதிய மோதல்

கடைநிலை ஜாதியினரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகளின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் அதிகம். சபரி மலை விவகாரத்தை ஜாதிய மோதலாக ஆக்க எதிரியால் எளிதில் முடியும். ஐய்யப்ப பக்தர்களில் கடைநிலை ஜாதி ஆண்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள் என்பது உண்மைதான். எனினும் ஒரு சில கடை நிலை ஜாதிப் போராளிகளை முன்னிறுத்தி ஜாதிய மோதலாக இதைத் திசை திருப்ப எதிரி நிச்சயம் திட்டமிட்டு வைத்திருக்கிறான்.

கேரள வெள்ளத்தின் போது மேல் ஜாதி கிறிஸ்தவர்கள் தாழ்ந்த ஜாதி கிறிஸ்தவர்களுடன் ஒரே முகாமில் தங்க மாட்டேன் என்று சொன்னதை நாம் பார்த்திருக்கிறோம். தாய் மதத்திலும் அது சார்ந்து சீர்திருத்தம் இன்னும் தேவைப்படத்தான் செய்கிறது. தாழ்ந்த ஜாதி ஐய்யப்ப குருசாமிகளின் தலைமையில் பிற ஜாதி ஐய்யப்ப பக்தர்கள் மலைக்குச் செல்லுதல், மேல் ஜாதி ஐய்யப்ப குருசாமிகளின் தலைமையில் தாழ்ந்த ஜாதி ஐய்யப்ப பக்தர்கள் அணி திரளுதல் என ஜாதி கடந்த சமூக, மத ஆன்மிக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நிகழ்வுகளை அதிகரிக்கவேண்டும்.

பெண்ணிய, நாத்திக, கம்யூனிஸ அமைப்புகளில் இருந்து சமத்துவம் கோரி போராடும் போராளிகளுக்கு, காத்திருக்கத் தயார் என்று சொல்லும் பெண் பக்தைகள் குழு சென்று வகுப்புகள் எடுக்கவேண்டும். அவர்களுடைய கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று சரண கோஷங்கள் எழுப்பவேண்டும். தெய்வத்தின் சன்னிதானத்துக்கு நாத்திகர்கள் வர ஆர்வம் காட்டுவதுபோலவே நாத்திகர்களின் அலுவலகங்களுக்குச் சென்று பக்தர்கள் சில விஷயங்களைக் கற்றுத் தரவேண்டும்.

மாநில மோதல்

மொழி (மாநிலம்) சார்ந்த மோதலாக இது திசைதிருப்பப்படவும் வாய்ப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட மாநில பக்தர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த மாநில மக்கள் மீதான தாக்குதலாக அது திசை திருப்பப்பட வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் ஏற்கெனவே அது சார்ந்த இடைவெளிகள் உருவாக்கப்பட்டு வைத்திருக்கும் நிலையில் சபரி மலை விவகாரம் அதை மேலும் சீர்குலைத்துவிடக்கூடும். அதாவது அதைப் பயன்படுத்தி இடைவெளியை மேலும் அதிகரிக்க பிரிவினை சக்திகள் முனையும். இதை எதிர்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கும் பிற மாநில பக்தர்கள் மண்டல விரதத்தை அந்த மாநில பக்தர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஒற்றுமையை பலப்படுத்திக்கொள்ளவேண்டும். இரு மாநில அரசியல் சக்திகளிடம் சிக்கிக்கொண்டுவிடக்கூடாது.

மத மோதல்

வாபர் மசூதிக்கு சென்று ஐய்யப்ப பக்தர்கள் வழிபடுவதென்பது மத நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. போராளிகளில் ஒருவர் இஸ்லாமியர் என்பதால் இந்து முஸ்லிம் மோதலாக இதைச் சித்திரிக்கும் போக்குகளும் தொடங்கியிருக்கின்றன. வாபர் மசூதிக்கு ஐய்யப்ப பக்தர்கள் போகக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக ஒரு வதந்தி பரப்பட்டிருக்கிறது. இது சார்ந்து தூண்டப்படுபவை நிச்சயம் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். பெண் பக்தைகளின் உணச்சிமயமான எழுச்சியாக இருக்கும் இந்த இயக்கம் மத மோதலாக மாற்றப்பட்டால் பெண்கள் முற்றாக ஓரங்கட்டப்பட்டுவிடுவார்கள். அது நல்லதல்ல. இந்த இயக்கம் ஆதி முதல் அந்தம் வரை பெண்கள் முன்னெடுக்கும் பாரம்பரியப் பாதுகாப்பு இயக்கமாகவே இருக்கவேண்டும். ஆண்கள் இதில் ஆதரவு தரலாம். தலைமை தாங்கத் தேவையில்லை.

இந்த விஷயத்தை எதிரிகள் திசை திருப்பும் இன்னொரு எளிய அபாயகரமான வழி என்பது இந்த எழுச்சியை பாஜக-ஆர்.எஸ்.எஸ்.-பஜ்ரங்தள், வி.ஹெ.பி. போன்ற இயக்கங்களின் பின் துணையுடன் நடப்பதாக முத்திரைகுத்துவதுதான். ராம ஜென்ம பூமியை தேசம்முழுவதும் கொண்டு சென்றதற்கு இந்த அமைப்புகளே காரணம். அங்கு ராமருக்கு கோவில் இன்னும் எழும்பாமல் இருக்கவும் ஒருவகையில் அவர்கள் செயலே காரணம்.

எளிய பக்தைகளின் எழுச்சியான இந்த சபரி மலை இயக்கம் இதைவிடப்பெரிய ஆதரவுடன் முன்னகர வேண்டுமானால் எதிர் தரப்புக்கு எந்தவொரு நியாயமும் எடுத்துத் தரப்பட்டுவிடக்கூடாது. அவர்கள் இல்லாததையே இருப்பதாக பெருக்கிக் காட்டக்கூடியவர்கள். கள்ள மெளனம் சாதிக்கும் அனைத்து நடுநிலை மாமேதைகளும் அந்தத் தருணத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இருக்கும் ஒற்றை தார்மிக பலத்தையும் இழப்பதென்பது இரும்புக்குண்டைக் கட்டிக் கொண்டு பறக்க முயற்சி செய்வதைப் போன்றதுதான். சிறைக்கம்பிகளுக்குப் பின்னே இன்னொரு தெய்வத்தையும் பூட்ட வேண்டாம். எனவே, இந்த இயக்கம் முழுக்க முழுக்க தேசம் முழுவதிலும் உள்ள பெண்கள் ஐய்யப்பனின் பிரம்மசரிய விரதத்துக்குத் தரும் மரியாதை என்ற அளவிலேயே ஒருங்கிணைக்கப்படவேண்டும். ஒரு ஆண்பக்தர் மனதளவில் கூட தனது பிரம்மசரிய விரதத்தில் இருந்து பிறழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுப்பாடு உருவாக்கப்பட்டிருப்பதால் அதை மனப்பூர்வமாக காப்பது தமது கடமை என்று உண்மையான பெண்ணிய நோக்கில் போராடவேண்டும்.

ஐய்யப்பன் வெறும் இந்து தெய்வமாக மட்டுமே இருக்கவில்லை. ஜாதி நல்லிணக்கம், தேச ஒற்றுமை, மாநில-மொழி ஒற்றுமை ஓரளவுக்கு மதநல்லிணக்கம் இவற்றை நடத்திக்கொடுப்பவராகவும் இருக்கிறார். ஐய்யனின் அந்த அம்சங்களையும் நாம் தக்கவைத்துக் கொண்டாகவேண்டும்.

இரு முடி கட்டுவதென்பதை ஜாதி ஒற்றுமை, மாநில ஒற்றுமை ஆகியவற்றுக்கான சமூக நிகழ்வாக விரிவுபடுத்தவேண்டும்.

ஒரு மண்டல விரதம் என்பதை மீண்டும் முழு அளவில் முன்னெடுக்க இந்த எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஐய்யப்பசாமியின் டோக்கன் அடையாளமாக கறுப்பு, காவி துண்டு அணிந்து வருவது கூட தற்போது அருகிவருகிறது. அதை மாற்றி முழு ஐய்யப்ப உடையுடன் அலுவலகங்களில் ஐய்யப்ப பூஜைக்கென தனி அறை அமைத்து சரண கோஷங்கள் முழங்கவும் வழி செய்யவேண்டும்.

நவீனத்துவம் என்ற பெயரில் நாம் கைவிட்ட நம் பாரம்பரியத்தையும் இந்த எழுச்சியின் மூலம் நாம் மீட்டுக்கொண்டாகவேண்டும்.

No comments:

Post a Comment