Friday 6 July 2018

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் (3)


அம்பேத்கர் யாருடைய அரசியல் சாசனத்தை எழுதினார்?


கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அமலாவதோடு, அப்படிப் படித்துப் பணியில் அமர்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கே சேவை செய்ய முன்வரவேண்டும் என்றொரு நிபந்தனையையும் அவர் முன்னெடுத்திருக்கவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து ஒருவர் மருத்துவராக நகரத்துக்குச் சென்று மேல் ஜாதியினருக்குச் சிகிச்சை செய்வதால் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அந்தத் தனி நபருக்கு ஒரு பெரிய விடுதலையாக இருக்குமே தவிர அவருடைய ஜாதிக்கு அல்ல.


தனி நபர் வாதம், தொழில் சுதந்தரம் என்பவையெல்லாம் மேல் ஜாதியினருக்கு உகந்தவை. ஏனென்றால் அவர்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் நலன்கள் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அப்படி அல்ல. எனவே அவர்களுக்கு தனி நபர் வாதத்தைவிட குழு – குல மனப்பான்மையே வெற்றியைத் தரும். சட்டம் படித்து முடித்த அம்பேத்கர் வழக்கறிஞராகத் தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?


பிராமணர்கள் போன்ற மேல் ஜாதியினர் இந்தியாவில் படித்துமுடித்துவிட்டு மேற்கத்தியர்களுக்கு, குறிப்பாக நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு, சேவை செய்ய பெரு மதில் சூழ் தூதரகங்களின் வாசலில் கால்கடுக்கக் காத்து நிற்பதை சமூக அக்கறை மட்டுமல்ல சுயமரியாதை உள்ள ஒருவர் கூட ஏற்கமுடியாது. அதுபோலவேதான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி பெற்று மேலே வரும் ஒருவர் மேல் ஜாதியினருக்கு சேவை செய்வதைவிட தன் சமூகத்தினருக்குக் கூடுதல் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதும்.



இதைத் தியாகம் என்றோ, சேவை என்றோ கருதாமல் கடமையாகக் கருதச் செய்திருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் உயர் கல்வி பெறுபவர்கள் அனைவருமே நமது தேசத்தில் நமது சமூகத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை மேலேற்றும் வகையிலான தொழில்கள், வேலைகளையே முன்னெடுக்கவேண்டும் என்று வரையறுத்திருக்கவேண்டும். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், அரபு நாடுகள் என பலவற்றில் ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டிருப்பதுபோல் சமூக சேவைக்கு குறிப்பாக கடைநிலை ஜாதியினரின் மேம்பாட்டுக்கு அனைவரும் ஓரிரு வருடங்கள் செலவிட்டாகவேண்டும் என்று சட்டமியற்றியிருக்கவேண்டும். காந்தி தன்னுடைய சீடர்களையும் ஆதரவாளர்களையும் தத்தமது வாழ்க்கையையே ஹரிஜன மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். இங்கே தனி மனித சுதந்தரம் என்பதைவிட சமூக நலனே முக்கியம். அம்பேத்கர் மேற்கத்திய தனி நபர் வாதத்தைக் கண்டு மயங்கினார். அல்லது ஏமாந்துவிட்டார் என்று கூடச் சொல்லலாம்.


ஒரு ஐரோப்பியருக்கு, அமெரிக்கருக்கு தேச பக்தி, சொந்த சமூக முன்னேற்றம் எல்லாம் அவர்களுடைய இயல்பான மேட்டிமைக் குணத்தில் இருந்து உருவாகிவிட்டிருக்கின்றன. எனவே, அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் யாரும் சொல்லாமலேயே அவர்களுடைய தேச, சமூக நலனுக்கு உகந்த செயல்களையே செய்வார்கள். அப்படியான புரிதல் கொண்டவர்களை சுதந்தரமாக இருக்க அனுமதிப்பதில் எந்தத் தவறும் பாதிப்பும் இல்லை. தனிநபர்வாதம், தொழில் சுதந்தரம் தேவை என்று அவர்கள் (மட்டுமே) முழங்கலாம்.



ஓர் இந்தியருக்கு அப்படியான தனிநபர் வாதம் மிகவும் ஆடம்பரமானதுதான். இந்தியாவை மேம்படுத்தும் பணிக்கே அவர் முக்கியத்துவம் தரவேண்டும். அதைவிட ஒரு தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை முன்னேற்றுவதற்கே முன்னுரிமை தரவேண்டும். அம்பேத்கர் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதுபோல் மேற்கத்தியரைப் பார்த்துத் தனி நபர் வாதத்தை முன்னெடுத்தார்.


இந்திய ஜாதி அடையாளமும் குழு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அதற்கு நேர்மாறாக தனி நபர் வாதத்தை அவர் முன்வைத்தார் என்றொரு வாதம் முன்வைக்கப்படமுடியும். ஒன்றாக இருக்கும் சிங்கங்களையும் புலிகளையும் நரிகளையும் தனித்தனியாக்கினால் அவற்றை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பது சரிதான். ஆனால், அப்படி அவற்றைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் பலவீனமான ஆடு மாடுகளும் தனித்தனி ஆகிவிடும் என்பதை அவர் முன் யூகிக்கவில்லை.


இன்று இட ஒதுக்கீடும் அரசியல் கட்சிகளும்தான் ஜாதி அடையாளத்தைப் பெரிதும் நினைவுபடுத்துபவையாகவும் தக்கவைக்க உதவுபவையாகவும் இருக்கின்றன. இது மிகவும் பிழையான நிலை. இதனால்தான் கிராமப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிக்கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிநபர் வாதம், தொழில் சுதந்தரம் எல்லாம் வெகு ஆடம்பரமான கோட்பாடுகளே… எட்டாக்கனிகளே. கல்வியறிவு பெற்ற தாழ்த்தப்பட்டவரே கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கு உதவ வேண்டும். தனி நபர் வாதம் அங்கு செல்லுபடியாகாது. அரசியல்சாசனம் இதற்கான உத்தரவாதத்தை நிபந்தனையை விதித்திருக்கவேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் இட ஒதுக்கீடு தேவைப்படுபவர்களுக்கே சேவைபுரியவேண்டும் என்று சொல்லியிருந்தால்கூட ஒரே சலுகையில் இருமடங்கு பலன் கிடைத்திருக்கும்.



அப்படியாக, மேற்கத்திய சிந்தனைகளின் அடிப்படையிலான அம்பேத்கரின் அரசியல் சாசனப் பங்களிப்பு அவருடைய மக்களுக்கு எந்தவகையிலும் உகந்ததாக இருந்திருக்கவில்லை.


இந்து திருமணம், தத்தெடுத்தல், பெண்களுக்கான சொத்துரிமை போன்ற விஷயங்களில் அம்பேத்கருக்கு பெரிதாக என்றுமே ஆர்வம் இருந்திருக்கவில்லை. முதலும் முடிவுமாக ஜாதி சார்ந்த சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையே அம்பேத்கரின் இலக்காக இருந்தன. எனவே இந்து சட்ட விவகாரத்தில் நேருவுடனான மனஸ்தாபத்தினால் ராஜினாமா செய்வதாகச் சொன்னது மெய்யாகவே மெய்யான காரணமாக இருந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

இத்தனைக்கும் அம்பேத்கர் இந்த இந்து சட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த விரும்பியபோது போதிய ஆதரவு இல்லை என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த நேரு அம்பேத்கர் பதவி விலகியதும் நான்கே ஆண்டுகளில் அவற்றைச் சட்டமாக்கிவிட்டார்.


அதோடு, விவாகரத்து, பெண்களுக்குச் சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்றவையெல்லாம் நவீன காலத்தில் இயல்பாக, சட்டம் எதுவும் இல்லாவிட்டாலும் உருவாகி வந்திருக்கவே செய்யும். சிறு வயது திருமணத் தடை, மேல் ஜாதி விதவைகளின் வேதனை நிறைந்த நிலை மாற்றம், பெண் கல்வி என எல்லாம் ஏற்கெனவே நடந்தேற ஆரம்பித்துவிட்டிருந்தன. காந்தியின் அஹிம்சை வழியிலான போராட்டம் வேறு பெண்களை சமூக முன்னேற்றத்தில் பெருமளவில் பங்குபெறவைத்திருந்தன. அந்தவகையில் இந்து சமூகம் காலத்துக்கு ஏற்ப தன்னை அழகாக வெகு விரைவிலேயே மாற்றிக்கொண்டுவிடுவதாகவே இருந்துவந்திருக்கிறது. பர்தா, முத்தலாக் போன்ற விஷயங்களில் கூட இந்துப் பெரும்பான்மை தேசத்தில் இருப்பதால் இஸ்லாமியப் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் சுதந்தரம் எளிதில் கிடைக்கும் வகையிலேயே இருந்துவருகிறது. எனவே, இந்து சட்ட சீர்திருத்தத்துக்காக அம்பேத்கர் அதிகம் மெனக்கெட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.

பட்டியல் சாதியினருக்கும் பின் தங்கிய வகுப்பினருக்கும் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றொரு காரணத்தையும் பதவி விலகிய நேரத்தில் சொல்லியிருக்கிறார். உண்மையில் அதுவே சரியான காரணமாக இருக்கும். அதிலும் பின் தங்கிய பிரிவினர் தமது எண்ணிக்கைபலத்தினால் தமக்கான உரிமைகளை எளிதில் பெற்றுவிடும் நிலையில்தான் இருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுடைய நிலைதான் சிக்கலாக இருந்தது. இருக்கிறது. அம்பேத்கர் அது சார்ந்து தான் விரும்பிய எதையும் செய்ய முடிந்திருக்கவில்லை.


ஆரம்பத்திலிருந்தே தயக்கத்துடன் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற அம்பேத்கருக்கு உண்மையில் ராஜினாமா செய்ய காரணம் சொல்லவே வேண்டியிருந்திருக்கவில்லை. ஏன் சேர்ந்தார் என்பதற்குத்தான் காரணம் சொல்ல வேண்டியிருந்தது.


*

அம்பேத்கர் இந்து மதத்தின் கிளை மதம் போன்ற பெளத்தத்துக்கு நகர்ந்தபோது மிகவும் புரட்சிகரமானதாக அவர் கருதிய பல உறுதிமொழிகளை எடுக்கவைத்திருந்தார். இந்துக் கடவுள்களைப் பெயர் சொல்லி நிராகரிப்பதில் ஆரம்பித்து சிராத்தச் சடங்குகள் கூடச் செய்யக்கூடாது என்று நெஞ்சில் துளியும் ஈரமற்று வற்புறுத்துவதுவரை அவர் தாழ்த்தப்பட்டமக்களின் உணர்வுகளைத் துளியும் பொருட்படுத்தாமல் மேலிருந்து அனைத்தையும் தீர்மானிப்பவராகவே இருந்தார். இந்திய அரசியல் சாசனத்தில் அந்த அம்பேத்கரைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது.

(பிராமண புரோகிதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதென்றால் சிராத்த சடங்குகளை ஆண், பெண் பிக்குகளைக் கொண்டு செய்வித்தல் என்பதாகவோ இறந்தவர்களில் பெண்களுக்கான நீத்தார் சடங்கு தான தட்சணைகளை நலிவடைந்த பெண்களுக்குத் தருவதாகவோ ஆக்கியிருந்தாலே போதுமானது. அது தாழ்த்தப்பட்டவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்ததாக அவர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்கும். காகங்களை முன்னோரின் ஆன்மாகவாக நம்பும் பூமியில் குறுக்கும் மறுக்குமாக காகங்கள் உலவிக்கொண்டிருக்கும்வரையில் முன்னோரை மறக்கச் சொல்ல முடியுமா என்ன..? இதுதான் மேற்கத்தியத் தாக்கம் பெற்ற மனதுக்கும் இந்திய சீர்திருத்த மனதுக்கும் இடையிலான வித்தியாசம்)


இந்திய அரசியல் சாசன உருவாக்கம் போன்ற அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தன்னுடைய சொந்த (சொந்த ஜாதி) அரசியல் சார்ந்த விஷயங்களை அதில் இடம்பெறச் செய்ய முடியாதென்பது உண்மைதான். எனினும் அம்பேத்கர் போல் கலகக் குணம் கொண்ட ஒருவர் அரசியல் சாசனம் போன்ற ஒன்றை உருவாக்க ஒப்புக்கொள்வதென்பது மிகப் பெரிய சமரசமே. உண்மையில் பாபு ஜெகஜீவன் ராம், எம்.சி.ராஜா போன்ற சீர்திருத்த தலித்தியர்கள் என்ன செய்ய விரும்பினார்களோ அதையே அம்பேத்கரும் செய்தார். செய்ய முடிந்தது.



வால்மீகியைக் கொண்டு ராமாயணம் எழுதிக் கொண்டார்கள். வியாரைக் கொண்டு மகாபாரதம் படைத்துக்கொண்டார்கள். என்னை வைத்து அரசியல் சாசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று அம்பேத்கர் சொன்னதாகப் படித்த நினைவு (முந்தைய இரண்டைப் போலவே பிந்தையதும் அதனளவில் ஒரு மாபெரும் சாதனையே என்றாலும் எழுதியவர் விரும்பியது அது அல்ல. எனவே, அதை அவருடைய சாதனையாகச் சொல்வது அவருக்கு உவப்பில்லாத விஷயமே).


கொம்பால் மண்ணைக் குத்திக் கிளறி மரங்களை முட்டி வீழ்த்தி கானகத்தில் உறுமியபடி உலா வந்த காளை ஒன்று மூக்கணாங்கயிறு போடப்பட்டு லாடம் அடிக்கப்பட்டு வண்டியில் பூட்டப்பட்டதுபோலவே அவருடைய நிலை அவருக்கு இருந்தது. ஆனால், ஓர் இந்தியராக, இந்துவாக இருந்து பார்க்கும்போது அவருடைய இந்த மாற்றம் உண்மையில் பனி மலையில் இருந்து தடதடவென உருகி, வழியில் தென்பட்ட மரங்களையெல்லாம் பெயர்த்தபடிக் கீழிறங்கிய பேராறு ஒன்று சமவெளியை அடைந்து கரையோர நிலங்களையெல்லாம் செழிப்பித்ததுபோல் இருப்பதாகவே சொல்ல முடியும் (பல களைகளும் செழித்து வளர வழி செய்திருக்கும் நிலையிலும்). எனவே, அம்பேத்கர் அவருடைய இயல்புப்படி இருக்கமுடியாமல் போனது அவருடைய அரசியலுக்குச் சாபம். இந்தியாவுக்குப் பெரும் வரமே.


அம்பேத்கருக்கு, தன்னுடைய கருத்துகளில் மேற்கத்திய நகலான நேருவுடைய கருத்துகளுடன் ஒத்துப்போகிறவற்றை மட்டுமே அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்ய முடிந்தது. நேரு உண்மையில் அம்பேத்கரைப் பயன்படுத்தி காந்தியத்தை ஓரங்கட்டினார் என்பதுதான் உண்மை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நேருவின் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் தன் மறைமுக ஆட்சி தொடரவே வழி செய்திருக்கிறது.

(பலர் பார்க்க யுனியன் ஜாக்கை இறக்குவது பிரிட்டிஷர் மனதை வேதனைப்படுத்தும் என்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்ட நொடியிலிருந்தே சிந்தித்த கண்ணியமான விசுவாசி எல்லா விடைபெற்றுச் செல்லும் கொடூர ஏகாதிபத்தியங்களுக்கும் கிடைத்துவிடுவார்களா என்ன? சீனா சுதந்தரம் பெற்றதும் முதல் வேலையாக பிரிட்டிஷ் காலனிய அடையாளங்களைத் துடைத்தழித்தது. நாமோ சுட்டெரிக்கும் பூமியில்  கறுப்பு கோட் போட்டுக்கொண்டு மைலர்ட் என்று விளித்துக்கொண்டு ஜார்ஜ் கோட்டை எனப் பெயர் வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நம்மை அடக்கி ஆண்டவர்களின் கல்லறைகளின் மெழுகுவர்த்திகள் அணையாமல் பார்த்துக்கொண்டுவருகிறோம். நம்மை அடிமைப்படுத்தியவன் செதுக்கிவைத்த கல்வெட்டுக்களை தினந்தினம் துடைத்துப் பளபளப்பாக்கிக் கொண்டுவருகிறோம்.

அவர்கள் நமதுஅடையாளம் என்று சொல்லிக்காட்டிய தாஜ்மஹாலைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ராஜராஜன் கட்டிய பெரியகோவிலைக் கீழே தள்ளிவிட்டுப் பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நினைத்துப்பாருங்கள்... நாட்டு மக்கள் தொகையில் 80-85 சதவிகிதமாக இருக்கும் இந்துக்களில் பெரும்பான்மையான சைவர்களின் முதன்மைத் தெய்வமாகவும் எஞ்சிய வைஷ்ணவர்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகவும் இருக்கும் சிவபெருமானுக்குக் கட்டப்பட்ட கோவில்தானே நம் பாரம்பரியத்தின் தேசத்தின் உன்னதமான துல்லியமான எடுத்துக்காட்டு. அழகியல் கோணத்திலும் கட்டுமானத் தொழில் நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் அது அல்லவா இந்தியாவிலேயே உயர்வானது. ஆனால், ஆங்கிலேயர் தாஜ்மஹாலை இந்தியாவின் அடையாளமாகச் சொல்லிவிட்டுச் சென்றிருப்பதால் நாமும் அதையே சுமந்துகொண்டு திரிகிறோம். மேற்கத்திய தாக்கம் பெற்ற அம்பேத்கரும் நேருவும் உருவாக்கியிருக்கும் இந்தியா அல்ல உண்மையான இந்தியா)


சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய அரசியல் சாசனம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களுடைய கலாசார, பாரம்பரிய, அடையாள மீட்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் போதிய அளவு உதவியிருக்கவில்லை. அந்தவகையில் அது அம்பேத்கரின் தோல்வியே.


இரண்டாவதாக அது நேருவியத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது. அந்த மேற்கத்திய பாணி வளர்ச்சியானது சொற்ப ஆதிக்க ஜாதி, மத சக்திகளுக்குப் பொருளாதார நலனை மட்டுமே உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. தனி நபர்வாதம், ஒருபக்க பேச்சு சுதந்தரம், போலி மதச்சார்பின்மை, வேர்ப்பிடிப்பற்றுப் போவது என மேற்கத்திய நகலாகவே நம்மை ஆக்கிவருகிறது. அந்த வகையில் அதுவும் விரும்பத்தகுந்த வளர்ச்சி அல்ல.

தன் தந்தத்தையே ஒடித்து, கை நோக, வேக வேகமாக எழுதியது விநாயகர்தான் என்றாலும் அது வியாச பாரதமேதான் இல்லையா? அந்தவகையில் 
அம்பேத்கர் என்ற தந்தம் கொண்டு 
நேரு என்ற விநாயகர் 
(தெய்வங்கள் என்னை மன்னிக்கட்டும்!) 
கை நோக எழுதிய இந்திய அரசியல் சாசனத்தை 
உத்தரவிட்டு எழுதச் செய்த மாய வியாசரின் கழுத்தில் 
கண்ணைக் கூசவைக்கும் பளபளப்புடன் மின்னுவது 
பிரிட்டிஷ் சிலுவையே.


(தொடரும்)

No comments:

Post a Comment