Friday 6 July 2018

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் (2)

அம்பேத்கர் யாருடைய அரசியல் சாசனத்தை எழுதினார்?

அடுத்ததாக, இந்து மதத்தில் இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் வெளியேறிவிடவேண்டும் என்பதில் அம்பேத்கர் மிகவும் தீவிரமாக இருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் அவர்கள் மதம் மாறிவிட்டால் கிடையாது என்று அரசியல் சாசனத்தில் சொல்லியிருப்பது அவரளவில் அவருடைய அரசியலுக்கு எதிரான செயல்பாடே.

தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு முறை சலுகை பெற்று மேல் நிலைக்கு வந்தவர்கள் சக தாழ்த்தப்பட்டவர்களுக்கு அடுத்த வாய்ப்பை விட்டுக்கொடுக்கவேண்டும் என்பது அம்பேத்கரின் விருப்பமாக இருந்திருக்கும். அதற்கான உத்தரவாதத்தையும் அவரால் ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல் சாசனத்தில் தரப்பட்டிருக்கும் பங்கீடு (ரிசர்வேஷன்) என்பது பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே அமலுக்கு வந்த ஒரு விஷயமே. அம்பேத்கர் அதையும் தாண்டிப் பல விஷயங்கள் செய்ய விரும்பினார். முடிந்திருக்கவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக இருப்பிடம், ஊர், நகரம் அமைக்கப்படவேண்டும் என்று விரும்பினார். இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு கொடுத்ததுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இருப்பிடம் (தற்போது இருக்கும் சேரி, காலனி போல் அல்ல; ஒருவகையில் சமத்துவபுரம் போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனி ஊர், தனி நிர்வாக அமைப்புடன்). அதற்கு அரசியல் சாசனத்தில் எந்த ஏற்பாடும் இருந்திருக்கவில்லை.



பின் தங்கிய வகுப்பினரின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் சாசனத்தில் எந்த அம்சமும் இல்லை என்பதையும் ராஜினாமா உரையில் அம்பேத்கரே குறிப்பிட்டிருக்கிறார். இடை நிலை ஜாதியினர் தமது பெரும்பான்மை பலத்தின் மூலம் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் பல கோரிக்கைகளை வைத்து தமது நலன்களைப் பாதுகாத்துக்கொண்டுவருகிறார்கள். அரசியல் சாசனம் உண்மையில் அதைச் செய்திருக்கவேண்டும்.



அடுத்ததாக, அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று ஒரு விதிமுறை சொல்கிறது. இன்னொரு விதிமுறையோ நலிவடைந்த பிரிவினருக்கு சலுகைகள் தரவேண்டும் என்கிறது. இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் இதை அடிப்படையாக வைத்தே உருவானது. உண்மையில் ஒருவர் வழக்கு போட்டு அதற்காக திருத்தம் கொண்டுவரப்படவேண்டிய விஷயமே அல்ல. முதலில் எழுதும்போதே இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவைத்திருக்கவேண்டும்.

ஒரு விஷயத்தின் அனைத்து சாத்தியங்களையும் கருத்தில் கொள்ளும் திறமையும் அதற்கேற்ப விரிவான, பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் அறிவும் சமூகப் புரிதலும் கொண்ட அம்பேத்கர் மேலே சொல்லியிருக்கும் இரண்டு விஷயங்களில் எப்படிக் கோட்டைவிட்டார் என்பது ஆச்சரியத்தையே தருகிறது. அவர்தானா இதை எழுதினார் என்ற சந்தேகத்தைக் கூட உருவாக்குகிறது.

கோவில்களை மாநில அரசுகள் நிர்வகிக்கும் வழிமுறையை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை. இன்று ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் ஈடுபட்டு கோவில் கலாசாரத்தை முடிந்தவரை அழிக்கும் திருப்பணியில் அவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள் என்றாலும் ஒரு அரசு அதிகாரியோ அரசியல் கட்சி உறுப்பினரோ கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுவதென்பது அரசை இந்துச் சார்புடன் கொண்டுசெல்லவே வழிவகுக்கும்; கோவில் கலாசாரத்தை வளர்த்தெடுத்து இந்து மதத்தைக் காக்கும் செயலாகவே ஆகும் என்பதால் மத்திய, மாநில அரசானது கோவில் நிர்வாகத்தில் இருந்து விலகியிருக்கவே விரும்பியிருப்பார்.


ஹஜ் மானியம் போன்றவற்றையும் அவர் விரும்பியிருக்க வாய்ப்பே இல்லை. உன் கடவுளை நீ கும்பிட அரசுப் பணம் தேவையா என்று சீறியிருக்கவே வாய்ப்பு அதிகம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கேட்டபோது அதையே இப்படித்தான் அவர் எதிர்த்திருந்தார்.


யார் இந்து என்ற கேள்விக்கு இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்தவர் அல்லாத பார்சி அல்லாதவர்கள் என்ற வரையறையை அம்பேத்கர் முன்வைத்திருக்க வாய்ப்பே இல்லை. அது இந்து மதத்தை பெரும் எண்ணிக்கையிலான அமைப்பாக ஆக்கிவிட்டதுஎன்பதுதான் ’போராளி’களின் குற்றச்சாட்டு. சீக்கியர், பெளத்தர், சமணர் ஆகியோரும் இந்துவே என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அம்பேத்கர் ஐந்தாறு வருடங்கள் கழித்து பெளத்தத்துக்கு மாறினார். பெளத்தர்களும் இந்துக்களே என்றால் அவர் உண்மையில் மதம் மாறவே இல்லை என்றுதானே ஆகிறது.

அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய பெளத்த பிக்கு கூட வீட்டின் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோன்றதுதான் இது என்று சொன்னதை அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே இல்லையே. புத்தரை மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்வதை ஏற்கவில்லை என்பதுதானே அவருடைய நிலைப்பாடு. அப்படிப்பட்டவர் எப்படி இந்த வரையறையை எழுதியிருக்க முடியும் (காஞ்சி மஹா பெரியவா வகுத்த வரையறை அது).

அதுபோல் மதச்சார்பற்ற அரசு என்ற விஷயத்தை அழுத்தமாக தேச அடையாளமாக அவர் முன்வைக்கவே விரும்பியிருப்பார். இவற்றையெல்லாம் அவரால் செய்ய முடிந்திருக்கவில்லை (1976-ல் பின்வாசல் வழியாகவே செக்குலரிஸம் இந்திய அரசியல் சாசனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது).

இந்துக்களும் பெளத்தர்களும் மிகுதியாக இருக்கும் ஜம்மு மற்றும் லடாக்கை இந்தியாவுடன் இணைக்கவேண்டும். இஸ்லாமியர் மிகுதியாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று சொன்னார் அம்பேத்கர். பொது வாக்கெடுப்பு என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமே நடக்கவேண்டும். ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீருக்கும் அல்ல. இந்துக்களும் பெளத்தர்களும் மிகுதியாக இருக்கும் பகுதி இந்தியாவின் அங்கமே... அங்கு எந்த வாக்கெடுப்பும் தேவையில்லை என்று சொன்னார்.

ஒருவகையில் அம்பேத்கர் சொன்ன அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் காஷ்மீர் மக்கள் கூட இந்தியாவுடன் சேர சம்மதித்து பிரச்னை ஒரேயடியாகத் தீர்ந்திருக்கும் (பாகிஸ்தான் அப்போதும் ஏதேனும் வழிகளில் தன் முயற்சியை மேற்கொண்டுதான் வந்திருக்கும் என்றாலும் இப்போதுபோல் பிரச்னை செய்ய வாய்ப்பிருந்திருக்காது).

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் தீர்மானமான ஆர்ட்டிகிள் 370 –ஐ அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் நேருவோ அதைப் பொருட்படுத்தாமல் கோபால ஸ்வாமி ஐய்யங்காரைக் கொண்டு அதை உருவாக்கி அரசியல் சாசனத்துக்குள் கொண்டுவந்துவிட்டார்.


இப்படி அம்பேத்கர் விருப்பத்துக்கு மாறானவற்றைச் செய்ய வேண்டியிருந்தது. விரும்பியவற்றைச் செய்ய முடிந்திருக்கவில்லை.


****

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மை தரும் என்று நினைத்துச் செய்த சில விஷயங்கள் அந்தப் பலனைத் தந்திருக்கவில்லை. நகர்மயமாக்கம், தொழில் மயமாக்கம் ஆகியவை மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரும் விடுதலையைத் தரும் என்று நம்பினார். அரசியல் சாசனத்தில் கிராமப்புற மேம்பாட்டைப் பின்னுக்குத் தள்ளினார் (உண்மையில் காந்தியத்தைப் பின்னுக்குத் தள்ள அம்பேத்கரை நேரு பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்).

எந்தவொரு நாட்டிலும் அரசு வேலை என்பது அனைவருக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஜாதியினரில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே உரிய பங்கீட்டுடன் அரசுப் பதவிகளில் சேர அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததோடு எஞ்சும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்டவர்களுக்கு (அவர்களில் 70-80%க்கு மேற்பட்டவர்கள்) உரிய பணிப் பாதுகாப்பு தரவேண்டும் என்பதும் அம்பேத்கரின் இலக்காக இருந்திருக்கவேண்டும்.



தனியார் நிறுவனங்கள், அயல்நாட்டுப் பணிகள் எனப் பெருகியிராத 1950களில் இந்தியாவில் ஏற்கெனவே பெரும் வேலை வாய்ப்புக்கான தொழிலாக இருந்த விவசாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை, நில உடமை அதிகரிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு உண்மையான மீட்சியாக இருந்திருக்கும். கிராமப்புற மேல் ஜாதி ஆதிக்கத்தை மாற்றிப்போடவும் அதுவே வழிவகுத்திருக்கும்.



ஆனால், அம்பேத்கர் அப்படியான முயற்சியை எடுக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நில உரிமை கிடைத்தால் கிராமங்களிலேயே அந்த நிலங்களிலேயே முடக்கிப் போடப்படுவார்கள் என்று சொன்னார். நகரமயமாக்கம், அரசு வேலைகள், பெருந்தொழில்கள் என இந்திய சமூகம் நகர்த்தப்படும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதில் நியாயமான வசதி வாய்ப்புகள், உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று நினைத்தார். அது சரியான சிந்தனைதான். ஆனால் அது ஒன்றே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மீட்சியாக அமைந்துவிடும் என்றும் அத்தனை தாழ்த்தப்பட்டவர்களையும் ஏற்றுக்கொள்ள அங்கு இடமிருக்கிறது என்றும் மேட்டுக்குடி கனவான் போலவே இன்றைய உலக வங்கிப் பிரதிநிதி மன்மோகன் சிங் போலவே அன்றைய மேற்கத்தியப் பிரதிநிதி நேருவைப் போலவே சிந்தித்தார்.

உண்மையில் தாழ்த்தப்பட்டவர்களில் பலருக்கு நிலம் இல்லாமல் இருந்தது. எனவே, அதுதான் அவர்களுக்கு அதி அவசியத் தேவையாக இருந்தது. மஹர்களுக்கு ’வதன்’ வழிமுறை மூலம் நிலம் தரப்பட்டிருந்தது. அதைவிட்டு விட்டு அவர்கள் மேலே நகரவேண்டுமென்று விரும்பினார். ஆனால் பகுதி நேர விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் பெருமளவில் கடைநிலைப் பணிகளையும் செய்துவந்த பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உரிமை இருந்திருக்கவில்லை. எனவே, அவர்களுக்கு நில உடமையே பெரிய விடுதலையைத் தந்திருக்கும். ஆனால், அம்பேத்கருக்கு அந்த எண்ணம் இருந்திருக்கவில்லை. மாடு மேய்க்கறவன் மாடுதான் மேய்ச்சுக்கிடே இருக்கணுமா… சேத்துல உழல்றவன் சேத்துலயேதான் விழுந்து கிடக்கணுமா என்பதுபோல அவர் யோசித்தார் (யோசிக்கவைக்கப்பட்டிருந்தார்).



டி.ஆர்.நாகராஜ் சொன்னதுபோல் பழங்காலத்தில் கைத் தொழில்கள், தொழில்நுட்பங்கள் எல்லாம் இடை, கடைநிலை ஜாதியினரிடத்தில் இருந்தது. நவீன உலகில் தொழில்களும் தொழில்நுட்பங்களும் மேல் ஜாதியினரிடம் சென்று சேர்ந்துவிட்டன. பழங்காலத் தொழில்களில் இருந்த கடினத்தன்மை, கேவலத்தன்மை போன்றவையெல்லாம் தொழில்நுட்பத்தின் மூலம் பெருமளவில் நீங்கியதும் அவற்றை மேல் ஜாதியினர் கைப்பற்றிவிட்டனர். இது தவறு என்று டி.ஆர்.நாகராஜ் குறிப்பிடுகிறார்.


பழங்காலத் தொழில்கள் கடினமாக, இழிவானதாக இருந்ததால் அதைச் செய்தவர்களும் இழிவாகவே பார்க்கப்பட்டார்கள். அவர்களுடைய கடைநிலைக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே அந்தத் தொழிலில் இருந்து அவர்கள் வெகு விரைவில் நகர்ந்தாகவேண்டும் என்று ஒற்றைப்படையாகவே அம்பேத்கர் போன்றவர்கள் சிந்தித்தனர்.


செருப்பு தைக்கும் தொழில் கடினமானது… ஒருவகையில் இழிவானதும் கூட என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால், பேட்டா நிறுவனத்தில் வேலை செய்வது பேட்டா நிறுவனத்தின் அதிபராக இருப்பது நவீன சமூகத்தில் உயர்வானதுதான் என்ற புரிதல் தாழ்த்தப்பட்ட போராளிகளில் பலருக்கு இன்றும் இல்லை.


அதுபோல், நில உடமை என்பது எக்காலத்திலும் பெரிய விடுதலையையே தரும். அதுவும் சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா ஏராளமான அணைகளைக் கட்டி, நீர்ப்பாசன வசதியைப் பெருக்கியிருக்கிறது. வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. சாலை வசதிகள், வாகன வசதிகள், பதப்படுத்துதல் என பல துறைகளில் மேம்பட்டிருக்கிறது. விவசாயத்தில் தன்னிறைவு மட்டுமல்ல ஏற்றுமதியிலும் பல சாதனைகள் புரிந்துவருகிறது.


இப்படியான நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நாலைந்து ஏக்கர் நிலம் தரப்பட்டு, கூட்டு விவசாயத்தில் முன்னுக்கு வரவும் வழி செய்து தரப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய விடுதலையாக இருந்திருக்கும். மேல் ஜாதியினர் பெருந்தொழில்கள், நகர்ப்புறம் என நகர்ந்திருக்க, வளமான கிராமத்தையும் அது சார்ந்த தொழில்களையும் தாழ்ந்த ஜாதியினர் கைப்பற்றியிருந்தால் இந்தியாவின் வளர்ச்சி சீரானதாக இருந்திருக்கும். நகரம் – கிராமம், மேல் கீழ் இடைவெளி இப்போது இருப்பதுபோல் ஆகியிருக்காது. பஞ்சமி நில மீட்பு, நிலச்சீர்திருத்தம் என அரசியல் சாசனத்தில் கல்வி, வேலைகளுக்கான இட ஒதுக்கீடுபோல் சில அழுத்தமான உத்தரவாதங்களையும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தந்திருக்கவேண்டும்.

நகர்மயமாக்க, தொழில்மயமாக்க, மைய நிர்வாக ஆட்சியமைப்பில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பங்கீடு கிடைக்க மதிப்பெண்களில் ஆரம்பித்து பல சலுகைகள் தரவேண்டியிருந்தது. விவசாயத்தில் அப்படி சுய மரியாதைக்கு நெருக்கடி தரும் எதுவும் இருந்திருக்காது. இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் எங்கள் உரிமை என்று போராளிகள் என்னதான் முழங்கினாலும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆழ் மனதில் இந்த சமூகம் கரிசனத்துடன் மேலிருந்து கொடுக்கும் உதவியே என்பது உறுத்திக்கொண்டேதான் இருக்கும். சுய மரியாதை இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே சுய மரியாதையுடன் இருந்த சமூகங்கள் அவை. எனவே போராளிகளின் அரசியல் உரிமை கோரல்களை அதே பாணியில்தான் தாழ்த்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. அதோடு கோட்டாவில் வேலைக்குச் சேர்ந்தவன் என்று பிற ஜாதியினர் ஏளனமாகப் பார்க்கும் நிலையும் விவசாய நிலப்பங்கீட்டில் இருந்திருக்காது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர் இன்னும் ஒருபடி மேலே சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசின் கடனுதவி பெற்று நிலங்களை காசு கொடுத்து வாங்கி நாலைந்து வருடங்களில் கடனை அடைத்து நேர்மையாக, கெளரவமாக நில உடமையாளராக ஆக்கிக்காட்டியிருந்தார்கள். அம்பேத்கர் இதைத் தனது அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்திருக்கவேண்டும்.


அம்பேத்கர் விவசாயத்தையும் கிராமத் தொழில்களையும் கிராமத்தையும் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேறவிடாமல் தடுக்கும் கால் விலங்காகப் பார்த்தார். நவீனத் தொழில்நுட்பம் அந்த வேலைகளின் கடினத்தன்மையையும் இழிவையும் பெருமளவில் மாற்றிவிடும்; பொருளாதரீதியில் பெரும் வெற்றியைத் தரும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் தொலைநோக்கு அவரைப் போன்றவர்களுக்கு இருந்திருக்கவில்லை. தென்னை மரம் சிறு மரமாக இருக்கையில் அருகில் இருந்து நீர் பாய்ச்சி, உரமிட்டுக் கண் விழித்துக் கஷ்டப்பட்டுப் பாதுகாத்துவிட்டு காய்க்கத் தொடங்கியதும் வேறொருவரிடம் கொடுத்துவிட்டுப் போவதுபோன்ற செயல் இது.


நேருவுக்கு தொழில்மய சமூகத்தின் மீது பாசம் இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் அது அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மேல் ஜாதிகளுக்கு உகந்த முன்னேற்றமே. மேற்கத்திய வளர்ச்சி என்பது இந்திய ஆன்மிக, கலாசார வீழ்ச்சியுடன் தொடர்புடையதுதான் என்றாலும் நேருவுக்கு இந்திய ஆன்மிக, கலாசார அம்சங்கள் மீது பெரிய மரியாதை கிடையாது என்பதால் மேற்கத்திய பாணி வளர்ச்சியை அவர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வரவேற்றார். அவர் தொழிற்சாலைகளே நவீன இந்தியாவின் கோவில்கள் என்று முழங்கியது தொழிற்சாலைகள் மீதான விருப்பதினால் மட்டுமல்லவே.


அதோடு, வலிமையானவருக்கும் பலவீனமானவருக்கும் ஒரே இலக்கு, ஒரே போட்டி என்று சொல்வது பலவீனமானவர்களுக்கான வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் செயலே. ஆங்கில வழிக் கல்விக்கு எளிதில் தகவமைத்துக்கொள்ளும் திறன், வீடுகளில் மின் விளக்கு, தனியாக அமர்ந்து படிக்கத் தோதான நிலை, கற்றுத் தரத் தெரிந்த பெற்றோர்கள், பள்ளிக்குக் குழந்தைகளைத் தினமும் அனுப்ப முடிந்த பொருளாதாரநிலை என இவை எதுவும் இல்லாத தாழ்த்தப்பட்டவர்களை அவையெல்லாம் பெற்ற மேல் ஜாதியினருடன் போட்டியிடவைத்ததில் எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை.

நவீனத் தொழில்கள், நவீன நிர்வாக அமைப்புகள், பாரம்பரியத் தொழில்களில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் என அனைத்தையும் எளிதில் பெறும் நிலையில் மேல் மற்றும் இடைநிலை ஜாதியினரே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்களில் சொற்ப விகிதத்தினருக்கு இந்த கதவுகள் திறந்திருந்தன என்பது உண்மைதான். ஆனால், அது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பலன் தருவதாக இருந்திருக்கவே இல்லை. அம்பேத்கர் கவனத்தில் கொண்டிருக்கவேண்டிய விஷயம் இது. ஒருவகையில் அம்பேத்கர் மட்டுமே கவனத்தில் கொள்ள முடிந்த விஷயமும் கூட. அவர் துரதிஷ்டவசமாக இந்திய விலங்குகளை உடைக்க மேற்கத்திய சுத்தியல்களைப் பயன்படுத்துபவராகவே இருந்துவிட்டார்.


(சிறு விளக்கம் : இந்திய - இந்து பாணி வளர்ச்சிக்கும் மேற்கத்திய பாணி வளர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை சிறு உதாரணம் மூலம் புரியவைக்கிறேன். இந்தியா சுதந்தரம் பெற்ற நேரத்தில் விவசாய நாடாகவே இருந்தது. மருத்துவத்துறையில் ஏற்பட்ட நவீன முன்னேற்றங்களால் குழந்தை இறப்புகளும் பிறவகை மரணங்களும் சட்டென்று குறைந்துவிட்டிருக்கவே மக்கள்தொகை தீடீரென்று அதிகரித்தது. இந்தியாவில் அப்போது பெரும் வறட்சி ஏற்பட்டதாகவும் பெரும் கதையாடல்கள் உருவாக்கப்பட்டு குட்டை வைக்கோல் புரட்சிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. வேதி உரங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டது (நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களின் பெருக்கம் மற்றும் மருந்துகளையே வெகுவாகச் சார்ந்து வாழும் வாழ்க்கை போன்றவையும் அதே காலகட்டத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது). அணைகள் ஏராளம் கட்டப்பட்டன.

அப்படியாக பெரும் உணவுத் தட்டுப்பாடு நிலவியதாகச் சொல்லப்பட்ட ஆண்டில் இருந்து மேற்கூறிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த சுமார் பத்தே ஆண்டுகளில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதோடு ஏற்றுமதியிலும் உலக சாதனை படைக்கத் தொடங்கிவிட்டது. இது முழுக்க முழுக்க மேற்கத்திய பாணி வளர்ச்சியே. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சீரிழிவு, நிலங்களின் மண்ணின் சத்து இழப்பு, வேதி உரங்களின் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்ச நேர்ந்தது என அதன் மோசமான பின்விளைவுகள் ஏராளம்.

இந்திய – இந்து பாணி வளர்ச்சி என்பது இப்படியான பின்விளைவுகள் இல்லாததாகவும் மிதமான வளர்ச்சியைக் கொண்டதாகவும் இருந்திருக்கும். இந்திய உணவுத் தட்டுப்பாட்டைத் தீர்க்க மேற்கத்திய தீர்வு மட்டுமே உதவியிருக்கும் என்பது உண்மையல்ல. குட்டை வைக்கோல், வேதி உரங்கள் இவற்றினால் தானிய உற்பத்தி 50% அதிகரித்தது என்றால் அணைகள் கட்டியதால் ஐம்பது சதவிகிதம் விவசாய நிலப்பரப்பு அதிகரித்து தானிய உற்பத்தி பெருகியது. இந்நிலையில் அணைகளை மட்டுமே கட்டி உணவு உற்பத்தியைப் பெருக்கி, விநியோக, பதப்படுத்தல் வழிமுறைகளை மேலும் பலப்படுத்தியிருந்தாலேயே நம் உணவுத் தட்டுப்பாடு நிச்சயம் நம் முயற்சியாலேயே தீர்ந்திருக்கும்.

குட்டை வைக்கோல், வேதி உரப் பயன்பாடு சார்ந்த பின் விளைவுகளில் இருந்து தப்பியிருக்கமுடியும். நேருவியர்களுக்கு இந்திய – இந்து பாணி வளர்ச்சியில் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்திருக்கவில்லை.

இதில் முக்கியமான இன்னொரு குறை என்னவென்றால், விவசாயத்தின் சமூகப் பங்களிப்பு - பங்கீடு தொடர்பான பார்வை இந்த மேற்கத்திய தீர்வில் இருந்திருக்கவில்லை. அதாவது, அதற்கு முன்பு நில உடமையில் பெரும் இடைவெளி இருந்தது. சிலரிடம் நிலம் குவிந்திருந்தது. பலர் நிலமில்லாமல் இருந்தனர். கோவில், மசூதி, சர்ச்களுக்குச் சொந்தமான வயல்களில் ஆரம்பித்து இடைநிலை ஜாதி பண்ணையார்கள் வசம் இருந்த 500-1000 ஏக்கர் நிலங்கள் வரை ஒரு நியாயமற்ற பங்கீடு இருந்தது. இந்த ஏற்றத் தாழ்வில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது தாழ்த்தப்பட்ட மக்களே.

எல்லா ஜாதியிலும் வர்க்கரீதியாக நிலமற்று இருந்தவர்கள் உண்டு என்றாலும் தாழ்த்தப்பட்டவர்களே இந்த ஏற்றத் தாழ்வில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். எனவே நிலமற்றவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் என்பதுதான் அந்நேரத்தைய இந்தியத் தீர்வாக இருந்தது. நேருவுக்கு அதில் ஆர்வம் இருந்திருக்கவில்லை. அதற்கு அவரைக் குறைசொல்லவும் முடியாது. ஆனால், அம்பேத்கருக்கு இருந்திருக்கவேண்டும். அவருடைய சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய பொருளாதார விடுதலையை மட்டுமல்ல சமூக அந்தஸ்தையும் அதுவே தந்திருக்கும்.

நில உடமை சமுதாயத்தில் நிலமற்று இருத்தலே பெரும் வேதனைக்குரிய விஷயம். காணி நிலத்துக்காவது சொந்தக்காரராக இருப்பதே மிகப் பெரிய கெளரவம். தாழ்த்தப்பட்டவர்களில் சுதந்தரத்துக்கு முன் ஐந்தாறு சதவிகிதத்தினரே நில உடமையாளர்களாக இருந்திருந்தார்கள் என்றால் 80-90 சதவிகிதம் பேருக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கவேண்டும்.

நிலம் துண்டு துண்டாக இருந்தால் உற்பத்தி குறையும் என்பது உண்மையல்ல. சிறு நில உடமையாளர்கள் அதுமட்டுமே அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் தரும் என்பதால் கூடுதல் அக்கறையுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அதோடு, நிலம் குறைவாகவும் மக்கள் அதிகமாகவும் இருக்கும் நம் நாட்டுக்கு சமத்துவத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும். வேண்டுமென்றால் பத்து தாழ்த்தப்பட்ட நில உடமையாளர்களின் நிலத்தை ஒன்றாக்கி கூட்டுப் பண்ணை முறையில் ஐம்பது ஏக்கர்-100 ஏக்கர் என ஆக்கித் தந்திருக்கவேண்டும்.

காந்தியவாதமும் லட்சிய வேகமும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. வினோபாவே பூதான இயக்கத்தை அவரளவில் வெற்றிகரமாக நடத்தத் தொடங்கிய காலகட்டம். இந்திய அதிகார வர்க்கம் அவருடைய முயற்சிகளைக் கைகட்டி வேடிக்கை பார்த்தது. எள்ளி நகையாடியது. துளிகூட ஆதரவு தராமல் ஒதுக்கித் தள்ளியது. கம்யூனிஸ்ட்கள் வினோபாவின் முயற்சிகள் புரட்சியைத் தள்ளிப்போடுவதாக நினைத்து கோபப்பட்டார்கள். பண்ணையார்களைத் தாக்கி நிலத்தை பாட்டாளிகளுக்குக் கொடுக்க முற்பட்டார்கள்.

அவர்களுடைய ஆட்சிகள் நடந்த கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் நிலச் சீர்திருத்தம் ஒப்பீட்டளவில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை தருவதாக அல்லாமல் இடைநிலை ஜாதிகளுக்குப் பயன் தருவதாகவே அமைந்தது. மரிச்சபி படுகொலைகளில் ஆரம்பித்து பொலிட்பீரோவில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட இடம்பெறாமல் பார்த்துக்கொண்டுவரும் கம்யூனிஸ்ட்களை அம்பேத்கர் சரியாகவே இனம் கண்டு ஒதுக்கியிருந்தார். அவரளவுக்கு அரசியல் மேதமை இல்லாத திருமாவளவன் கூட கீழ்வெண்மணி அஞ்சலியில் ஆரம்பித்து கம்யூனிஸ்ட்களிடமிருந்து முடிந்தவரை விலகியே இருந்துவருகிறார். அல்லது மக்கள் நலக்கூட்டணி போன்ற சந்தர்ப்பவாதக் கூட்டணியில்கூட தன்னை முதல்வராக முன்னிறுத்த முன்வராத கம்யூனிஸ்ட்களை நன்கு புரிந்துகொண்டவராகவே இருக்கிறார்.

எனவே, அம்பேத்கர் நில சீர்திருத்தத்தை மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டது மிகப் பெரிய தவறு. தீண்டாமைக்கு எதிரான விதிமுறைகளை எப்படி தேசம் முழுமைக்குமான சட்டமாக வரையறுத்தாரோ அதுபோலவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் கிடைப்பதை தேசம் முழுமைக்கும் உறுதிப்படுத்தியிருக்கவேண்டும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சொன்னவர் தாழ்த்தப்பட்டவர்களின் பொருளாதார, சமூக ரீதியிலான நலனைக் காக்க நிலசீர்திருத்தத்தை மத்திய அரசின் பொறுப்பில் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். எனவே, அம்பேத்கர் விவசாயம் உள்ளிட்ட கிராமப்புறத் தொழில்களின் மேம்பாட்டுக்கும் அதில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்கும் உடமைக்கும் தோதாகக் கூடுதலாக எதையும் அரசியல் சாசனம் மூலம் உருவாக்கியிராததால் அவரையறியாமலேயே அவர்களைக் கைவிட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

(தொடரும்)

No comments:

Post a Comment