Tuesday, 26 July 2016

கபாலி - விளம்பர ஹைப்பும் தலித் மீட்சியும்

கபாலி திரைப்படம் சந்தைப்படுத்துதல் சார்ந்து மிகை எதிர்பார்ப்பையும் உள்ளடக்கம் சார்ந்து நியாயமான எதிர்பார்ப்பையும் தூண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் இதைச் சொல்வதானால் ரஜினி என்பதால் ஒருவகை எதிர்பார்ப்பும் ரஞ்சித் என்பதால் இன்னொருவகை எதிர்பார்ப்பும் உருவாக்கப்பட்டிருந்தது. அதனால், இரண்டு என்ஜின்கள் பொருத்தப்படும் வண்டியைப்போல் அதிவேகப் பயணத்தை எதிர்பார்த்து உலகமே தயாராக இருந்தது. ஆனால், இரண்டு என்ஜின்களும் ஒரே திசையில் பயணிக்காமல் எதிரெதிர் திசையில் இழுத்துவிட்டதால் வண்டி இருந்த இடத்திலேயே முடங்கிவிட்டது. இத்தகைய மிகை எதிர்பார்ப்புகளும் அதையொட்டிய ஏமாற்றங்களும் நமக்குப் புதிது அல்ல. இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்குப் பழகிப்போய்விட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். 

ஒவ்வொரு ஐந்தாண்டுக்குப் பிறகும் நல்லாட்சி மலர்ந்துவிடும்; இது முந்தைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திருப்புமுனைக் காலகட்டமே என்றெல்லாம் நம்பி ஏமாற, ஒட்டுமொத்த தேசமும் தயாராகத்தானே இருக்கிறது. ஊடகங்களின் ஒவ்வொருமுறையான கருத்துக் கணிப்புகளும் தோல்வியுற்று வரும் நிலையிலும் ஒரு ஜோதிடரைவிட அதிக நம்பிக்கையுடன் தமது விஞ்ஞானக் கணிப்புகளை ஒவ்வொரு பெரு ஊடகங்களும் முன்வைக்கத்தானே செய்துவருகின்றன. நாமும் அதை நம்பி வாய்பிளந்து படிக்கத்தானே செய்துவருகிறோம். உலகக் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டி எப்போதுமே பெரிதும் ஏமாற்றத்தையேதானே தருகின்றன. இருந்தும் மக்கள் கூட்டம் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியையும் உலகின் கடைசி நாள் கொண்டாட்டம்போல் கொண்டாடத்தானே செய்கின்றன.


ரஜினி விஷயத்தையே எடுத்துக்கொண்டால் எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டால் என்று வேலைக்காரனிலேயே ஆரம்பித்தவர் ஏதோவொரு திட்டம் இருக்கு, விதை துங்குது.. விருட்சமாகும்... நேத்திக்கு நான் கண்டக்டர்... இன்னிக்கு நடிகன்..  நாளைக்கு..? தூங்கிட்டிருக்கர சிங்கத்தைச் சீண்டாதீங்க... வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்... என்றல்லாம் சளைக்காமல் நம்மை உசுப்பேற்றித்தானே வந்திருக்கிறார். நான் சொன்ன சமூக அக்கறை சார்ந்த பஞ்ச் டயலாக்குகள், அரசியல் பில்டப்புகள் எல்லாம் நானா சொன்னது கிடையாது என்ற தன்னிலை விளக்கத்தைக் கட்டக் கடைசியாகத்தானே தந்தார். தேவகுமாரனின் இரண்டாம் வருகை நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று நாமெல்லாம் வருந்தி நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து கிடந்தபோது அவர் மேலும் மேலும் நம்மை நம்பவே வைத்தார். 

அரசியல் எதிர்பார்ப்புகள் அல்லாமல் திரைப்படங்கள் சார்ந்தும் பாபா, குசேலன், லிங்கா என அவர் பங்குக்கு நம்மை நன்கு ஏமாற்றவே செய்திருக்கிறார். மிகை எதிர்பார்ப்பும் அதீதத் தோல்வியும் மேலே எறியப்படும் பந்து கீழே விழுந்தே தீருவதைப்போல் தவிர்க்கமுடியாத இயற்கை விதியாகவே ஆகிவிட்ட நிலையிலும் கபாலிக்கும் நாம் ஆர்வத்துடன் காத்திருக்கவே செய்தோம். அதிலும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இந்தக் கூட்டு முட்டாள்தனத்தில் பங்குகொண்டு பந்தை வானம் அளவுக்குத் தூக்கி எறிந்துவிட்டதால் கீழே விழுந்த வேகமும் அதிகரித்துவிட்டிருக்கிறது.

இந்த வீழ்ச்சியைத் தவிர்த்திருக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும் என்பதுதான் பதில். விளையாட்டுப் போட்டிகள், அரசியல் போன்றவற்றில் நம்மால் எதையும் சொல்ல முடியாது. ஆனால் திரைப்படம், இசை நிகழ்ச்சி போன்ற கலை வடிவங்களில் இதை நிச்சயம் தவிர்க்கமுடியும். வேறொன்றுமில்லை, சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் தரமான படைப்பை உருவாக்கிவிட்டு அதன் பிறகு விளம்பர யுக்திகளில் ஈடுபட்டால் போதும். அதிக எண்ணிக்கையிலான திரையரங்கங்கள், அதிக விலையிலான டிக்கெட்கள், அதிக விலையிலான விற்பனை ஒப்பந்தங்கள் என காசு பார்த்துவிடலாம் என்று நினைத்துக் களம் இறங்கக்கூடாது. 

அதுபோல் இந்த விளம்பர பில்டப்புகளில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு தமது இறகுகளை விரிக்கவேண்டும். பிரச்னைக்குரிய காட்சிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்சி/சாதித் தலைவர்களுக்குப் படத்தைப் போட்டுக்காட்டும் திரைப் படைப்பாளிகள் விளம்பர நிறுவனங்களுக்கும் போட்டுக்காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் படத்தைப் போட்டுக்காட்டவேண்டும். இவர்கள் எல்லாரும் படம் பார்த்து அது பிடித்திருந்து விளம்பர ஹைப்களை உருவாக்கினால் அது தோற்க வாய்ப்பு இல்லை. அதைவிட்டுவிட்டு ரஜினி என்ற பெயரைக் கேட்டதுமே கார்ப்பரேட்களில் ஆரம்பித்து கடைநிலைத் தியேட்டர்களில் முறுக்கு, சமோசா போடுபவர்கள்வரை அதிகமாக ஆசையை வளர்த்துக்கொள்வதை இனியாவது நிறுத்தவேண்டும்.

இப்படி மிகை எதிர்பார்ப்புகள் உருவாக்கப்படும் படங்களுக்கு சர்வதேச திரைக்கதை ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவது நிச்சயம் நல்ல பலனைத் தரும். சண்டைக்காட்சி, ஒப்பனை, பின்னணி இசை என க்ரியேட்டிவ் அம்சம் சாராதவற்றுக்கு சர்வதேச நிபுணர்களைப் பயன்படுத்துவதால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு போன்றவற்றில் அவர்களுடைய பங்களிப்பு இருந்தாகவேண்டும்.

இசையைப் பொறுத்தவரையில் நமது தமிழ் மனதுக்கும் சூழலுக்கும் ஏற்ற சாதனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதி நுட்பமான இசை ரசிகர் வேண்டுமானால் மேலான இசைக்கு ஏங்கலாம். மற்றபடி தமிழ் திரையுலகில் இசைத்துறை மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. எனவே, கதை/திரைக்கதை என்ற முக்கிய விஷயத்துக்கு மட்டுமே சர்வதேச நிபுணத்துவம் தேவையாக இருக்கிறது. அதிலும் மிகை எதிர்பார்ப்பு தூண்டப்படும் படங்களுக்கு அவர்களுடைய பங்களிப்பு நிச்சயம் தேவை. ஆர்வத்தை அதிகமாகத் தூண்டுகிறீர்கள் என்றால் அதற்குத் தகுந்த தீனி போட்டாகவேண்டும் அல்லவா?
*

ரஞ்சித் தந்த ஏமாற்றம் பற்றிச் சொல்வதென்றால் அவர் தனது முந்திய படத்தைவிட இதில் அதிகம் அம்பலப்பட்டிருக்கிறார். மெட்ராஸ் திரைப்படமானது தலித்களின் குரலை பெருவணிக ஊடகத்தில் சாத்தியமான அளவுக்கு சாமர்த்தியமாகப் பேசிய படம் என்று சிலாகிக்கப்பட்டது. உண்மையில் அதிலேகூட அவர் பல மலினமான தேவையற்ற சமரசங்களைச் செய்திருந்தார். கால்பந்து, நீல நிறம், புத்தர் சிலை என அவர் முன்வைத்த தலித் (?!) அடையாளங்கள் எல்லாம் மிகவும் மேலோட்டமானவை. கலை நயம் சார்ந்தவை அல்ல. திரைப்படத்தின் தலித் கதாநாயக பாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் அவர்களுக்குப் பெரும் எதிரியாக இருக்கும் கவுண்டர் சமூகத்து நடிகரை ஏற்க வைத்திருந்தார். இதில் வணிக தந்திரமும் சமூக பயமும் மட்டுமே இருக்கிறது.

தமிழகத்தில் சாதிச் சண்டைகளெல்லாம் சிலை, கொடி கம்பம் போன்றவை தொடர்பாகவே பெரிதும் நடக்கின்றன. சுவர் சண்டை என்பது அதிமுக-திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகளே. சாதி சார்ந்த திரைப்படத்துக்கு சாதி சார்ந்த காரணத்தைத் தேர்ந்தெடுக்காமல் அரசியல் காரணத்தைத் தேர்தெடுத்தது தவறுதான். அந்தத் திரைப்படத்தில் வில்லன்களின் சாதி அடையாளங்கள் வெகு பூடகமாகவே சித்திரிக்கப்பட்டிருந்தன. அதைக் கட்டுடைத்துப் பார்த்தாலும் நிஜத்தில் எதிர் நிலையில் இருக்கும் சாதியைச் சித்திரிக்காமல் பாதுகாப்பான எதிரியுடனே சண்டை போட்டிருக்கிறார். சமரசங்கள் இதோடு நின்றிருந்தால் கூடப் பரவாயில்லை. தலித்களுக்கு தலித் தலைவரே எதிரியாக இருக்கிறார் என்று மேட்டுக்குடியின் தாளத்துக்கு ஏற்பவே ஆடியிருக்கிறார். அதுதான் மிகப் பெரிய சமரசம். மெட்ராஸ் திரைப்படத்தில் வன்னிய வில்லன்களை வெளிப்படையாகக் காட்டியிருந்தால் படம் வெளியாகியிருக்கவே முடியாது என்ற கூற்றில் நிச்சயம் உண்மை இருக்கிறது. அப்படியானால், எப்படித்தான் படமெடுப்பது..?

சாதி சார்ந்து நமது திரைப்படங்கள் இதுவரையில் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று முதலில் பார்ப்போம்.

ஈவேரா பிறந்த மண்தான் என்றாலும் பொதுவாக தமிழ் திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் என்ன என்பது தெரியாதவிதமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கும். அப்படியே ஏதேனும் சாதி அடையாளம் வெளிப்படையாகத் தெரியும்படியாகச் சித்திரிக்கப்பட்டிருந்தால் அந்த சாதியின் நல்ல மனிதரையே அது சித்திரிப்பதாக இருக்கும் (நாட்டாமை வகையறாக்கள்). ஒரு குறிப்பிட்ட சாதிக்காரரைக் கெட்டவராகக் காட்டுவதென்றால் அதே சாதியைச் சார்ந்த பல நல்லவர்களைக் காட்டி சமநிலைப்படுத்தியிருப்பார்கள். சின்னக்கவுண்டர், தேவர் மகன், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் எல்லாம் ஒரே சாதிக்காரர்களுக்குள்ளே நடக்கும் சண்டையையே சித்திரித்திருப்பார்கள். தேவனை அடிப்பது இன்னொரு தேவனாகவே இருப்பான். கவுண்டனை அடிப்பது இன்னொரு கவுண்டனாகவே இருப்பான்.

தெளிவான சாதி அடையாளத்துடன் விமர்சிக்கப்படும் ஒரே சாதி என்று பார்த்தால் பிராமணர்கள் மட்டுமே. திராவிட சிந்தனையாளர்களின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்த காலகட்டங்களில் பிராமணரும் இந்து மத அடையாளங்களும் தெளிவான அடையாளப்படுத்தலோடு விமர்சிக்கப்பட்டன. மத விஷயத்தில் கிறிஸ்தவ இஸ்லாமியர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படுவதுபோல் சாதி சார்ந்த விஷயங்களில் இடைநிலை சாதி மீதான விமர்சனம் தவிர்க்கப்படுவதுதான் தமிழ் சினிமாவின் சாதிய வரலாறு.

அடுத்ததாக நாடகம், தெருக்கூத்து போன்ற நமது பாரம்பரிய கலைகளில் நகைச்சுவை கதாபாத்திரமே சமூக விமர்சனக் கருத்துகளைத் தைரியமாக முன்வைக்கும். சினிமாவில்கூட எம்.ஆர்.ராதா தன்னை ஒரு நகைச்சுவை நடிகராக முன்வைத்ததால்தான் அந்த விமர்சனங்களையெல்லாம் வைக்க முடிந்தது. சோ தனது அரசியல் விமர்சனங்களை துணிச்சலாக முன்வைக்க முடிந்ததற்கும் அவர் தன்னை ஒரு காமடியனாக வெளிப்படுத்திக்கொண்டதே உதவியிருக்கிறது. அப்போதும்கூட இடைநிலை சாதி மீதான விமர்சனங்கள் வைக்கப்பட்டனவா என்று தெரியவில்லை. தெருக்கூத்து கோமாளிகளும் பிராமணரைத்தான் பெரும்பாலும் விமர்சித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

இப்படியான நிலையில் ஒரு பறையர், தான் எடுக்கும் படத்தில் நிச்சயம் வன்னியரை வெளிப்படையாக விமர்சிக்க முடியாது என்ற கூற்றில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவருக்கோ சாதி சார்ந்து ஏதாவது ஒன்றைப் பேசியே ஆகவேண்டும். அதாவது இடைநிலை சாதிகளைத் திட்டவும் வேண்டும். திட்டின மாதிரியும் இருக்கக்கூடாது. எதிர்க்கவும் வேண்டும். எதிர்த்த மாதிரியும் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை அவர் எடுக்கிறார். இதற்கு அவர் மணிரத்னம் போட்டுத் தந்த பாதையைப் பயன்படுத்துகிறார்.

மணிரத்னம் தனது சாதா காதல்/குடும்பக் கதைகளுக்கு மத/தேசிய பின்னணியைக் காட்டியதன் மூலம் படத்தின் வணிக எல்லையை விஸ்தரித்ததோடு உள்ளடக்கத்தின் கனத்தையும் ஒப்பீட்டளவில் அதிகரித்துக்கொண்டார் (பீம்சிங், விக்கிரமன் படங்களைவிட மணிரத்னத்தின் குடும்பக் காவியங்கள் மேலானவைதானே) ஆனால், இந்த முயற்சியில் தான் பின்னணியாகப் பயன்படுத்திய மத/தேசிய பிரச்னைகளின் கனத்தை வெகுவாக கீழிறக்கிவிட்டார். ரஞ்சித் மணிரத்னத்தின் சாதிய வெர்ஷனாக இருக்கிறார். மணிரத்னத்துக்கு காதல்/குடும்பக் கதைகள். ரஞ்சித்துக்கு கேங்ஸ்டர் கதைகள். மணிரத்னம் தனது சமரசங்களாகச் சொன்ன அதே காரணங்களையே ரஞ்சித்தின் ஆதரவாளர்களும் வேறு வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

தொலைதூர அதிகாரமையங்களைக் கேள்விக்குட்படுத்தியதால் மணிரத்னத்தால் தனது படங்களில் அவை சார்ந்து கூடுதலாகப் பேச முடிந்திருந்தது. சாதி என்ற தலைக்கு மேல் உட்கார்ந்திருக்கும் நபரைப்பற்றிய விமர்சனங்கள் என்பதால் ரஞ்சித்தால் குறைவாகவே பேச முடிந்திருக்கிறது. மேக்கிங்கில் மணி ரத்னம் பல படிகள் மேலானவர் என்பது நீங்கலாக இவர்கள் இருவருடைய வணிக லட்சியங்களும் கொள்கைப்பிடிப்புகளும் ஒரே தரத்திலானவையே. ஆனால், பல விமர்சகர்களும் இப்படியான சமரசங்கள் மூலம் நமது சூழல் எப்படி இடைநிலை சாதிகளின் ஆணவப்பிடியில் சிக்கிக் கிடக்கிறது என்ற உண்மையை ரஞ்சித் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றுகூடப் பாராட்டுகிறார்கள். உலகம் உருண்டை என்ற உண்மையை மலை உச்சி மீது ஏறித்தான் கூவ வேண்டுமா என்ன? ஜெயலலிதா ஆணவக்காரி என்பதை எஸ்.டி.எஸ். மாதிரி சுமோவின் ஃபுட்ஃபோர்டில் தொங்கித்தான் நிரூபிக்கவேண்டுமா என்ன? இந்த ஊரறிந்த உண்மைக்கு உங்கள் தீர்வு என்ன என்பதுதானே கலைஞன் முன்னால் உள்ள சவால்.


அடக்கினா அடங்குற ஆளா...
ஆண்டையரின் கதை முடிப்போம்...
நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்...
(பின்னணியில் டிரம்ஸ் ஒலிக்க) பறை இசையைப் புகழ்ந்து ஒலிக்கும் வரிகள்...
மேட்டுக்குடிச் சத்தம் நாட்டுக்குள்ள கேக்காது...
இதுதான் மேல் சாதி ஆணவத்தை எதிர்க்கும் வழிமுறையா..? தலித்கள் இன்று சொல்ல விரும்பும் வார்த்தை இதுதான் என்று பறையர் ரஞ்சித் எப்படி முடிவெடுக்கிறார்? அது சரி என்று ஊடகங்களின் அறிவிஜீவிகள், விமர்சகர்கள் ஏன், எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

உண்மையில் தலித்களின் இன்றைய பிரச்னை என்ன..? அவர்கள் அடிப்படைப் பிரச்னைக்காகப் போராட வேண்டியிருக்கிறதா..? அதைத் தாண்டிய விஷயங்களுக்காகப் போராடவேண்டியிருக்கிறதா?

தலித் பெண்கள் மேல் சாதியினரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்களா... தலித் ஆண்கள் மேல் சாதிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளமுடியவில்லையா..? தலித்கள் மேல் சாதியினரின் கோவில்களில் தொழ அனுமதிக்கப்படுவதில்லையா..? தலித்கள் தமது கோவில்களிலும் தொழ அனுமதிக்கப்படுவதில்லையா..? முந்தைய காலம்போல் இரட்டைக்குவளை, மேல் சாதியினரின் தெருவுக்குள் செருப்பு போடக்கூடாது, தனி கிணறு, தனிச் சுடுகாடு, தனிக் கோவில் என நடத்தப்பட்டார்கள். இன்று அப்படியானவை வெகுவாகக் குறைந்துவிட்டனவா. பஞ்சாயத்து தேர்தலில் வென்ற மேல வளவு முருகேசன் கொல்லப்பட்டார். கே.ஆர்.நாராயணன் தேசத்தின் ஜனாதிபதியாக இருந்தார். நாடு முழுவதும் ஓடும் 100க்கணக்கான தேர்களை தலித்கள் இழுக்க முடியும். ஆனால், தேவர்களின் கோட்டையான கண்ட தேவியில் தலித்கள் தேர் இழுக்க முடியாது.

இப்போது உங்கள் முன்னால் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. இந்து/இந்திய சமூகத்தில் நடந்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றங்களை வரவேற்று ஒரு கலைப்படைப்பை உருவாக்கலாம். அல்லது இன்னும் கிடைத்திராத உரிமைகளுக்காகப் போராடும் படைப்புகளை உருவாக்கலாம். ஆனால், இரண்டாவதை நீங்கள் செய்வதாக இருந்தால் முதலாவது குறித்த குறைந்தபட்ச அங்கீகாரத்தையாவது செய்யவேண்டும். மேலும் இரண்டாவதை இன்னும் கொஞ்சம் இதமாகவே கேட்கலாம்.

ஒரு நிறுவனம் முன்பைவிட சம்பளத்தை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. போனஸும் தருகிறது. ஆனால், அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபத்தோடு ஒப்பிட்டால் இன்னும் கூடுதல் சம்பளமும் போனஸும் கேட்க தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு என்றால் அவர்கள் இதுகாறும் தந்த சம்பளத்துக்கும் போனஸுக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் அதிகமாகக் கேட்கவேண்டும். சம்பளமே தராத நிறுவனம் போல் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கக்கூடாது. முருகேசனைப் பற்றிப் பேசும் முன் கே.ஆர். நாராயணம் பற்றிப் பேசு.. அல்லது முருகேசனைப் பற்றிப் பேசும்போது நாட்டின் ஜனாதிபதியாகவே ஒருவர் வந்துவிட்டிருக்கிறார்.. கேவலம் பஞ்சாயத்து தலைவராக வரக்கூடாதா என்று கேள்வியைக் கேளு... ஆனால், பஞ்சாயத்து தலைவராகக் கூட தலித் ஆக முடியாதா என்று கேட்கக் கூடதல்லவா? கண்டதேவி போன்ற ஒரு ரில் தேர் இழுப்பது தொடர்பாக பிரச்னை வருகிறது... பெரும் சண்டை மூள்கிறது... இந்த நிலையில் ஓர் காந்தியவாதி அல்லது அப்துல்கலாம் போன்ற தலைவர் அந்த ஊர் தலித்துகளை தேர் இழுக்க அனுமதிக்கும் ஊர்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று இழுக்கவைத்துவிட்டு கடைசியாக பிரச்னைக்குரிய ஊருக்கு அழைத்துவருகிறார். அங்கு அந்த ஊர் மக்களின் மனதை மாற்றி க்ளைமாக்ஸில் தேரை தலித்களும் தேவர்களும் இணைந்து இழுக்க வைக்கிறார் என்று காட்டு.

ஏனென்றால், சண்டையிட்டுக்கொள்ளும் இடைநிலை சாதியினரும் தலித்களும் ஒரே மொழி பேசக்கூடியவர்களே. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே... ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களே... இப்போது ஒரு படைப்பாளி ஒற்றுமைக்கான இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து ஒரு படைப்பை உருவாக்கினால் அது யாராலும் எதிர்க்கப்படாதுதானே. அதிலும் சமூக ஒற்றுமையும் சமத்துவமும் மலரத்தானே செய்யும். உங்கள் இலக்கு என்ன ரஞ்சித்?

ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு இதை விளக்குகிறேன். ஒரு தேவர் தான் வளர்க்கும் காளையை அடக்குபவருக்குத் தன் மகளைத் திருமணம் முடித்து வைப்பதாக அறிவிக்கிறார். அந்தப் பெண்ணின் முறைப் பையனும் காளையை அடக்க முற்படுகிறான். ஆனால், ஒரு பள்ளர் சாதிப் பையனே காளையை அடக்கிவிடுகிறான். இப்போது தேவர் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று பள்ளர்கள் கேட்கிறார்கள். தேவர்கள். மறுக்கிறார்கள். இரு சாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்படப் போகும் நேரத்தில் காளையை அடக்கிய பள்ளர் முன்னால் வந்து, நான் காளையை அடக்குவதற்காகத்தான் களத்தில் இறங்கினேன். அந்தப் பெண்ணைத் திருமணம் முடிப்பதற்காக அல்ல. அதுவும்போக ஒரு பெண்ணுடைய சம்மதத்தைக் கேட்காமல் இப்படிப் பகடைக்காயாக ஆக்குவது மிகவும் தவறு. எனவே, அந்தப் பெண் தான் விரும்பும் முறைப்பையனையே திருமணம் செய்துகொள்ளட்டும் என்று சொல்லி தாலியை எடுத்து முறைபையன் கையில் கொடுத்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தியபடி போகிறார் என்று காட்டலாம். இப்படியான பல படங்கள் வந்த பிறகு அந்தத் தேவர் பெண் தலித் பையனின் கையைப் பிடித்துக்கொண்டு தொடுவானத்தைநோக்கி ஓடிப் போவதாகக் வாழப்போவதாகக் காட்டலாம்.

ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் ஒருவருடைய பிணத்தை மேல் சாதிக்காரர்களின் தெருவழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று ஊர்க்காரர்கள் தடுக்கிறார்கள். மேல் சாதிக்காரத் தலைவர் ஒருவருக்கு இந்தச் செய்தி சென்று சேருகிறது. அவர் உடனே தன் ஆட்களுடன் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று தாழ்த்தப்பட்டவரின் பிணத்தைத் தன் தோளில் தூக்கிச் செல்கிறார் என்று காட்டலாம். கிராமங்கள் தோறும் அம்பேத்கரின் சிலையை அந்த மேல்சாதிக்காரத் தலைவர் திறப்பதாகக் காட்டலாம். பெருந்திரளான மக்கள் சாதிப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் சொல்லவிரும்புகிறார்கள். எனவே எல்லா சாதிகளிலும் இருக்கும் சாதி நல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதுபோல் ஒரு திரைப்படத்தை எடுத்தால் அதில் இடம்பெறும் உரிமைகோரல் வசனங்களை யாரும் எதிர்க்கமாட்டார்கள். படத்தின் இறுதிச் செய்தியே அவர்களைச் சென்று சேரும்.

ஆனால், ரஞ்சித்துக்கும் (அவருக்கு ஆதரவாகப் பேசும் அறீவுஜீவி, விமர்சனக்கூட்டங்களுக்கும்) நல்லிணக்கத் தீர்வுகள் இலக்கு அல்ல. போர்க்குணம் மிக்க வசனங்கள், நடைமுறைகளே இலக்காக இருக்கின்றன. சூழல் அதற்கு சாதகமாக இல்லை என்பதால் வெவ்வேறு சமரசங்களுடன் தமது கோபத்தை வெளிப்படுத்தப் பார்க்கிறார். கபாலி படத்தை மலேசியப் பின்னணிக்குக் கொண்டு சென்றது அப்படியான ஒரு முயற்சியே. ஆனால், அப்படிச் செய்த பிறகாவது அந்தச் சூழலிலாவது துணிந்து தன் கருத்துகளை முன்வைத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. மலேசியத் தமிழர்களுக்கு சீனர்களால் எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்று சொல்லி அங்கும் சமரசம் செய்துகொண்டிருக்கிறார்.


உண்மையில் கதையின் களத்தை மாற்றிக்கொண்டது அருமையான யோசனைதான். இதுபோன்ற கதையுடன் இதற்கு முன்பாக தமிழில் நாயகன் வந்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மராட்டியரை எதிர்த்து வென்ற தமிழர் என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்காமல் நல்லவரா கெட்டவரா என்று சொல்ல முடியாத, நாலு பேருக்கு நல்லது செய்யும் தாதா ஒருவரைப் பற்றிய கதையாக அதைக் கொண்டுசென்றிருப்பார். என்றாலும் அந்தக் கதைக்கு அற்புதமான திரைக்கதை அமைத்திருப்பார். ரஞ்சித் இதில் வெகுவாகக் கோட்டைவிட்டிருக்கிறார். 

கபாலியின் குடும்ப எமோஷனல் காட்சிகள் எடுபடாமல் போனதற்கு முக்கிய காரணம் கபாலியின் போராளி பிம்பம் தொடர்பான காட்சிகளில் தென்படும் செயற்கைத்தனம்தான். உண்மையில் மலேசியாவில் மக்களுக்காகப் போராடிய கட்சி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடவில்லை. அது இந்தியத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கேட்டு நேர்வழியிலேயே போராடியது. அந்தத் தலைவரையும் கட்சியையும் கேங்ஸ்டராகச் சித்திரித்தது படு கேவலம். நிஜத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மீட்பராக வந்த டாக்டரை மதமாற்றக் கோமாளியாக (அவருக்கு அம்பேத்கரின் உடையை அணிவித்திருப்பார் பாலுத்தேவர்!) பாலா தன்னுடைய பரதேசி படத்தில் செய்தது போன்ற மிகவும் மோசமான சித்திரிப்பு. இந்தப் படத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர் கட்சியை ரவுடி கும்பலாகச் சித்திரித்திருக்கிறார். ஏன் ரஞ்சித்..? உங்களுக்கு கேங்ஸ்டர் கதை வேண்டுமென்றால் அதை அப்படியே கொண்டு செல்லலாமே... கம்யூனிஸ்ட் போராளியை எதற்காக கேங்ஸ்டராக ஆக்கவேண்டும்? அதிலும் அந்த விஷயங்களை இவ்வளவு கத்துக்குட்டித்தனத்துடனா சித்திரிக்கவேண்டும். பாட்டாளி வர்க்க நலனையும் தமிழர் நலனையும் தலித் நலனையும் இப்படிக் கொச்சைப்படுத்தானா நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?

இந்த இடத்தில் இன்னொரு கேள்வி வருகிறது. தமிழ் தேசியவாதிகள் தமக்கான கொள்கைப் பரப்புச் செயலராக வீரப்பனாரையே முதலில் முன்னெடுத்தனர். வரதராஜ முதலியாரையும் மணிரத்னம் முஸ்லீம் பாயினால் வழி நடத்தப்படும் அண்டர் வேல்ட் தாதாவாகவே சித்திரித்தார். ஈழத் தமிழர் விடுதலைக்காகப் போராடிய பிரபாகரன் மற்றும் புலிகள் மீதும் கள்ளக்கடத்தல் குற்றச்சாட்டுகள் வலுவாக உண்டு. விடுதலைச் சிறுத்தைகள் மீதும் கட்டப்பஞ்சாயத்து புகார்கள் உண்டு. அடித்தள மக்களின் விடுதலைப் போர் என்பது இப்படி அண்டர்வேல்ட் தாதாக்களின் கையில்தான் சிக்கவேண்டுமா? வாஞ்சிநாதன், நேதாஜி போன்றோரின் வன்முறைப் பாதை என்பது பிரிட்டிஷ் சட்டத்துக்கு எதிரானதுதானே தவிர தர்மத்துக்கு எதிரானதல்ல. அஹிம்சை மட்டுமே சிறந்த வழி என்று சொல்லமுடியாதுதான். ஆனால், அதற்காக இப்படியா அண்டர் வேல்ட் மாஃபியாவிடம் தஞ்சம் புகவேண்டும்?


ரஜினியைப் போல், ரஞ்சித்தும் சில காலம் கழித்து என் திரைப்படங்களில் இடம்பெற்ற தலித்  சார்பு வசனங்கள், காட்சிகள் எல்லாம் வெறும் வர்த்தக நோக்கம் கொண்டவையே என்ற உண்மையைச் சொல்லக்கூடும். ஆனால், விமர்சக மற்றும் தலித் அரசியல்/கலைப் போராளிகள் ரஞ்சித்துக்கே தெரிந்திராத குறியீடுகளை அவருடைய படத்தில் கண்டுசொல்லும் கலையில் தேர்ச்சிபெற்றுவருவதால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், என்ன பலரால் சொல்லப்படாவிட்டாலும் உண்மை உண்மையாகத்தானே இருக்கும்.