Wednesday 30 March 2016

ஊழல் பெருச்சாளியும் வேறு சில விஷ ஜந்துக்களும்...

‘பெருச்சாளி’ என்றொரு மலையாளப் படம். செல்போனோடு லாஜிக்கையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டுப் படத்தைப் பாருங்கள் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அதற்கு அர்த்தம் சுவாரசியமான திரைக்கதையை எதிர்பார்க்காதே என்பது படத்தைப் பார்த்த பிறகே தெரியவருகிறது. அதை முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.

அமெரிக்க கவர்னர் தேர்தலில் ஒரு போட்டியாளரை வெற்றி பெற வைக்க கேரளத்து ஆலோசகரை (லாலேட்டன்) அழைத்துச் செல்கிறார்கள். அந்த கேரளத்து ஆலோசகருடைய திறமையையும் ஆளுமையையும் காட்டும் ஆரம்பகட்டக் காட்சிகளைக்கூட ஓரளவுக்குப் பொறுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவில் அவர் செய்யும் ‘தந்திரங்கள்’ கௌரவமான மொழியில் சொல்வதென்றால், படு குழந்தைத்தனமாக இருக்கின்றன.

உண்மையில் இந்தக் கதையின் தலை கீழ் வடிவம் இதைவிட சுவாரசியம் மிகுந்தது. அதுமட்டுமல்ல அதுதான் நடைமுறையில் நடக்கவும் செய்கிறது. அதாவது, இந்தியாவின் தேர்தல்களை அமெரிக்கா (இந்திய ஊடகங்களின் வென்ச்சர் முதலீட்டார்கள், கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல் ஏஜெண்டுகள், சமூகத் தளங்களில் திணிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க விசுவாசிகள், ஸ்லீப்பர் செல்கள் எனப் பலவழிகளில்) தீர்மானிக்கிறது. நேர்மையானவர்களை ஹனி டிராப் மூலமாகவும் ஊழல்வாதிகளை அவர்களுடைய ஊழல் நடவடிக்கைகளை வைத்தும் பிளாக் மெயில் செய்கிறார்கள். ஒவ்வொரு கட்சியிலும் இயக்கத்திலும் மிதவாதிகளையும் பிற சக்திகளுடன் நல்லிணக்கத்தை விரும்பும் நபர்களையும் ஓரங்கட்டிவிட்டு அடிப்படைவாதிகளை முன்னுக்குக் கொண்டுவருவதன் மூலம் தன் கையைக் கொண்டே கண்ணைக் குத்திக் கொள்ளச் செய்யும் வேலையை மிக அருமையாகச் செய்துவருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தோதான அரசியல்வாதிகளை வெற்றி பெற வைப்பதன் மூலம் தனது நலன்களை எளிதில் பூர்த்திசெய்துகொள்கிறார்கள்.

இதுபோன்ற சாத்தியக்கூறுகளை கான்ஸ்பிரஸி தியரி என்ற பெயரில் ஓரங்கட்டவே நவீன மனம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. செய்தித்தாளில் வரும் செய்திகள் அல்லது ஏதேனும் அமெரிக்க ஐரோப்பிய வெள்ளைத்தோல் நிபுணர்கள் சொன்னால்தான் எதையும் நம்புவேன் என்று அடம்பிடிக்கும் அறீவுஜீவி வர்க்கம் உலக நிகழ்வுகளை தனது எஜமானர்களின் அரசியலுக்கு உகந்த கோணத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் அது அந்த வழித்தடத்தில் மட்டுமே பயணிக்கும். பொதுஜனமோ தன் முன் வைக்கப்படும் செய்தியின் பின்னால் மறைந்திருக்கும் எந்தவொரு தந்திரத்தையும் அறியாமல் கீரைக் கட்டுக்கு கழுத்தை நீட்டும் அப்பாவி ஆடு போல் மேய்ப்போன் அடைக்கும் பட்டிகளில் சென்று அடைந்துகொள்கின்றன.

சர்வ தேச சக்திகள் தமது நலன் சார்ந்து இந்தியாவில் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதற்குத் தோதாகவே இங்கு எல்லாம் நடக்கும்; நடத்தப்படும் என்ற அடிப்படையில் தமிழகத் தேர்தலில் அவை எப்படியெல்லாம் செயல்படக்கூடும் என்பதை முதலில் பார்ப்போம்.

இப்போது தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் அரசியல் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது என்ன..? ஊழல் ஒழிப்பு, மது விலக்கு, பெருந்தொழில்மயமாக்கம், தமிழ் தேசிய உருவாக்கம், சாதி அரசியல், மத அரசியல் என பல விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வ தேச அரசியல் சக்திகளுக்கு இந்தியா சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மாநில ரீதியாகவும் பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது ஒருவகையில் மிகவும் அவசியம். இந்தியா ஒற்றை தேசமாக பலம் பெற்றூவிட்டாலோ இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்துவிட்டாலோ அமெரிக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக ஆகிவிடும். 16-17-ம் நூற்றாண்டு வாக்கில் எல்லாம் சீனாவும் இந்தியாவுமே வல்லரசாக இருந்திருக்கின்றன. அதை கஷ்டப்பட்டு அமெரிக்க ஐரோப்பியப் பக்கம் திருப்பியிருக்கும் நிலையில் வரலாறு திரும்புவதை அவர்கள் விரும்பவேமாட்டார்கள். அதிலும் இந்திய சீன சந்தையை நம்பியே அமெரிக்க ஐரோப்பிய வணிகம் இருக்கும்நிலையில் இந்த இரு ஆசிய சக்திகளும் ஒன்று சேர்வதும் தன்னளவில் பலம் பெறுவதும் விரும்பத்தக்க நிகழ்வு அல்ல.

சீனாவின் கம்யூனிஸ சர்வாதிகாரம் தேச பக்தியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதால் அங்கு சர்வ தேச சக்திகளால் எதுவும் செய்ய முடியவில்லை ஜனநாயகம், கருத்து சுதந்தரம் என்ற பெயரில் ஊடகங்கள் மூலம் கால் பதித்து தேச விரோத உணர்வை வளர்க்க சீனாவில் வழியில்லை. ஆனால், இந்தியாவோ சத்திரத்து ஆட்டுக்கல்லாக யார் வேண்டுமானாலும் எதைப் போட்டு வேண்டுமானாலும் ஆட்டிக்கொள்ள அனுமதிக்கும் தேசமாக இருக்கிறது. எனவே, சர்வ தேசம் இங்கு தன் அனைத்து பரிசோதனைகளையும் செய்துபார்க்கிறது.

தேர்தல்களை எடுத்துக்கொண்டால் மின்னணு வாக்குப் பதிவு எந்திர மோசடியில் ஆரம்பித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துத் தருதல், ஊடகங்கள் மூலம் பொதுக்கருத்தை வளைத்தெடுத்தல், கட்சிகளுக்குத் தேர்தல் அறிக்கைகளை எழுதித் தருதல், கட்சிகளில் தனக்குத் தோதான ஆட்களை முன்னுக்குக் கொண்டுவருதல், சமூக வலைதளங்களில் ‘செய்தி’களைப் பரப்புதல் என அதற்கான வியூகம் விரிவாக வகுக்கப்பட்டிருக்கிறது.

தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திர மோசடி ஒன்றே போதும். ஆனால், அதைமட்டுமே செய்தால் பின்னாளில் சந்தேகம் வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவரை வெற்றி பெற வைத்தால் அவர் நமது விருப்பங்களுக்கு ஏற்ப ஆடுவார் என்று சர்வ தேச சக்தி ஒன்று தீர்மானிப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், அதை அவர்கள் வாக்குப் பதிவு எந்திர மோசடி மூலம் மட்டுமே செய்தால் அனைவருக்கும் சந்தேகம் வரும். எனவே, அந்த மோசடியோடு கூடவே மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை ஊடகங்களின் மூலம் உருவாக்கிவிட்டால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.

இன்றைய தேர்தலில் முன்னிலைக்கு வந்திருக்கும் இரண்டு அம்சங்களை எடுத்துக்கொண்டு சர்வ தேச சக்திகளுக்கும் அவற்றுக்கும் இடையிலான தொடர்பைப் பார்ப்போம். முதலாவதாக மக்கள் நலக் கூட்டணி, மன்னிக்கவும் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி. இரண்டாவது விஷயம் தமிழ் தேசிய சித்தாந்தம்.

அதிமுகவும் திமுகவுமே சர்வ தேச சக்திகளுக்கு இணக்கமாக நடக்ககூடிய கட்சிகள்தானே. பின் எதற்காக வேறொரு கட்சியை அதுவும் பலரைக் கொண்ட கூட்டணியை முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த இடத்தில்தான் ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்க வேண்டும். அந்நிய பொருளாதார சக்திகளுக்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் அவசியம். அவர்கள் ஒரு கம்பெனியை ஆரம்பிக்க விரும்பினால் ஒரு சில மாதங்களில் அனுமதி கிடைத்து பிற அனைத்து சலுகைகள் வசதிகள் அனைத்தும் செய்துகொடுக்கப் பட்டாக வேண்டும். அதிமுக அரசில் அதன் ஊழல் மட்டுமல்ல அதன் தலைமையின் செயலற்ற நிலையினாலும் பெரிதும் எரிச்சலூட்டுவதாக ஆகிவிட்டது. திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றலாம்தான்; ஆனால், அதைவிடப் பெரியதொரு இலக்கும் இருக்கிறது. அதுதான் இந்திய உடைப்பு.

உலகின் முப்பெரும் சக்திகளான அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவ சக்திகள், உலகளாவிய இஸ்லாமிய சக்திகள், கம்யூனிஸம் ஆகிய மூன்றுமே இந்து இந்தியாவை விழுங்கக் காத்திருக்கின்றன. ஒரேயடியாக முழுங்க முடியாதென்றால் ஓரங்களில் இருந்து பிய்த்துத் தின்னு என்ற வழிமுறைக்கு ஏற்ப ஏற்கெனவே இந்தியாவின் எல்லைப் புற மாநிலங்களில் தீவிரவாதக் குழுக்களை வளர்த்தெடுத்து வந்திருக்கின்றன. காஷ்மீர் முதலான வடக்குப் பகுதிகளில் பாகிஸ்தான் மூலமாக இஸ்லாமும் வடகிழக்குப் பகுதிகளில் அமெரிக்க மிஷனரிகளும் பிஹார், ஒரிஸா, ஆந்திரா போன்ற பகுதிகளில் மாவோயிஸ சக்திகளும் அழுத்தமாகக் கத்தியைச் செருகி இந்தியாவை ரத்தம் கசிய வைத்துவருகின்றன. ஒப்பீட்டளவில் இன்றுவரை இப்படியாக தாக்குதல்களுக்கு ஆளாகாமல் தென் பகுதி தப்பி விட்டிருந்தது. ஆனால்,

இப்போது தமிழகத்திலும் இந்திய விரோத  எண்ணங்களைத் தூண்டிவிட இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ சக்திகள் மூன்றுமே திட்டமிட்டிருக்கின்றன. அதற்குத் தோதாக இந்தியாவின் தென் அண்டை நாடான இலங்கையின் பிரச்னை தேடாமலேயே கிடைத்த செல்வமாக வந்து சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியாவைக் குற்றவாளியாக்கும் பணியை சர்வ தேசமும் இலங்கையும் கூட்டாகச் செய்து முடித்திருந்தன. இப்போது அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து தமிழகத்திலும் அதிருப்தியையும் கலவரத்தையும் தூண்ட முன்வந்திருக்கின்றன.

இலங்கையில் சிங்கள அரசு முழு வெற்றி பெற்றுவிட்டிருக்கும் நிலையில் இனி ஒருநாளும் தமிழ் பிரிவினைவாதம் இலங்கையில் தலைதூக்க விடக்கூடாது என்ற தொலைதூர இலக்குடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் தமிழர் சக்தி பலவீனப்பட்டால் மட்டும் போதாது. இந்தியாவில் அது வலுவாக இருந்தால் என்றைக்கு வேண்டுமென்றாலும் இந்தியா இலங்கைக்கு எதிராக தமிழர் நலன் சார்ந்து செயல்பட்டுவிடக்கூடும். அதைத் தடுக்க ஒரே வழி இந்திய மைய அரசுக்கும் தமிழக மாநில அரசுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தவேண்டும். தமிழர்களுக்கு பிரிவினைக் கோஷங்களைக் கற்றுத் தருவதென்பது தாசிக் குட்டிக்கு மயக்கக் கற்றுத் தருவதைப் போன்றது. இலங்கையில் சிங்கள அரசு முழு வலிமை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்திய எதிர்ப்பு குரல்கள் வலுவடைவதை வைத்து ஒருவர் இரண்டுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

இயல்பான தமிழர் நலன் சார்ந்த இயக்கமாக இருந்திருந்தால் இந்திய கூட்டமைப்பை தமிழர் நலன் சார்ந்து வழிகாட்டி இலங்கையை வழிக்குக் கொண்டுவரத்தான் முயன்றிருக்கும். அதற்கு இந்திய மைய அரசுடன் நட்புறவை பலப்படுத்திக்கொள்வதுதான் எளிய இயல்பான வழியாக இருந்திருக்கும்.  இன்று தமிழகத்தில் ஒலிக்கும் புலி ஆதரவு-தமிழ் தேசியக் குரல்கள் இந்திய எதிர்பைப் பிரதானமாக வைத்திருப்பதில் இருந்து அவர்கள் சிங்கள எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடும் குரங்குகளாகவே ஆகிவிட்டிருப்பது தெரிகிறது. இன்றைய தமிழ் தேசியவாதிகளின் ஆவேசக் கை உயர்த்தலுக்குப் பின்னால் ராஜ பக்சேவின் மெல்லிய புன்முறுவலே கேட்கிறது. சர்வ தேச சதியின் சாதுரியம் இதுதான். கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அப்படியே கண்டுபிடித்தாலும் மற்றவரை நம்பவைப்பது அதை விடக் கடினம்.

ஆனால், நேரடியாக இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பெரு வெற்றி பெற வைத்து ஆட்சியைப் பிடிப்பதாகக் காட்டிவிட முடியாது. அது மிகுந்த சந்தேகத்தை உருவாக்கிவிடும். மக்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வும்  இன்னும் வரவில்லை. குறிப்பாக இந்திய விரோத உணர்வு வந்திருக்கவே இல்லை. எனவே மெள்ள மெள்ளத்தான் காய் நகர்த்த வேண்டியிருக்கும். மக்கள் நலக்கூட்டணி நல்ல இடைக்கால முயற்சி. அதில் இருக்கும் வைகோ தீவிர தமிழ் தேசியவாதி. எனவே, இந்திய எதிர்ப்பாளர். கம்யூனிஸ்ட்களும் இந்திய எதிர்ப்பு பின்னணி உடையவர்களே. தலித் அரசியல் கட்சிகள்  இத்தனை காலம் கிறிஸ்தவ பின்னூட்டம் இருந்த நிலையிலும்  வெளிப்படையாக இந்திய விரோதம் பாராட்டியதில்லை.  ஆனால், சமீப காலமாக இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்திய விரோதமும் தலித் சாயம் பூசிக்கொண்டு முன்னால் வரத் தொடங்கியிருக்கின்றன. அதன் தமிழகத்து வெர்ஷனாக திருமா மக்கள் நலக்கூட்டணியில் முன்னணி இடத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

கடந்த தேர்தலைத் தொடர்ந்து திமுகவால் ஓரங்கட்டப்பட்ட தலித் கட்சியானது பாமகவாலும் கட்டம் கட்டப்பட்ட நிலையில் ஒருவித அரசியல் அநாதை நிலையில்தான் இருந்தது. இந்த நிலையில்தான் அரபு நாடுகளுக்கான திருமாவளவனின் சுற்றுப் பயணங்கள் அவரை மாற்று அணியின் தலைவராக முன்னிலைப்படுத்தியிருக்கின்றன. மக்கள் நலக் கூட்டணியில் முதலில் சேர்ந்து இருந்த முஸ்லிம் கட்சியானது மெள்ள விலகிக் கொண்டது.  நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்தால் தீவிரவாதக் கட்சி என்று எளிதில் உங்களை ஓரங்கட்டிவிடுவார்கள். எனவே, நாங்கள் வெளியேறிச் செல்கிறோம். ஆனால், எங்கள் கொள்கையை நீங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று பேசி முடிவெடுத்திருக்கிறார்கள்.  

இந்திய விரோத, இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு நிலையை மறைக்கும் போர்வையாகவே விஜயகாந்துடனான கூட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தேசியவாதக் கட்சியான பி.ஜே.பி.யைத் தனிமைப்படுத்தும் பணியும் நடந்தேறியிருக்கிறது.

இப்படியாகக் கொள்கை சார்ந்த நபர்களின் ஒருங்கிணைப்பு நீங்கலாக பொது அரசியல் தளத்தில் இந்தக் கருத்தாக்கத்தைக் கொண்டுசெல்லும் பணிகளும் கூடவே நடந்தாகவேண்டும். இதில்தான் ஹனி டிராப்பில் சிக்கவைக்கப்படும் அரசியல் தலைவர்களின் பங்கு வருகிறது. அப்படிப்பட்ட ஒருவரை இந்திய தேசியத்துக்கு எதிராகப் பேச வைப்பது மிகவும் எளிது. ஒரு நபரின் ஒரு இரவைக் கைப்பற்ற முடிந்தால் அவருடைய அதற்குப் பிந்தைய அத்தனை பகல்களையும் நீங்கள் வென்றுவிட முடியும். அதிலும் அந்த தலைவர் அல்லது ஊடக நிறுவனத் தலைவர் ஓரினச் சேர்க்கை போன்றவற்றில் ஆர்வம் உடையவராக இருந்தால் அவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்வது எளிது. அவரைப் பொறுத்தவரையில்  ஓரினச் சேர்க்கையாளராக பொதுவெளியில் அம்பலமாவதைவிட சாதி வெறியராக அடையாளம் காணப்படுவது அதைவிட மேலானது. இந்திய தேச விரோதம் பேசுவது அதைவிட மேலானது.

அதுபோல் ஊழல் வழக்கில் சிக்கியவரையும் இதுபோல் எதை வேண்டுமானாலும் செய்யவைக்க முடியும். எனவே, தமிழ் தேசியமும் இந்திய விரோதமும் தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்ற வேண்டுமென்றால் ஒருபக்கம் நாம் தமிழர் போல் வீர முழக்கங்கள் போட வைக்க வேண்டும். இதே கொள்கையுடையவர்களை வேறு ஒரு போர்வையில் இணைக்கவேண்டும் (கே.ம.ந.கூ). கூடவே பிற அரசியல் தலைவர்களை ஊழல் வலையில் (அதிமுக., திமுக) சிக்கவைக்கவேண்டும். இந்த மூன்றையும் தெளிவாகச் செய்து முடித்தால் பாதி வெற்றி பெற்றதுபோல்தான்.

ஆனால், மக்கள் ஆதரவு இல்லாமல் எந்தக் கருத்தியலையும் நீண்ட நாட்களுக்கு நிலைபெற வைக்கமுடியாது. என்னதான் காவிரி விஷயத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது... முல்லைப் பெரியாரில் மோசம் செய்கிறது... அணு உலை, கெயில் திட்டம் கொண்டுவந்து தமிழர்களைக் கொல்லப் பார்க்கிறது. அப்பாவித் தமிழர்களைத் தூக்கில் போடத் துடிக்கிறது என்றல்லாம் சொன்னாலும் மக்கள் மத்தியில் இந்திய தேச வெறுப்பாக அது உருத்திரளவே இல்லை. எனவே, அதிரடியாக ஏதாவது செய்தால்தான் முடியும். வட கிழக்கு மாநிலத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த பழங்குடிகள் மீது ராணுவ உடையில் வந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அனைவரையும் கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் பழங்குடிகளுக்குப் பெரும் ஆத்திரம் வெகு எளிதில் உருவாகிவிட்டது.

தமிழகத்தில் நாம் தமிழர் மூலம் வலைதளங்களிலும் சொற்ப எண்ணிக்கையில் பொதுமக்கள் மனதிலும் இந்திய வெறுப்பு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏதேனும் பிரச்னையில் மத்திய அதிரடிப் படையோ ராணுவமோ ஏதேனும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டாலோ அல்லது அவர்கள் ஈடுபட்டதுபோல் வேடமிட்டுச் செய்ய முடிந்தாலோ ரத்த ஊற்றின் கல் கிளர்த்தப்பட்டுவிடும். அதன் பிறகு பஞ்சாப் காலிஸ்தான்போல் சுமார் பத்திருபது வருடங்கள் தமிழகம் ரத்தக்காடாக ஆகும். இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியும் மேலும் முடக்கப்படும். தமிழ் தேசியக் கனவு கொண்டவர்களுக்கும் அவர்களைப் பின்னின்று இயக்குபவர்களைப் போலவே தனி நாடு சாத்தியமில்லை என்பது தெரியும். எனினும் முடிந்தவரை இந்தியாவின் வளார்ச்சியை முடக்கிய திருப்தி கிடைக்கும். அதுவே பெரிய வெற்றிதான் அவர்களுக்கு.

அமெரிக்காவுக்கு இந்திய சந்தை தேவை. எனவே இந்தியாவில் சண்டைகள் நடப்பதை அது விரும்பாது என்று சிலர் சொல்லக்கூடும். ஒருவகையில் அது உண்மைதான். ஆனால், அமெரிக்காவின் எந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை ஒருவர் யோசித்துப் பார்க்கவேண்டும். கொக்க கோலாவுக்கும் கெய்லுக்கும் சோப் கம்பெனிக்கும் கார் கம்பெனிக்கும் கொடுத்திருந்தால் அவர்கள் சுரண்டிக் கொழுக்க அமைதியான சூழல் தேவை என்பதால் விட்டுவைக்கக்கூடும். ஒருவேளை காஷ்மீர் போல் வட கிழக்கு மாநிலங்கள் போல் ஆயுத உற்பத்தி கம்பெனிக்கு இந்தியாவின் தென் பகுதியை ஒப்படைத்திருந்தால்? தமிழ் தேசிய முழக்கங்கள் எல்லாமே பிராபாகரனே எமது தலைவர் என்று முழங்கிக் கொண்டுதானே தொடங்குகின்றன. அப்படியானால், இங்கு அமைதி நிலவவா அந்நிய சக்திகள் திட்டமிட்டிருக்கும்?

இந்த அரசியல் கணக்குகளின் பின்னணியில்தான் நாம் தமிழர் எழுச்சியும் மக்கள் நலக்கூட்டணியின் முன்னிலையும் தேர்தல் கேம்பெய்னர்களால் அவர்களுடைய ஊடகங்களின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தச் சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்கும்போது கூடுதல் டிராமாக்களைச் சாத்தியப்படுத்த முடியும். இந்திய தேசியக் கொடியை எரித்த நபரின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். முதல் நாளில் அவன் மன்னிப்புக் கேட்டதாகவும் விளம்பரத்துக்காகச் செய்ததாகவும் அரசு தரப்பு செய்தி வெளியானது. அடுத்த நாளில் அவன் கையில் பெரிய கட்டுடன் காட்சியளித்தான். இந்திய வல்லாதிக்கம் அவன் கையை உடைத்ததாக அடுத்தகட்ட காட்சி எழுதப்பட்டிருந்தது. மிக நல்ல திரைக்கதை ட்விஸ்ட் அது. சென்னை வெள்ளத்தின்போது அவன் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டபோதே அந்தத் திரைக்கதை தொடங்கிவிட்டது. திரைப்படத்தில் இதை இன்னும் டிரமடைஸ் செய்யலாம்.

ஒரு தலைவர் மக்கள் கூட்டத்தில் பேராவேசத்துடன் இந்திய எதிர்ப்பு முழக்கங்கள் செய்வதாகவும் மறுநாள் அவருடைய வீட்டில் அல்லது வாகனத்தில் குண்டு வைக்கப்படுவதாகவும் காட்டலாம். இந்திய ரா-வின் கோழைத்தனமான நடவடிக்கை என்று அடுத்த கூட்டத்தில் அந்தத் தலைவர் முழங்குவதாகக் காட்டலாம். கடலோர கிராமத்தில் ஏதேனும் மத்திய காவல் படையினருடன் வம்பிழுத்து அவர் அடிப்பதை அல்லது அவர்களில் யாரேனும் அராஜகமாகச் சுட்டுக் கொல்வதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மீனம்பாக்கத்தில் ஒரு ராணுவ அதிகாரி மாங்காய் பறிக்க வந்த சிறுவனைச் சுட்டுக் கொன்றுவிட்டார். அவர் தமிழராக இருந்ததால் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை அவர் வட இந்தியராக இருந்திருந்தால் ஒரு காட்டு காட்டியிருக்கலாம். மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் ஏராளமான குடிமகன்கள் நிழல் தேடிப் படுத்திருப்பதுண்டு. மத்திய ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த வட இந்திய காவலர்கள் அவர்களை அடித்து விரட்டுவதும் உண்டு. இதையே கொஞ்சம் மாற்றினால் போதும். அந்தத் தமிழ்க் குடிமகனை  இனமானப் போராளியாக ஆக்கி வட இந்தியக் காவலரை இந்திய வல்லாதிக்க ஓநாயாகச் சித்திரித்தால் 10 நிமிட விறுவிறு காட்சிகள் கிடைத்துவிடும்.  இப்படியான நிகழ்வுகளை தேர்தல் கேம்பெய்ன் ஆலோசகர்கள் உருவாக்கி அல்லது தானாக உருவாகிறவற்றை மிகைப்படுத்தி தமிழகத்தில் இந்திய விரோதத்தை காலூன்ற வைப்பதாக ஒரு படம் எடுக்கலாம். பெருச்சாளியைவிட அது விறுவிறுப்பானதாக விழிப்பு உணர்வை ஊட்டக்கூடியதாக இருக்கும்.

அப்படியாக, ஒரு அடிப்படைவாதத் தலைவர் அரியணை ஏறுவது எப்படி என்று அந்தப் படம் எழுதப்படலாம். ஆட்சியில் இருக்கும் கட்சி ஊழல் முத்திரை குத்தப்பட்டு பலவீனப்படுத்தப்படுகிறது. ஹனி டிராப்பில் சிக்க வைக்கப்பட்ட ஊடக முதலாளி அடிப்படைவாத கட்சிக்கு முழு அளவில் விளம்பரம் தருகிறார். பிற கட்சிகளில் உள்ள அடிப்படைவாத சக்திகள் அவருடைய ஊடகத்தினால் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். ஊருக்குள் ஆதிக்க சக்தியின் போர்வையில் அராஜகங்கள் நடத்தப்படுகின்றன. தனி நபர்கள் செய்யும் தவறுகள் ஆதிக்க சக்தியின் தவறாக மிகைப்படுத்தப்படுகின்றன. ஒரு இடத்தில் கொலை நடந்ததும் ஊரே  சுடுகாடாக ஆகிவிட்டதுபோல் விருது வாங்கிய எழுத்தாளர்கள் பொங்குகிறார்கள்.

அடிப்படைவாதத் தலைவர் ஒரு கூட்டத்தின் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்படுகிறார். அல்லது அந்தக் கட்சியின் எளிய தொண்டர் கொல்லப்படுகிறார் (கல்லூரி மாணவராக இருந்தால் கூடுதல் மைலேஜ் கிடைக்கும்). அந்தக் கட்சிக்கு அனுதாப அலை பெருகுகிறது. இவற்றோடு வாக்குப் பதிவு எந்திர மோசடியும் சேர அடிப்படைவாத தலைவரே வெற்றி பெறுகிறார். அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியே தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்கிறது. ஆட்சி அமைக்க அடிப்படைவாத கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஊழலில் சிக்கிய அவர் இவர்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறார். அப்படியாக அடிப்படைவாதக் கட்சி தோற்றாலும்  அதன் கருத்தியல் வெற்றி பெறுகிறது என்பதாக அந்தப் படத்தை எடுக்கலாம்.  இந்தப் படம் ஒரு புனைவாக மட்டுமே எடுக்கப்பட வேண்டுமென்றால் உடனே எடுக்கப்பட்டாக வேண்டியிருக்கும். இல்லையென்றால் வரலாற்று ஆவணப்படமாகிவிடும் அபாயம் இருக்கிறது! 

No comments:

Post a Comment