Friday 1 January 2016

ரஷோமானும் ராஜீவ் கொலையும்

ரஷோமான் - ராஜீவ் கொலை
ஒரு நிகழ்வின் மூன்று சாத்தியக்கூறுகள்... நிஜத்தில் என்ன நடந்தது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் உண்மை என்று நம்புபவையெல்லாம் மெய்யான உண்மைதானா... சொல்பவருடைய உண்மை மட்டுமேவா..?



இந்தக் கோணத்தில் ரஷோமான் திரைக்கதையை குரோசோவா அருமையாகப் பின்னியிருப்பார். உண்மையின் மெய்த்தன்மை குறித்த சிக்கல் அதன் உச்சத்தை எப்படி ரஷோமானில் எட்டியது? அந்தப் படத்தில் சொல்லப்படும் உண்மை நிகழ்வான கொலைக்கு மூன்று தரப்புகள் சொல்லப்படுவதோடு நிற்கவில்லை... தானே அந்தக் கொலைக்குக் (மரணத்துக்) காரணம் என்று மூன்று பேருமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது பழி போடுவதாக இருந்தால் அது வெறும் சுய நலம் சார்ந்த பொய்களாகிவிட்டிருக்கும். ஆனால், ரஷோமானில் கொள்ளைக்காரன் தான் தான் கொன்றதாகச் சொல்கிறான். கொல்லப்பட்டவனின் ஆவியோ தானே தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறது. கொல்லப்பட்டவனின் மனைவியோ யார் கொன்றது என்று தெரியவில்லை. மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன் என்று சொல்கிறாள். ஒருவகையில் அவளே கொன்றிருக்கக்கூடும்; உண்மையை ஒப்புக்கொள்ளப் பயந்து மயங்கிவிட்டதாகச் சொல்கிறாள் என்று யூகிக்க இடம் தரும்வகையில் அந்த உண்மையும் புதிராகவே முன்வைக்கப்படுகிறது. அதோடு மூன்று பேர் சொல்வதும் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு என்ற வகையில் அந்தக் குழப்பம் மேலும் சுவாரசியமும் பூடகமும் மிகுந்ததாகிறது. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போர் என்பது மறைந்து மூன்று உண்மைகளுக்கு இடையிலான போராட்டம் என்பதாக அது ரசவாதம் பெறுகிறது. இவையெல்லாம் குரோஷோவாவின் மேதமையைக் காட்டுகின்றன.



நாம் உண்மையென்று நம்புவதன் பின்னால் நமக்கான அரசியலே இருக்கிறது. உண்மையின் இந்த மாயத்தன்மை மற்றும் புதிர்தன்மையை வேறு நிகழ்வுகளுக்கு மாற்றினால் அதன் கனமும் தீவிரமும் கூடும். ரஷோமானின் ஆதார நிகழ்வு தனி நபர் நிகழ்வே இருக்கிறது. மக்களுக்கு அதிகம் தெரிந்திராத ஒரு நபர் கொல்லப்படுகிறார். அவ்வளவுதான். ஆனால், நிஜ வாழ்வில் பலரைப் பாதித்த ஒரு நிகழ்விலும் இப்படியான புதிர் இருக்கக்கூடும். அப்படியான ஒன்றில் பல உண்மைகளை முன்வைக்கும்போது ஒரு உண்மையை முழு உண்மையென நம்பிச் செயல்பட்டவர்கள் ஒரு கணம் திகைத்துப்போவார்கள். அதை அடிப்படையாக வைத்து வன்முறைகளையும் பிற செயல்களையும் செய்தவர்களுக்கு தாங்கள் நம்பிய உண்மை, உண்மையில் உண்மையில்லாமல் இருந்திருக்குமோ என்ற கேள்வி தரும் அதிர்ச்சியும் அந்தப் புரிதல் தரும் தெளிவும் பல புதிய கதவுகளைத் திறந்துவிடக்கூடும். நமது தரப்பு மட்டுமே முழு உண்மை என்ற மூர்க்கத்தனமான விசுவாசத்தை ஒருவேளை மட்டுப்படுத்தக்கூடும். பலரைப் பாதித்த வரலாற்று நிகழ்விலும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்புமே தமது தவறைத் தாமே ஒப்புக்கொள்வதாகக் காட்டினால் அனைத்துவகை அரசியல் தீவிரவாதங்களுக்கும் பெரும் சவாலாக அது அமையும்.



உதாரணமாக, ராஜிவ் காந்தி கொலை என்ற பெரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். விடுதலைப் புலிகள்தான் கொன்றதாக உலகம் நம்புகிறது. ஆனால், ராஜீவ் காந்தியைக் கொல்ல பல அரசியல் சக்திகள் முயற்சி செய்துவந்திருக்கின்றன. அவரைக் கொல்வதில் பலருக்கும் அவரவர் தரப்பு நியாயங்கள் இருந்திருக்கின்றன.
இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியதால் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அவர் மீது கோபம் இருந்திருக்கிறது. ஒரு பரேடில் சிங்கள ராணுவ வீரர் ராஜீவை துப்பாக்கியால் அடித்தே கொல்ல முற்பட்டார். விடுதலைப் புலிகளை உலக அரங்கில் கொடூரர்களாகச் சித்திரிக்க வேண்டிய தேவை சிங்களர்களுக்கு இருந்திருக்கிறது. குறிப்பாக, இந்தியா ஈழத்தமிழருக்கு சாதகமாக நடந்துகொள்வதை ஒரேயடியாகத் தடுத்தாகவேண்டுமென்றால் புலிகள் மீது இந்தியர்களுக்கு வெறுப்பை வரவைக்கவேண்டும். புலிகளின் இயக்கத்தில் இருந்த சில புல்லுருவிகளைக்கொண்டு ராஜீவைக் கொன்று பழியைப் புலிகள்மீது போடவேண்டும் என்று முடிவெடுத்து இதைச் செய்திருக்கலாம். இது முதல் சாத்தியக்கூறு.



அல்லது மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகள் இந்தியாவைத் தமது பிடிக்குள் கொண்டுவரத் திட்டமிட்ட பெருஞ்சதியின் ஓர் அங்கமாக ராஜீவ் கொல்லப்படிருக்கலாம். புத்தர் தனது மதத்தைப் பரப்ப ஒரு எளிய வழியைப் பின்பற்றினார். ஒரு தேசத்தை மதம் மாற்ற வேண்டுமா அதன் மன்னரை மதம் மாற்று. அவர் மற்றதைப் பார்த்துக்கொள்வார். பழங்குடிகளிடையே கிறிஸ்தவத்தைப் பரப்ப மதபோதகர்கள் இந்த வழியையே பின்பற்றுவார்கள். பழங்குடிகளின் குடும்பத்தினரில் யாராவது ஒருவரை அல்லது பழங்குடியின் தலைவரை ஒரு கிறிஸ்தவரை விட்டுக் காதலிக்க வைப்பார்கள். அல்லது பழங்குடித் தலைவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது தலைமாட்டில் உட்கார்ந்து ஜெபித்து மதம் மாற்றுவார்கள். அதன் பிறகு அவரே மெள்ள மெள்ள அந்தப் பழங்குடி குலத்தையே கிறிஸ்தவத்தின் பக்கம் கொண்டுவந்துவிடுவார்.

இந்தியாவின் ராஜ வம்சம் நேருவின் வம்சம். அதில் இந்திராவைத் திருமணத்தின் மூலம் மதம் மாற்ற முடியாது. ஏனென்றால் அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. (அதாவது நேருவின் வாரிசுகளே இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற உண்மை தெரிய வருவதற்கு முன்பாகவே அவருக்குத் திருமணம் நடந்துவிட்டது). அவருக்கு தலைமாட்டில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தாலும் அவர் மதம் மாறமாட்டார். ஆனால், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவர் அம்மாவின் வலதுகையாக இந்தியாவிலேயே இருக்கிறார். அவரை மதம் மாற்றுவதோ கிறிஸ்தவப் பெண்ணால் அவரை வலையில் வீழ்த்துவதோ சிரமம். இன்னொரு ராஜகுமாரன் லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் அவனை கிறிஸ்தவ பெண்ணால் வளைத்துப் போடு என்று திட்டமிட்டார்கள். 1960களில் இது நடந்தது. அப்போது இதை யாருமே யூகித்திருக்கவே முடியாது. அப்படி தொலைநோக்குடன் செயல்படுபவர்களே வெற்றிகளைக் குவிக்க முடியும். அப்படியாக ராஜீவின் மனைவியாக சோனியா நியமிக்கப்படுகிறார்.
சீக்கிய பிரச்னையில் இந்திரா அகற்றப்படுகிறர். சஞ்சய் காந்தி ஒரு ‘விபத்தில்இறக்கிறார். ராஜீவ் காந்தி தமிழர் விஷயத்தில் சிக்கவைக்கப்படுகிறார். சரியான நேரம் வந்ததும் புலிகளில் சில வாடகைக் கொலையாளிகளைப் பிடித்து அந்த வேலையைக் கச்சிதமாக முடிக்கிறார்கள்.



புலிகள் ராஜிவைக் கொல்ல முன்வருவார்களா... அப்படிச் செய்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படுமே என்று பயந்திருக்கமாட்டார்களா..?
கவலையே வேண்டாம். ராஜீவ் கொல்லப்பட்டதும் நான்தான் ஆட்சிக்கு வருவேன். ஆட்சி வேண்டாம் என்று தியாகம் செய்வேன். ஆனால், கட்சி என் கட்டுக்குள்தான் இருக்கும். என் சொல் கேட்டு ஆடும் பொம்மையையே ஆட்சியில் அமர்த்துவேன். விசாரணையையும் திசை திருப்புவேன். ஈழத்தையும் கட்டாயம் வாங்கித்தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுத்து புலிகளை சம்மதிக்க வைக்கிறார்கள்.
இந்திய அமைதிப்படையின் பேரில் பல அவதூறுகளை உருவாக்கி ராஜீவின் கொலைக்கான நியாயத்தை உருவாக்கித் தருகிறார்கள். நேரம் வந்ததும் சந்தன மாலை போடப்படுகிறது. அப்படியாக ராஜீவின் கொலைக்கு சோனியாவும் அவரைப் பிளாண்ட் செய்த மேற்குலக கிறிஸ்தவ சக்திகளுமே காரணம் என்றொரு கோஸ்ட் ரைட்டர் வெர்ஷன்.

மூன்றாவதாக, சீக்கியர்களுக்கும் ராஜீவ் மீது பெரும் கோபம் இருந்தது. பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது, காலிஸ்தான் போராளிகளைக் கொன்றது என இந்திராவின் மீது இருந்த கோபத்தால் அவர் கொல்லப்பட்டார். ஆனால், அதைத் தொடர்ந்து சீக்கிய இனமே பெரும் வன்முறைக்கு ஆளானபோது, பெரு மரம் விழுந்தால் நிலம் கொஞ்சம் அதிரத்தான் செய்யும் என்று பல நூறு சீக்கியர்களின் மரணத்தை நியாயப்படுத்தினார் ராஜீவ் காந்தி. அதில் கோபம் கொண்ட சீக்கிய அமைப்பு இந்தக் கொலையைச் செய்திருக்கலாம். தாம் அதைச் செய்தது தெரியவந்தால் மீண்டும் தன் இனத்துக்குப் பேரழிவு வந்துவிடக்கூடும் என்று நினைத்து புலிகளை வைத்துக் காரியத்தைச் சாதித்திருக்கலாம். இது மூன்றாம் வெர்ஷன்.

ஆக, கொன்றது சிவராசனும் தனுவும் தான். அந்த சரித்திர நிகழ்வை மாற்ற முடியாது. ஆனால், அந்த புலிகள் யாருடைய கைப்பாவையாக அதைச் செய்தார்கள் என்பதில் பல சாத்தியக்கூறுகள் இருகின்றன. இதில் எதையுமே உண்மையில்லை என்று மறுத்துவிடமுடியாது. இப்போது இந்த உண்மைகளில் எது மெய்யான உண்மை. புலிகள் செய்தார்கள் என்று சொல்லி அவர்களை தண்டித்தது உண்மையிலேயே பெரும் பிழைதானா? அதைச் சாக்காக வைத்து ஈழத்தமிழர்களைத் துடைத்தழித்தது பெரும் கொடூரம்தானா? என்ற கேள்விகளை எழுப்பும்படியான திரைக்கதையை எழுதினால் ரஷோமான் திரைப்படத்தைவிடக் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அது அமையும்.
பிரபாகரன் ராஜீவைக் கொன்றாரா..? ராஜீவ் கொலையில் சிக்கவைக்கப்பட்டாரா..?
கொன்றது புலிகள்தான். ஆனால், சிங்கள அரசின் தூண்டுதலால் செய்தார்களா... மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகளின் சதியின் அங்கமாகக் கொன்றார்களா..? சீக்கியப் பழிவாங்கலாகச் செய்தார்களா..?

***
சமகால அரசியல் கதையை இந்த அளவுக்கு வெளிப்படையாக எடுப்பது சிரமம் என்றால், இதே கதையை அப்படியே சரித்திர காலத்துக்குக் கொண்டுசென்றுவிட்டால் போதும். அதிலும் சர்வ தேச சக்திகள் இந்திரா, சஞ்சய், ராஜீவ் என மூன்று படுகொலைகளின் மூலமாக சோனியாவின் கைகளில் காங்கிரஸை (இந்தியாவையும்) வரச் செய்ததை மட்டுமே தனிப் படமாகவே எடுக்கலாம்.

வேதபுரியின் மகாராணி இந்திராணி தேவிக்கு ராஜீவன், சஞ்சயன் என்று இரண்டு இளவரசர்கள். சகாயபுரத்தைச் சேர்ந்த சோனாவை ராஜீவன் காதலித்து மணமுடிக்கிறான். இந்திராணி தேவி எல்லையோரப் பழங்குடிகளின் கிளர்ச்சியை அடக்கப் படையை அனுப்புகிறார். அந்தப் படை வீரர்கள் பழங்குடிகளின் புனித விலங்கை வெட்டிக் கொன்று கறி சமைத்து கள் குடித்து மகிழ்கிறார்கள். இதனால் கோபப்படும் பழங்குடி வீரர்கள் இந்திராணியைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
இது தெரிந்ததும் மகாராணிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மந்திரிகள் முடிவெடுக்கிறார்கள். எந்தப் பழங்குடிகளுடன் பிரச்னை இருக்கிறதோ அந்தப் பழங்குடி வீரர் ஒருவரையே மெய்க்காப்பாளராக நியமிக்கலாமென்று புதிய மருமகள் சோனா சொல்கிறார். இந்திராணி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, பழங்குடிகளில் இருக்கும் கலகக்காரர்கள் மீதுதான் உங்களுக்குக் கோபம் இருக்கிறது; அந்த பழங்குடிகள் மீது அல்ல என்ற சமிக்ஞையைத் தர இந்த தந்திரம் அவசியம் என்கிறார். இந்திராணி தயங்குகிறார். அந்தப் பழங்குடி மெய் காப்பாளர் பணிக்கு வரும் நாட்களில் உங்கள் அறைக்குள் ஓய்வெடுக்கும் நேரத்திலும் இரும்புக் கவச உடையை அணிந்துகொள்ளுங்கள். அதுபோதும் என்று சோனா யோசனை சொல்கிறார். ஒருவழியாக இந்திராணி தேவி அதற்கு சம்மதிக்கிறார்.

நாட்கள் செல்கின்றன. ஒரு நாள் மகாராணி அதிகாலையில் குளித்துவிட்டு நந்தவனத்தில் உலாவருகிறார். அன்றைய தினம் பழங்குடி பாதுகாவலன் விடுமுறையில் இருப்பதாக சோனா சொல்லியிருந்ததால் கவச உடையை இந்திராணிதேவி அணிந்திருக்கவில்லை. பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகளையும் பார்த்து ரசித்தபடியே வருபவர் உப்பரிகையில் சோனா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறார். ஆனால், சோனாவின் முகமோ அமாவாசை இருள் போல் இருண்டு கிடக்கிறது. அவளுடைய கண்களோ வேட்டை வெறியில் இருட்டில் மின்னும் வன விலங்கின் கண்களைப் போல் தீயை உமிழ்ந்தபடி உறைந்து நிற்கின்றன. பின்னால் யாரோ வந்து நிற்பதுபோல் தெரிந்ததும் இந்திராணி திரும்பிப் பார்க்கிறார். கையில் ஈட்டியுடன் பழங்குடி மெய்க்காப்பாளன். சூரியனின் சிவந்த கிரணங்கள் அவனுடைய ஈட்டியில் பட்டு உலையில் இட்ட இரும்புபோல் மின்னுகிறது. மெய்க்காப்பாளன் சோனாவைத் திரும்பிப் பார்க்கிறான். கைவளைகள் குலுங்க அவள் ஆகட்டும் என்று உத்தரவு தருகிறாள். இந்திராணி அதிர்ந்து சுதாரிப்பதற்குள் கவசம் இல்லாத மார்வைத் துளைத்தபடிப் பாய்கிறது ஈட்டி. உப்பரிகையை வெறித்துப் பார்த்தபடியே உடல் சரிந்து விழுகிறாள் வேதபுரியின் மகாராணி இந்திராணி தேவி.

இதற்கு முன்பாகவே சஞ்சீவனும் மலைப்பாதையில் ரதத்தில் வரும்போது கடையாணி கழண்டு மலையில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டிருக்கிறான். இத்தனைக்கும் புறப்படுவதற்கு முன்பாக ரதத்தை கொல்லன் பட்டறைக்குக் கொண்டு சென்று நன்கு சோதித்துவிட்டுத்தான் புறப்பட்டிருந்தான். மலையில் வழியில் குதிரையின் காலில் பெரிய ஆணி ஒன்று குத்தியிருந்தது. அந்தப் பகுதி எங்குமே அப்படியான ஆணி கிடைக்க எந்த வாய்ப்புமே இல்லை. மேலும் அந்த ஆணியை குதிரையின் காலில் இருந்து எடுக்க அப்போது அருகில் இருந்த ஒரு பட்டறைக்கு மெய்க்காப்பாளர்களுடன் சஞ்சீவன் சென்றிருக்கிறான். தேரின் கடையாணி கழண்டு சஞ்சீவன் மலையில் இருந்து விழுந்து இறந்த செய்தி தெரிந்ததும் அந்தப் பட்டறையில் இருப்பவனைப் பிடித்துவர ஆள் அனுப்பினால் அங்கு அப்படி ஒரு பட்டறை இருந்த தடயமே இல்லை.

சஞ்சயனும் இறந்து இந்திராணியும் கொல்லப்பட்டிருக்கவே குரு குலத்தில் வான சாஸ்திரம் கற்றுக் கொண்டிருந்த ராஜீவன் அரியணை ஏறுகிறான். இந்த இருவரையும் கொன்றது யார் என்பது சில சதிகாரர்கள் காட்டுக்குள் ஒரு பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து பேசுவதை ஒட்டுக்கேட்கும் ஒற்றனுக்குத் தெரியவருகிறது. அதோடு ராஜீவனுடைய உயிருக்கும் ஆபத்து என்பதும் அவனுக்குத் தெரியவருகிறது. அதை ராஜீவனிடம் சொல்லி எச்சரிக்க விரைகிறான். அந்த ஒற்றனுக்கு இந்த உண்மைகள் தெரியும் என்பது சதிகாரர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. அவனைக் கொல்லத் துரத்துகிறார்கள். எப்படியோ காட்டில் இருந்து தப்பித்து கோட்டையை அடைகிறான். எவ்வளவு முயன்றும் ராஜீவனை நெருங்கமுடியவில்லை.

ஒரு கட்டத்தில் சோனாவிடம் சொல்லி ராஜீவனை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லலாம் என்று நினைக்கிறான். நள்ளிரவில் சோனாவைச் சந்தித்து இந்திராணி தேவியையும் சஞ்சீவனையும் கொன்றவர்கள் யார் என்று சொல்ல ஆரம்பிக்கிறான். சட்டென்று தீப்பந்தம் அணைகிறது. சோனா தொடர்ந்து பேசச் சொல்கிறாள். அனைத்தையும் விவரித்து, ராஜீவனுக்கும் ஆபத்து என்று சொல்லி முடிக்கிறான் ஒற்றன். தீப்பந்தம் எரியூட்டப்படுகிறது. சோனாவின் முகம் அதுவரை இல்லாத கடுமையுடன் தீப்பிழம்பாகத் தகிக்கிறது.

அந்தச் சதிகாரர்களை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்கிறாள்.

ஒற்றன் முடியும் என்கிறான்.

சோனா, இவர்களா என்று பார்த்துச் சொல் என்று கைகளைத் தட்டுகிறாள். பாழடைந்த மண்டபத்தில் சதியாலோசனை செய்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வந்து நிற்கிறார்கள். ஒற்றன் அதிர்ச்சியில் உறைகிறான். விஷயத்தை யூகித்து அவன் தப்பிக்கப் பார்க்கிறான். ஆனால், அதற்குள் சோனா தன் அருகில் இருக்கும் நபர்களின் கைகளில் இருக்கும் ஈட்டிகளை வாங்கி ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எறிந்து ஒற்றனைக் கொல்கிறாள்.
(பாகம் - ஒன்று முடிகிறது).

ராஜீவன் வேறொரு எல்லைப் பிரச்னையில் சிக்கவைக்கப்பட்டுக் கொல்லப்படுவது, சோனா சகாயபுரத்தைச் சேர்ந்த தன் மருமகனுடன் சேர்ந்து வேதபுரியைச் சின்னாபின்னமாக்க முயற்சி செய்வது, சோனாவின் உண்மை சொரூபத்தைத் தெரிந்துகொள்ளும் மகள் ப்ரியம்வதா சகாயபுரத்தினரின் சதிகளையெல்லாம் முறியடித்து வேதபுரியைப் பழைய பெருமைக்குக் கொண்டு செல்வது எல்லாம் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும். 

No comments:

Post a Comment