Friday 1 January 2016

கால எந்திரத்தில் சில பயணங்கள்

டைம் மெஷின்

ஸ்பீல்பெர்கின் பேக் டு த ஃப்யூச்சரில் ஆரம்பித்து இன்று நேற்று நாளை வரை பல படங்கள் டைம் டிராவல் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கதைகளின் பெரிய பலவீனம் அப்படியொரு அற்புத கருவி கிடைத்த பிறகும் அதன் கதாநாயகர்கள் அனைவருமே தனி மனித நிகழ்வுகள், பிரச்னைகளை மட்டுமே தீர்த்து வந்திருக்கிறார்கள். கற்பக விருட்சத்தின் கீழே அமர்ந்துகொண்டு வேளா வேளைக்கு வெறும் உணவை வரவைத்துச் சாப்பிடுவதைப் போன்றது. உலகில் ஏராளமான பெரும் சோக சம்பவங்கள் நடந்துள்ளன. டைம் மிஷின் கிடைக்கும் நபர் அவற்றில் சிலவற்றை மாற்றி அமைப்பதாகத் திரைக்கதை அமைத்துக் கொண்டால் பிரமாதமாக இருக்கும். சோக நிகழ்வுகள் ஏராளம் என்பதால் படத்துக்கு மூன்று என்று வைத்துக்கொண்டு பல சீக்வல்கள்கூட எடுக்கலாம். 

ஹிட்லரை 1919-ல் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தபோதே கொன்று தீர்ப்பதில்  ஆரம்பித்து எத்தனையோ சரித்திர சோகங்களை நிகழாமல் தடுத்துவிடலாம். அப்படி தடுக்கப்பட்டிருந்தால் உலகம் எப்படி அருமையாக இருந்திருக்கும் என்பதையும் தடுக்கப்படாததால் எவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்துவிட்டது என்பதையும் இடையிடையே காட்டினால் அந்த சோகத்தின் கனமும் கூடும். காலப் பயணம் என்ற கற்பனையின் வசீகரமும் அதிகரிக்கும்.

நமது சரித்திரத்தில் நடந்த மிகப் பெரும் சோகங்கள் என்று எடுத்துக்கொண்டால் இந்தியா துண்டாடப்பட்ட நிகழ்வு, காந்தியின் மரணம், குஜராத் கலவரம், கறுப்பு ஜூலை என சிலவற்றைச் சொல்லலாம். இவை எல்லாமே தனி மனிதரால் நிகழ்த்தப்பட்டவை இல்லை என்றாலும் ஏதோ ஒருவகையில் தனி மனிதரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கமுடியும். 

கோட்சே துப்பாகியை உருவிய நேரத்தில் அருகில் இருந்தவர் அவரைப் பிடித்துத் தள்ளி துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு இரண்டு அங்குலம் மேலே பட்டிருந்தால்... காந்தி உயிர் பிழைத்திருப்பார். கோட்சேவை மன்னித்து அவருடைய மனதை மாற்றியிருப்பார். பெரும்பான்மை வன்முறையில் இறங்கிவிட்டால் சிறுபான்மை இனம் அதைத் தாங்க முடியாது. அதனால்தான் பெரும்பான்மையை அஹிம்சையிலும் அரவணைப்பிலும் கட்டிப்போடும் செயலைச் செய்துவந்தேன் என்று சொல்லிப் புரியவ்வைத்திருப்பார். காந்தியும் கோட்சேவின் செயலில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டிருக்கக்கூடும். சிறுபான்மையின் எளிய மக்கள் மீது அன்பு கொள்ளுதல் என்பதை யாரும் தவறென்று சொல்லவில்லை. அதிலும் உலகம் முழுவதிலுமான அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்ற இந்து என்றுமே அப்படிச் சொல்லவும்மாட்டான். ஆனால், அதற்காக சிறுபான்மையின் தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமலும் இருப்பது சரியே இல்லை. மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட் என்பது மெஜாரிட்டி உணர்வுகளைப் புண்படுத்துவதாகவோ அவர்களை முற்றாகப் புறக்கணிப்பதாகவோ இருக்கக்கூடாது என்று சொல்லிப் புரியவைத்திருப்பார். 


பசு பாதுகாப்பு, தேச பக்தி, இந்துப் பாரம்பரியம், சாதி சமத்துவம், தெய்வ நம்பிக்கை, கிராமப் பொருளாதார நலன், அந்நிய தாக்கங்களுக்கு எதிர்ப்பு என அனைத்து விஷயங்களிலும் நம் இருவருக்கும் இடையில் எந்த முரண்பாடும் கிடையாது. சிறுபான்மையினரை எப்படி நடத்துவது என்பதிலும் எந்தக் குழப்பமும் கிடையாது. சிறுபான்மைத் தீவிரவாதத்துக்கு எந்த மொழியில் பதில் சொல்வது என்ற ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்று சொல்லிப் புரியவைத்திருப்பார். இருவரும் சேர்ந்து மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த இந்தியாவை கிழக்குப் பக்கம் திருப்பிப் புதிய இந்தியாவை உருவாக்கியிருக்கக்கூடும்.
*

இந்தியாவைப் பிளந்த நிகழ்வை எடுத்துக்கொண்டால், ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளின் அலட்சியத் திமிரினாலும் எங்களை வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற வஞ்சினத்தினாலும் தானே இத்தனை லட்சக்கணக்கானவர்கள் உயிரையும் உடமையையும் மானத்தையும் இழக்க நேர்ந்தது. அந்த ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளை அல்லது அவர்களின் பிரதிநிதியான மவுண்ட்பேட்டனைச் சரிக்கட்டுவதன் மூலம் அந்த வன்முறையை இல்லாமல் செய்திருக்கமுடியும்..

இஸ்லாமிய தீவிரவாதம் அப்போது உச்சத்தில் இருந்தது என்னவோ உண்மைதான். ஜின்னா முஸ்லிகள் வசித்த பகுதிகள் அனைத்தையுமே, இந்தியாவில் இருந்து துண்டாடவேண்டும்; நிலத் தொடர்ச்சியின்மையால் பாகிஸ்தானுடன் சேராவிட்டாலும் பரவாயில்லை என்றே விரும்பினார். ஒருவேளை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழெட்டு சதவிகிதமாகப் பிரிந்து கிடந்த இஸ்லாமியர்கள் ஓரிரு மாநிலங்களில் மட்டும் குவிந்திருந்தால் அல்லது ஏழெட்டு மாநிலங்களில் 30-40 சதவிகிதமாகச் சேர்ந்து இருந்தால்கூட அவையெல்லாம் இந்தியாவில் இருந்து நிச்சயம் பிரிக்கப்பட்டிருக்கும். எளிய இஸ்லாமியர்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பினாலும் தீவிரவாத இஸ்லாமியர்களை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே, இந்தியா துண்டாடப்பட்ட நேரத்தில் நடந்த வன்முறைகளுக்கு பிரிட்டிஷாரை நிச்சயம் நேரடிக் காரணமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு மறைமுகமாக முழு ஆதரவையும் தந்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் இந்த வன்முறையை நிச்சயம் தடுத்திருக்க முடியும்.   



ஏனென்றால், ஜாலியன் வாலா பாக் போல் படுகொலைகள் செய்து குவித்தபோதிலும் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொள்ளையடித்தும் பஞ்சத்தாலும் பட்டினியாலும் மக்களைக் கொன்றும் 200 ஆண்டுகளுக்கும் மேல் கொடுங்கோல் ஆட்சி புரிந்த நிலையிலும் அந்த ஆங்கிலேயர்களில் ஒருவருடைய உடம்பில் சிறு கீறல் கூட விழாமல்தான் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். மவுண்ட்பேட்டன் அதற்கான ஏற்பாடுகளை மிகக் கச்சிதமாகச் செய்திருந்தார். அதுபோல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, பாகிஸ்தானில் இருந்த இந்துக்களை பத்திரமாக ராணுவ-காவல் துறையின் உதவியுடன் இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். அது நடந்திருந்தால் இந்திய முஸ்லிம்களை அதைவிடப் பத்திரமாக இந்துக்கள் வழியனுப்பி வைத்திருப்பார்கள். இரு பக்கமும் ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தியிருக்காது.

பிணங்களைச் சுமந்து வந்த ரயில்கள் வாழைத் தோரணங்களும் வண்ணப்பூச்சுகளுமாக இரு தரப்பு மக்களை சுற்றுலாவுக்கு அழைத்து வந்ததுபோல் அழைத்து வந்திருக்கும். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியபடி விடைபெற்றுச் சென்றிருப்பார்கள். அப்போதும் கண்ணீர் பெருகியிருக்கும். ஆனால், அதன் சுவை வேறாக இருந்திருக்கும். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகளையும் தோட்டம் துரவுகளையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிச் சென்றிருப்பார்கள். இஸ்லாமியர்கள் பக்ரீத்துக்கான ஆடுகளையும் இந்துக்கள் பாலுக்கான பசுக்களையும் தம்முடன் ஆசையோடு அழைத்துச் சென்றிருப்பார்கள். எல்லையோரத்தின் வழியெங்கும் இந்துக்கள் அமைத்த இளைப்பாரல் குடில்களில் இஸ்லாமியரும் இஸ்லாமியர் அமைத்த முகாம்களில் இந்துக்களும் தங்கி தூங்கியபடி தமது தேசங்களுக்கு வந்து சேர்ந்திருப்பார்கள்.

விடைபெற்றுச் சென்ற இஸ்லாமியர்களுக்கு நன்றி சொல்லும் முகமாக ஊர்களுக்கும் தெருக்களுக்கும் இஸ்லாமியப் பெயர்களை இந்துக்கள் சூட்டியிருப்பர். இஸ்லாமியரும் ஊருக்கும் தெருவுக்கும் அல்லாமல் தமது குழந்தைகளுக்கும் சேர்ந்து இந்துப் பெயர்களைச் சூட்டியிருப்பார்கள். இந்தியப் பக்க எல்லையோர மாவட்டங்களில் இருந்த மசூதிகள் வழிபாட்டுமையங்களாகவே தொடர்ந்து செயல்பட்டிருக்கும். பாகிஸ்தான் பக்கத்து மாவட்டங்களில் இருந்த கோவில்கள் இந்துக்கள் சென்று வணங்கிவிட்டுவரும் தலங்களாக நீடித்திருக்கும். பாகிஸ்தானிய புத்தகங்களில் காந்தி தேசத் தந்தையாக இடம்பெற்றிருப்பார். இந்தியப் புத்தகங்களில் ஜின்னா மாபெரும் தலைவராக இடம்பெற்றிருப்பார். இந்தியா தனது பொருளாதார நிலை வலுவிழந்து நிற்கும் நிலையிலும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையிலுமான இந்துக்கள் அனைவரும் தமது பாகிஸ்தானிய சகோதரர்களுக்காக நன்கொடை சேகரித்துக் கொடுத்திருப்பார்கள். எப்படி ஒரு தேசப் பிரிவினை நடக்கக்கூடாது என்பதற்கான பாடமாக இருக்கும் அந்த நிகழ்வு எப்படிப் பிரிவினை நிகழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இருந்திருக்கும்.
*

ஒரு காந்தியவாதி கால எந்திரத்தில் பயணித்து 2002 ஐச் சென்று சேருகிறார். கோத்ரா ரயில் எரிப்பைத் தடுக்கப் போகிறவர் வழியில் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டுவிடவே ரயில் எரிக்கப்பட்டுவிடுகிறது. நேராக மோதி இருக்கும் இடத்துக்கு விரைகிறார். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையைப் பயன்படுத்தி மோதியின் உடலுக்குள் புகுந்துகொள்கிறார். அதன் பிறகு புதிய மோதியின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.



கொல்லப்பட்ட கர சேவகர்கள் 58 பேரின் உடலையும் ஊர்வலமாக எடுத்துச்சென்று சரயு நதிக்கரையில் எரியூட்டுகிறார். அவர்களுடைய அஸ்திக் கலசத்தை எடுத்துக்கொண்டு தேசம் முழுவதும் ரதங்கள் ஊர்வலம் வருகின்றன. இந்து-இஸ்லாமிய நல்லிணக்க சக்தியின் எழுச்சியாக அது மலர்கிறது. பல ஊர்களில் இஸ்லாமியர்கள் அந்த அஸ்திக் கலசத்தைத் தலையில் சுமந்து செல்கிறார்கள். தேசத்தின் 58 மூலைகளில் ராமர் கோவிலுக்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டு தேசம் முழுவதுமான இஸ்லாமியர்கள் செங்கல் எடுத்துக் கொடுக்க ராமருக்கான ஆலயம் எழுகின்றன. கோவிலின் பலிபீடத்தில் கரசேவகர்களின் அஸ்திக் கலசமும் அணையா விளக்கும் அமைக்கப்படுகின்றன. 

ரயிலுக்குத் தீவைத்து 58 பேரைக் கொன்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் கோவில்களில் உழவாரப் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இந்துத் தரப்பில் வன்முறையைக் கையிலெடுக்க முயற்சி செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்து அடிப்படைவாத இயக்கங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன. இந்துத் தரப்பு அடிப்படைவாதிகளை எளிய இந்துப் பெரும்பான்மையும் இஸ்லாமியத் தரப்பு தீவிரவாதிகளை இஸ்லாமியப் பெரும்பான்மையும் தனிமைப்படுத்துகின்றன.

கோவில்கள் கட்ட இஸ்லாமியர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மசூதி ஒன்று இந்துக்களால் அதே அயோத்தியில் சரயு நதிக்கரையில் பிரமாண்டமாகக் கட்டித் தரப்படுகிறது. கோவில்களின் உச்சியிலும் மசூதியின் உச்சியிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவிடப்படுகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடத்தில் பாரத மாதாவுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்படுகிறது. மோகன் தாஸ் கரம் சந்த் மோதி, இரண்டாம் காந்தி என்று நரேந்திர மோதியின் பெயர் சரித்திரத்தில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படுகிறது.
*


1983 ஜூலையில் சிங்கள ராணுவத்தினரால் சில தமிழ் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதாகச் செய்தி பரவுகிறது. ராணுவத்தினர் வரும் வாகனத்தைத் தகர்க்கத் திட்டமிடுகிறார்கள் புலிகள். டைம் மெஷினில் சென்று அவர்களின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துகிறார்கள் நான்கு பேர். இந்தியாவில் தனியார் மயமாக்கமும் உலகமயமாக்கமும் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1990களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் கட்டப்படுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் இதனால் பெரும் வளர்ச்சி பெற்று பிரிவினை எண்ணங்கள் மெள்ள மெள்ள மறைகின்றன. 1983-ல் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரனும் அவனுடைய ஆட்களும் நன்னடத்தை காரணமாக 1990களின் பிற்பகுதியில் விடுதலை செய்யப்படும்போது புதிய இலங்கை அவர்களை வரவேற்கிறது.


ஆனால், இந்தக் கதையில் அவ்வளவு டிராமா இல்லை. பிரச்னைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே தீர்க்கப்பட்டுவிடுவது அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. நிஜத்தில் அப்படி நடந்திருந்தால் அதுபோல் நன்மை வேறெதுவும் இருந்திருக்காது. ஆனால், கதை என்று வந்தால் இழப்பும் கண்ணீரும் போரும் வீரமும் எல்லாமும் இருக்கவேண்டும். எனவே, 2009-ல் முள்ளிவாய்க்காலுக்கு டைம் மெஷினை அனுப்புவோம்.

புலி ஆதரவாளர்களிடையே ஒரு சிலர் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று உறுதியாக நம்பினார்கள். இப்போதும் நம்புபவர்கள் உண்டு. அவர்கள் அப்படி நம்பக் காரணம் என்னவென்றால், கடைசிக் கட்டப் போர் என்பது பிரபாகரன் வகுத்த தந்திரங்களில் மிக முக்கியமானது. அதுவரையிலும் புலிகள் மட்டுமே உலக அளவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தனர். செப் 11க்குப் பிறகு உலக நாடுகள் அனைத்துமே பிரிவினைவாதப் போராளிகளை எல்லாம் தீவிரவாதிகளாகவே பார்க்கத் தொடங்கியிருந்தன. அந்தவகையில் புலிகளுக்கு உலக அளவில் இருந்த கெட்ட பெயரைப் போக்க பிரபாகரன் ஒரு தந்திரம் செய்தார். அதாவது, இலங்கை அரசை சர்வ தேச அளவில் கொடுங்கோல் ஆட்சியாக அம்பலப்படுத்தவேண்டும்; அதன் மூலம் புலிகளின் வன்முறைக்கு ஒரு வலுவான நியாயத்தை உருவாக்கவேண்டும் என்பதே அந்த இலக்கு. 

அதன்படி கடைசிகட்டப் போரில் அவர் எதிர்த்து அடிக்காமல் தடுத்து ஆடத் தொடங்கினார். ராணுவம் ஒரு சில வெற்றிகளைப் பெற்றதுமே மெள்ளப் பின்வாங்க ஆரம்பித்தார். அதைக் கண்டு உற்சாகப்பட்ட சிங்கள ராணுவம் மேலும் நெருக்குவதன் மூலம் புலிகளை வீழ்த்திவிடலாமென்று நினைத்தன. உண்மையில் அது அவர்களுக்கு விரித்த வலை. மக்களையும் கூட்டிக்கொண்டு புலிகள் மெள்ளப் பின்வாங்க ஆரம்பித்தனர். புலிகளைத் தாக்கும் முயற்சியில் சிங்கள ராணுவம் வீசிய குண்டுகள் அனைத்தும் அப்பாவி மக்களின் உயிரைக் காவு வாங்க ஆரம்பித்தன. புலிகள் அந்தத் தகவல்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு உலக அரங்கில் இருந்த மரியாதையையும் ஆதரவையும் அழிக்க ஆரம்பித்தனர்.

இப்படி அவர்கள் அடிக்க அடிக்க, பின்வாங்கியபடியே வந்து கடைசி கட்டத்தில் இந்திய அரசு அனுப்பும் கப்பலில் ஏறி பிரபாகரன் தப்பிச் சென்றுவிடவேண்டும். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசின் வன்முறைச் செயல்களைக் காட்டி புலிகள் தமது ஆயுத பலத்தையும் தார்மிக பலத்தையும் பெருக்கிக்கொண்டு இலங்கையை உலக அளவில் தனிமைப்படுத்தி ஈழத்தை வென்றெடுக்கவேண்டும். இதுதான் கடைசி கட்ட தடுப்பாட்டத்தின் நோக்கம். பிரபாகரன் விரித்த வலையில் சிங்கள அரசு சிக்கியது. ஆனால், க்ளைமாக்ஸில் வேறொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பிரபாகரனைக் காப்பாற்றுவதாகச் சொன்ன இந்தியக் கப்பல் நந்திக்கடலோரம் வரத்தான் செய்தது. பிரபாகரன் நள்ளிரவில் சிறிய படகில் ஏறி அதை நோக்கி நம்பிக்கையுடன் போகத்தான் செய்தார். அந்த கப்பலில் இருந்து நூலேணி வீசப்பட்டது. ஆனால், அதைப் பிடித்தபடி மேலேறிய பிரபாகரனை வரவேற்ற கரங்களில் அவர் எதிர்பார்த்திராத துப்பாக்கிகள் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்தன. அவர் கொல்லப்பட்டு மக்களோடு மக்களாக வீசப்பட்டார்.

இந்தியா குறுக்கு சால் ஓட்டி பிரபாகரனைக் கொன்றுவிட்டது என்பதால்தான் தமிழக ஈழ ஆதரவாளர்கள் இந்திய தேசியத்தை எதிர்த்து வருகிறார்கள். ரேடார் கொடுத்தது, ராணுவப் பயிற்சி கொடுத்தது என்ற அற்ப காரணங்களைத்தான் வெளியில் சொல்ல முடிகிறது. இந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை. அதனால்தான், இந்தச் சிறிய உதவிகளுக்காக இந்திய அரசை இவ்வளவு எதிர்க்க வேண்டுமா என்று மக்கள் தமிழக ஈழ ஆதரவாளர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இப்போது நாம் டைம் மிஷினில் ஏறிச் சென்று பிரபாகரனிடம் இந்தியக் கப்பலில் ஏறினால் வரும் ஆபத்தைச் சொல்லி அவரைக் காப்பாற்றலாம். நமது படத்தை அதில் இருந்து ஆரம்பிக்கலாம். திட்டமிட்டபடியே புலிகளின் பதுங்கல், சிங்கள ராணுவத்தின் பாய்ச்சல் என எல்லாம் நடக்கின்றன. புலி ஆதரவு சக்திகள் இலங்கை அரசின் வன்முறைப் பக்கத்தை உலகுக்கு அம்பலப்படுத்துகிறார்கள். புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்கால் பக்கம் ஒதுங்குகிறார்கள். பிரபாகரன் மே 17 அன்று நள்ளிரவில் தனது சிறு படகை நோக்கிப் போகிறார். டைம் மிஷினில் ஏறிய நம் நாயகன் மிகச் சரியாக அந்தக் கரையோரம் சென்று இறங்குகிறார். இந்தியப் பக்கம் போவதால் வரும் அபாயத்தை எடுத்துச் சொல்லி பிரபாகரனை வேறு பக்கம் திருப்புகிறார். பிரபாகரன் முதலில் நம்ப மறுக்கிறார். வேண்டுமானால், அந்தப் படகை வேறு பக்கம் ஓட்டிப் பாருங்கள் என்று சொல்கிறார் நம் நாயகர்.

அதன்படியே வேறு சிலர் அந்தப் படகில் ஏறி இந்தியக் கப்பலைத் தாண்டிச் செல்கிறார்கள். உடனே இந்தியக் கப்பலில் இருந்து நாலைந்து மோட்டார் படகுகள் கடலுக்குள் பாய்ந்து இறங்கி பிரபாகரன் வருவதாக இருந்த படகைச் சுற்றி வளைக்கின்றன. அந்தப் படகில் பிரபாகரன் இல்லை என்பது தெரிந்ததும் ஹெலிகாப்டர்கள் சடசடவென வானில் தோன்றி சர்ச் லைட் மூலம் கடலில் தீவிர சோதனை நடத்துகின்றன. பிரபாகரனுக்கு உண்மை புரிகிறது. மெள்ள நம் நாயகன் சொல்வதுபோல் நடந்துகொள்ள முடிவெடுக்கிறார். படகிலோ, கப்பலிலோ போய்த் தப்பிக்க முடியாது; ஹெலிகாப்டரில் போனால் இந்திய கப்பல் படை அல்லது சிங்கள வான் படையின் ஹெலிகாப்டராக இருக்கும் என்றுதான் நினைப்பார்கள் என்பதால் நேராக இந்திய ஹெலிகாப்டர் இருக்கும் இடத்துக்கு இருளில் பதுங்கியபடிச் செல்கிறார்கள். அங்கு இருக்கும் ஒரு பைலட்டை துப்பாக்கி முனையில் மிரட்டி அதை எடுத்துக்கொண்டு தப்பிக்கிறார்கள்.


இந்திய ஹெலிகாப்டர் ஒன்று தனது எல்லையைத் தாண்டி இந்தியப் பெருங்கடலில் வேறு திசையில் போவதைப் பார்த்ததும் இரு நாட்டு ராணுவங்களும் சுதாரிக்கின்றன. சுனாமி மீட்புப் பணிக்காக வந்து இலங்கைக் கடலோரத்தில் டேரா போட்டிருக்கும் அமெரிக்கக் கப்பற் படை தனது அதி நவீன ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பிரபாகரன் தப்பிச் செல்லும் ஹெலிகாப்டரைத் தாக்கத் தொடங்குகின்றன. இனிமேல் ஹெலிகாப்டரில் செல்வது ஆபத்து என்பது புரிந்ததும் பிரபாகரனும் நம் நாயகனும் ஒரு மரப்பலகையைக் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறார்கள். அவர்கள் குதித்த அடுத்த விநாடி அமெரிக்க ஹெலிகாப்டரில் இருந்து ஒரு வெடிகுண்டு வந்து தாக்கி அந்த இந்திய ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறுகிறது. அதில் பிரபாகரனுக்கு தலையில் காயம்படுகிறது. நம் நாயகனுக்கோ அந்த வெடிகுண்டு வெடித்ததில் சிதறிய ஹெலிகாப்டரின் இரும்புக் கம்பி தாக்கி பெரும் காயம் ஏற்படுகிறது. நீரில் விழுந்து மூழ்கத் தொடங்கிய அவரைக் காப்பாற்ற பிரபாகரன் விரைகிறார். அமெரிக்க ஹெலிகாப்டர்களின் சர்ச் லைட் இருண்ட கடலைச் சலிக்கத் தொடங்குகின்றன.

நம் நாயகன், தன் உயிரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்... தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால், நீங்கள் எப்படியாவது தப்பித்தாகவேண்டும் போங்கள் என்று சொல்கிறார். பிரபாகரனோ, உங்களுக்கு ஒன்றும் ஆகாது... நான் உங்களை எப்படியாவது காப்பாற்றுவேன் என்று அவரைத் தோளில் சுமந்தபடி நீந்துகிறார். நம் நாயகன் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டு, நான் சர்ச் லைட்களை என் பக்கம் திரும்ப வைக்கிறேன். நீங்கள் எதிர் பக்கம் நீந்தித் தப்பித்துக்கொள்ளுங்கள். உணர்சிவசப்படுவதற்கான நேரமல்ல இது. என்னைக் காப்பாற்ற நினைத்து நாம் இருவரும் மாட்டிக் கொள்வதைவிட நான் மாட்டிக்கொண்டு நீங்கள் தப்புவதே நம் முன் இருக்கும் ஒரே வழி என்று சொல்லியபடியே ஹெலிகாப்டர் சர்ச் லைட்டின் எல்லைக்குள் நீந்திச் செல்கிறார். ஹெலிகாப்டர்கள் அவரை நெருங்குகின்றன. பிரபாகரன் கண்களில் நீர் கசிய எதிர் திசையில் நீந்தித் தப்பிக்கிறார்.

பொழுது புலர்கிறது. ஏதோவொரு தீவின் கரையோரம் ஒதுங்குகிறார். கண் முழித்துப் பார்ப்பவர் தன்னைச் சுற்றிலும் நாலைந்து ஓநாய்கள் கொலை வெறியுடன் காத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். மெள்ள பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு அவற்றை அடித்து விரட்டி காட்டுக்குள் பாய்ந்து ஓடுகிறார். ஓநாய்கள் அவரை விடாமல் துரத்துகின்றன. செடி கொடிகளை விலக்கியபடி விழுந்தடித்து ஓடுபவர் ஒரு பெரும் பள்ளத்துக்குள் கால் தடுக்கிவிழுகிறார். ஓநாய்களில் ஒன்று அந்தப் பள்ளத்துக்குள் பாய்கிறது. அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஈட்டி ஒன்று ஒநாயின் வயிற்றைத் துளைத்தபடி எதிர்பக்க சுவரோடு சேர்த்துச் செருகுகிறது. நாலைந்து ஆதிவாசிகள் பாய்ந்து வந்து ஓநாய்களை விரட்டியடிக்கிறார்கள். கொடிகளைப் பற்றியபடியே பள்ளத்துக்குள் இறங்கி பிரபாகரனைக் காப்பாற்றுகிறார்கள். பள்ளத்தில் விழுந்ததால் தலையில் காயம்பட்டவர் ஓரிரு நாட்கள் சுய நினைவு திரும்பாமல் இருக்கிறார். ஆதிவாசிகளின் பச்சிலை மூலிகைகள் வேலை செய்ய, மெள்ளக் கண் விழிக்கிறார். ஆனால், தலையில் அடிபட்டதால் அவருக்குப் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டன.

சிறிது நாளில் உடல் நிலை தேறுகிறது. ஆனால், தான் யார் என்பதோ தனக்கு என்ன நடந்தது என்பதோ எதுவும் தெரியாமல் இருக்கிறார். உடல் தேறியதும் அந்தப் பக்கமாகப் போகும் கப்பலில் ஏற்றி அனுப்பிவிடலாம் என்று நினைத்த ஆதிவாசிகள் அவருடைய நிலையைக் கண்டு இரக்கப்பட்டு அவரைத் தம்முடனே வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். கடின உழைப்புக்கு அஞ்சாத பிரபாகரன் அந்த ஆதிவாசிகளில் ஒருவராக வேட்டையாடியும் விவசாயம் செய்தும் அங்கேயே காலத்தை ஓட்டுகிறார். ஆதிவாசிப் பெண் ஒருத்தியை மணமுடித்து குழந்தை குட்டிகளுடன் பழைய நினைவுகள் எதுவும் இல்லாமல் வாழ்கிறார். வருடங்கள் ஓடுகின்றன.



இதனிடையில் பிரபாகரனின் உடல் கிடைக்காததால் அமெரிக்கக் கடற்படையில் ஆரம்பித்து சிங்கள ராணுவம், இந்திய ராணுவம், புலிகள் என ஒவ்வொரு தரப்பும் இந்தியப் பெருங்கடலோரத் தீவுகளில் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. நாலைந்து வருடங்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக புலிகள் கண்ணில் படுகிறார் பிரபாகரன். ஆனால், அவருக்கோ இவர்களை அடையாளம் தெரியவில்லை. சோர்ந்து போகிறார்கள். எப்படியும் உயிருடன் கிடைத்தாரே அதுவே போதும் என்று மகிழ்கிறார்கள். அவரைத் தம்முடன் வரும்படி அழைக்கிறார்கள். அவரோ முடியாதென்று மறுக்கிறார்.

பழங்கால நினைவுகளோடு தமிழ் மொழியையும் அவர் மறந்துவிட்டிருக்கிறார்! தமிழினத்தலைவர் தாய்மொழியை மறந்து கிடக்கும் நிலையைப் பார்த்து வாடும் புலிகள் மெள்ள அவருக்கு ஒவ்வொன்றாக நினைவுபடுத்துகிறார்கள். அவருடைய வீடியோக்கள் அனைத்தையும் போட்டுக் காட்டுகிறார்கள். மெள்ள மொழியைக் கற்றுத் தருகிறார்கள். ஒவ்வொரு வார்த்தையாக கவனித்துக் கேட்கிறார். ஆனால், அவரால் பேசமுடியவில்லை. நாட்கள் கழிகின்றன. மெள்ள பிரபாகரனுக்கு தமிழ் மொழி பேச வருகிறது. ஆனால் அவர் பேசும் முதல் வார்த்தையைக் கேட்டு புலிகள் அதிர்ச்சியில் உறைகிறார்கள். நாம் தவறு செய்துவிட்டோம். இதுதான் அவர் பேசும் முதல் வாக்கியம்.

அமைதியாகப் போராடினோம்... விடுதலை கிடைக்கவில்லை. அதனால் அதிரடியில் இறங்கினோம் என்று நம் வன்முறையை நியாயப்படுத்துகிறோம். ஆனால், அமைதியாகப் போராடியபோதே கிடைக்கவில்லை... வன்முறையாகப் போராடினால் இருப்பதும் கைவிட்டுப் போகத்தானே செய்யும் என்றுதான் நாம் யோசித்திருக்கவேண்டும். வாருங்கள்... செய்த தவறுகளைத் திருத்துவோம் என்று சொல்கிறார். அதிர்ந்துபோன புலிகள் இலங்கை அரசு செய்த வன்முறைகள், தவறுகள் ஒவ்வொன்றையாகப் பட்டியலிடுகிறார்கள். அனைத்தையும் காந்திய கோணத்தில் மறுதலிக்கும் பிரபாகரன் சிங்களத் தரப்பு நியாயங்களையும் தமது தரப்பு பிழைகளையும் பட்டியலிடுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் அரசு வேலை கிடைக்க ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நாம் சிங்கள அரசில் வேலை கிடைக்க சிங்களத்தைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருந்திருக்க முடியும்?

தமிழகத்தில் 3% இருந்த பிராமணர்கள் 50-60 %க்கு மேல் அரசு வேலைகளில் இருந்தார்கள். திராவிட இயக்கம் போராடி அனைத்து சாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்தது. அதுபோல் இலங்கையில் 18% இருக்கும் தமிழர்கள் 40 சதவிகித அரசு வேலைகளில் இருந்தார்கள். அதைச் சரி செய்ய தமிழர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்; சிங்களர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாக இருந்தால் போதும் என்று சொன்னார்கள். இது ஒருவகையான இட ஒதுக்கீடுதானே. இதில் என்ன தவறு?

காடுகள் அழிக்கப்பட்டு அணைக்கட்டுத் திட்டங்கள் தொடங்கப்படும்போது பெரும்பான்மை மக்களுக்கு முன்னுரிமை தந்ததில் என்ன தவறு? என்று ஈழப் போராட்டத்தின் ஆணி வேரையே அசைக்கிறார். 

இந்தியத் தமிழர்கள் நம் பக்கம் இல்லை; கொழும்பு தமிழர்கள் நம் பக்கம் இல்லை; மலையகத் தமிழர்கள் நம் பக்கம் இல்லை. இஸ்லாமியத் தமிழர்கள் நம் பக்கம் இல்லை. எத்தனையோ ஈழத் தமிழர்கள் கூட புலம் பெயர்ந்து ஓடுவதிலேயே குறியாக இருந்தனர். இத்தனை தமிழர்களும் நம்மை எதிர்க்கிறார்கள் என்றால் நம் பக்கம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்படியே தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமகனாக நடத்தப்பட்டது தொடர்பான வருத்தங்கள் சொரணை மிகுந்த நமக்கு இருந்தால் அதைப் பேசித்தான் தீர்த்திருக்கவேண்டும். ஒரு வன்முறை கூடுதல் வன்முறையையே கொண்டுவரும். நாம் தவறு செய்துவிட்டோம்... வாருங்கள் போய்த் திருத்துவோம் என்கிறார்.

இதனிடையில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் தகவல் தெரிந்து சிங்கள ராணுவம், இந்திய ராணுவம், அமெரிக்க ராணுவம் அனைத்தும் அந்தத் தீவில் வந்து இறங்குகின்றன. பிரபாகரன் ஒவ்வொரு தரப்பு கமாண்டரிடமும் கருணையின் வார்த்தைகளைப் பேசுகிறார். அவர்களும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். பிறகு ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். நாங்கள் தேடி வந்த பிரபாகரன் நீங்கள் இல்லை என்று சொல்லியபடியே நான்கு கமாண்டர்களும் தங்கள் படகுகளில் ஏறப் போகிறார்கள். பிரபாகரன் ஒவ்வொருவருடைய கைகளையும் பற்றிக்கொண்டு தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படிக் கெஞ்சுகிறார். அவர்களோ அவரை உதறித் தள்ளியபடி தத்தமது படகுகளில் ஏறுகிறார்கள். பிரபாகரன் மண்டியிட்டு கரையில் அழுதபடியே இருக்கிறார்.

படகை நோக்கிப் போன கமாண்டர்கள் பிறகு ஏதோ யோசித்துக் கூடிக் கலந்து பேசுகிறார்கள். பிறகு நேராக பிரபாகரனை நெருங்கி தமது துப்பாக்கிகளை அவர் முன்னால் வைக்கிறார்கள். இந்த நான்கில் எந்தத் துப்பாக்கியை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அந்த கமாண்டருடன் படகில் ஏறிச் சென்று கொள்ளுங்கள். எங்களுக்கு பிரபாகரன் வேண்டும். துப்பாக்கியை இடுப்பில் சொருகிய பிரபாகரன் வேண்டும் என்று சொல்கிறார்கள். மண்டியிட்டு அழுது கொண்டிருந்த பிரபாகரனின் முன்னால் தமிழ், சிங்கள, இந்திய, அமெரிக்க துப்பாக்கிகள் மின்னிக்கொண்டிருக்கின்றன. பிரபாகரன் அவற்றையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார்.


மெதுவாக யோசித்து ஒரு பதில் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நான்கு கமாண்டர்களும் நிற்கிறர்கள். பிரபாகரன் அந்த நான்கு துப்பாக்கிகளையும் மெள்ளத் தடவுகிறார். கைக்கு அடக்கமான அவற்றின் வசீகரம், உலோக உடலின் கவர்ச்சி அவரை சஞ்சலப்பட வைக்கிறது. சிறிது நேரம் கண்களை மூடி மனத்திரையில் எதையோ ஓடவிடுபவர் சட்டென்று ஒரு முடிவெடுக்கிறார். நான்கு துப்பாக்கிகளையும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு எழுந்து நிற்கிறார். நான்கு கமாண்டர்களும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். 

இது கணக்குகளை நேர் செய்யும் நேரம்... பகை மறக்கும் காலம் என்று சொல்கிறார். 
நான்கு கமாண்டர்களும் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்பவர்கள் சட்டென்று பிரபாகரனை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார்கள். துப்பாக்கியை எடுப்பவனுக்கு மட்டுமல்ல துப்பாக்கியே வேண்டாம் என்று சொல்பவனுக்கும் துப்பாக்கியால்தான் மரணம் நேரவேண்டும் என்று சொல்லி சரமாரியாகச் சுடுகிறார்கள். பிரபாகரனின் உடல் சல்லடையாகத் துளைக்கப்பட்டு வெண்மணலில் ரத்தக் கோலம் வரைந்தபடி வீழ்கிறது.

No comments:

Post a Comment