Friday 7 April 2017

குட் பை மிஸ்டர் மணிரத்னம்...


காற்று வெளியிடை

ராவணன், கடல், ஓகே கண்மணி போன்ற காவியங்களைத் தர ஆரம்பித்த பிறகும் நம்பிக்கையுடன் வந்து குவிந்திருந்த இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கையைவிட (பாதிக்கு மேல் அது ரஹ்மான் கூட்டம் என்ற போதிலும்) முன்னாள் இயக்குநர் மணி ரத்னத்தின் தன்னம்பிக்கை நிச்சயம் பாராட்டப்படவேண்டியதுதான். உலக அழகி உலக கிழவியான பிறகும் சற்றும் மனம் தளராமல் ரேம்ப் வாக் செய்வதுபோல் பரத நாட்டியப் பேரொளிகள் 60 வயதிலும் மேடை குலுங்க நடனமாடுவதுபோல் கங்குலி கண் பார்வை போன பிறகும் மட்டையைத் தூக்கிக் கொண்டு களமிறங்கியதுபோல் வாராது வந்த மாமணியும் அடம்பிடிக்கிறார். இன்னும் கொஞ்சம் திறமை மிச்சமிருக்கும்போதே கெளரவமாக விடைபெறுவது பலருக்கும் தெரிந்திருப்பதில்லையே.

இன்றைய காதலர்கள் என்பவர்கள் பேசுவதற்கு எதுவும் இல்லாமலேயே மணிக்கணக்கில் அப்பறம் அப்பறமென்றபடியே பேசிக்கொண்டேயிருப்பார்கள்... காரணமில்லாமல் சண்டை போடுவார்கள்... காரணமில்லாமல் சேர்ந்துகொள்வார்கள்... ஈகோ மோதல் கனன்றுகொண்டிருக்கும்... இதுதான் இன்றைய காதல் என்று யாரோ சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் மணிரத்னம் மாமாவுக்கு. அவரும் அப்படியான ஓர் இலைஞ்ஜனாகத் தன்னைக் கருதிக்கொண்டு சுவாரசிய திரைக்கதைக்கு சிறிதும் மெனக்கெடாமல் (அல்லது மெனக்கெட்டு) இன்னொரு படமும் எடுத்துமுடித்திருக்கிறார். பைக்கை ரோட்டில் நிறுத்தி டிராஃபிக் ஜாம் செய்து, கல்லூரி மைக்கில் காதலைச் சொல்லி, மிஸ்டர் சந்திரமவுலியை காபி சாப்பிட அழைத்து சினிமாத்தனமான இளமைத் துடிப்புடன் இருந்த மவுனராக மணிரத்னம், கேஸ் ஸ்டவ்வில் சிகரெட் பற்ற வைத்து புது மனைவியைப் புகைக்க வைத்த ரோஜா மணிரத்னம், ஆர் யூ விர்ஜின் என்று மாப்பிள்ளையைக் கேட்ட உயிரே மணிரத்னம் எல்லாரும் தொடுவானத்து நட்சத்திரங்களாக நம்மைவிட்டு தூர தூர விலகிச் சென்று வெகுகாலமாகிவிட்டது. அக்னி நட்சத்திரம் போன்ற ஒளிப்பதிவு அமெச்சூர்தனங்களைத் தாண்டி அந்தக் கால மணிரத்னத்திடம் புத்துணர்ச்சியும் துடிப்பும் இருந்தது. நாயகன், தளபதியெல்லாம் தமிழின் ஆல் டைம் ஃபேவரைட்களெ. ஆனால், தேய்ந்தபின் வளர்வது நிலவுக்கு மட்டுமே சாத்திய போலும்.

முந்திய தீவிரப் படங்களில் ஊறூகாய் போல் இலையின் ஒரு ஓரமாக கடைசிவரை இருக்கும் சீரியஸ் விஷயம் கண்டதுமே தூக்கி எறியப்படும் கறிவேப்பிலையைப்போல் இந்தப் படத்தில் வெறும் கார்கில் 1999 என்ற அரை விநாடி எழுதிக் காட்டும் காட்சியாகப் போய்விட்டிருக்கிறது. ஒளிப்பதிவு, லொகேஷன், இசை என பிற கலைகள் அனைத்தும் பிரமிக்கவைக்கும் வகையில் இருந்தும் மூல ஆதாரமான கதை திரைக்கதை என்பது இவ்வளவு கேவலமாக மணிரத்னத்தின் இதற்கு முந்திய எந்தப் படத்திலும் இருந்திருக்கவில்லை. இவையெல்லாவற்றையும்விட படத்தின் மிகப் பெரிய பலவீனம் மீசை இல்லாத கார்த்தி. காதல் காட்சிகளில் அவருடைய முகம் படு அசிங்கமாக இருக்கிறது. படம் முழுவதுமே வரும் காதல் காட்சிகள் ஏற்படுத்தும் சோர்வை மீறி ஏதேனும் ஒரு காட்சியையாவது சுமாராகவாவது ரசித்துவிடுவோம் என்று கஷ்டப்பட்டு முடிவெடுத்தால் கார்த்தியின் முகம் அந்தச் சிறு சுடரையும் மண் அள்ளிப் போட்டு அணைத்துவிடுகிறது.

நாயகன் திரைப்படத்தில் பெற்றோரை இழந்து பம்பாய்க்கு ஓடிய சிறுவன் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு தாதா ஆகிறான். சத்ரியன் படத்தில் அதே சிறுவன் காவல் துறை அதிகாரியால் வளர்க்கப்பட்டு நல்ல போலீஸாகிறான். இப்படியான சுவாரசிய எதிர் நிலை கதையாக ரோஜாவில் இந்தியச் சிறையில் மாட்டிக்கொண்ட வாசிம் கானுக்கு பதிலாக பாகிஸ்தான் சிறையில் மாட்டிக்கொள்ளும் வருண் என்று கதையை ஆரம்பிக்கிறார். அந்த ஆரம்ப நிமிடங்கள் பழைய மணிரத்னம் திரும்பிவிட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால், சிறையில் வாடும் வான் படை அதிகாரியின் கடந்த காலக் காதல் என்று கிளை பிரியும் கதை தன் பிறகு கடந்த காலத்திலேயே மூழ்கித் தொலைந்துவிடுகிறது.

அந்தக் காதல்காட்சிகள்தான் கொடூரமென்றால் அவ்வப்போது வரும் நிகழ்காலச் சிறைக் காட்சிகள் கர்ண கொடூரமாக இருக்கின்றன. பாகிஸ்தான் சிறையில் குச்சியால் தோண்டி சுரங்கம் அமைக்கிறார்கள்... இரவில் தப்பிக்கிறார்கள்... மலைச் சரிவில் உருண்டு ஓடுகிறார்கள். வழியில் வரும் லாரியை மடக்கி ஏறுகிறார்கள். அதில் இருக்கும் டீசலை வைத்து பாட்டில் குண்டுகள் தயாரித்து துரத்திவரும் காவலர்களை விரட்டுகிறார்கள். செக்போஸ்டில் இருக்கும் பாகிஸ்தான் கொடியை லாரியைவிட்டு ஏற்றிச் சாய்க்கிறார்கள் (இந்தக் காட்சிக்குக் கிடைத்த கை தட்டல்கள் மெய் சிலிர்க்க வைத்தது... அதற்கான பாராட்டுகள் இயக்குநருக்கு அல்ல.. நம் தமிழ் இளைய தலைமுறைக்கு). ஆப்கானிஸ்தானுக்குச் சென்று நல்லபடியாக இந்தியா திரும்புகிறார்கள். பாகிஸ்தான் நிலப்பரப்பு மனதுக்குத் தரும் சந்தோஷம் நீங்கலாக இந்தக் காட்சிகள் எல்லாமே மிக மிக மோசமாக இருக்கின்றன.

ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் என்ற இரண்டு கட்டப் பணிகளில் பிற கலை, தொழில்நுட்ப மேதைகளின் துணையால் சிறந்துவிளங்கும் மணிரத்னம் ப்ரீ ப்ரொடக்ஷன் காலகட்ட கலைச் செயல்படுகளில் தன்னந்தனியாக இருப்பதால் மிக மிக மோசமாக தோற்றுவருகிறார். முந்தைய படங்களில் பிற கலைஞர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு கதை, திரைக்கதையில் சோபித்த மணிரத்னம் இதில் பூரணமாகத் தோற்றிருக்கிறார். அந்த அஸ்திவாரம் பலப்படாமல் மணிரத்னம் கட்டும் எந்தக் கோட்டையும் அவர் கண் முன்னே சரிந்து விழுவதைத் தவிர்க்கவே முடியாது. பயிற்சி காலத்திலேயே கற்றுக்கொள்ளாத பாடத்தை ஓய்வு பெறும்போதா கற்றுக்கொள்ளப்போகிறார்.

Better Luck in next birth Mani Sir.

No comments:

Post a Comment