Friday, 1 January 2016

ரஷோமானும் ராஜீவ் கொலையும்

ரஷோமான் - ராஜீவ் கொலை
ஒரு நிகழ்வின் மூன்று சாத்தியக்கூறுகள்... நிஜத்தில் என்ன நடந்தது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் உண்மை என்று நம்புபவையெல்லாம் மெய்யான உண்மைதானா... சொல்பவருடைய உண்மை மட்டுமேவா..?



இந்தக் கோணத்தில் ரஷோமான் திரைக்கதையை குரோசோவா அருமையாகப் பின்னியிருப்பார். உண்மையின் மெய்த்தன்மை குறித்த சிக்கல் அதன் உச்சத்தை எப்படி ரஷோமானில் எட்டியது? அந்தப் படத்தில் சொல்லப்படும் உண்மை நிகழ்வான கொலைக்கு மூன்று தரப்புகள் சொல்லப்படுவதோடு நிற்கவில்லை... தானே அந்தக் கொலைக்குக் (மரணத்துக்) காரணம் என்று மூன்று பேருமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது பழி போடுவதாக இருந்தால் அது வெறும் சுய நலம் சார்ந்த பொய்களாகிவிட்டிருக்கும். ஆனால், ரஷோமானில் கொள்ளைக்காரன் தான் தான் கொன்றதாகச் சொல்கிறான். கொல்லப்பட்டவனின் ஆவியோ தானே தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறது. கொல்லப்பட்டவனின் மனைவியோ யார் கொன்றது என்று தெரியவில்லை. மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன் என்று சொல்கிறாள். ஒருவகையில் அவளே கொன்றிருக்கக்கூடும்; உண்மையை ஒப்புக்கொள்ளப் பயந்து மயங்கிவிட்டதாகச் சொல்கிறாள் என்று யூகிக்க இடம் தரும்வகையில் அந்த உண்மையும் புதிராகவே முன்வைக்கப்படுகிறது. அதோடு மூன்று பேர் சொல்வதும் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு என்ற வகையில் அந்தக் குழப்பம் மேலும் சுவாரசியமும் பூடகமும் மிகுந்ததாகிறது. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போர் என்பது மறைந்து மூன்று உண்மைகளுக்கு இடையிலான போராட்டம் என்பதாக அது ரசவாதம் பெறுகிறது. இவையெல்லாம் குரோஷோவாவின் மேதமையைக் காட்டுகின்றன.



நாம் உண்மையென்று நம்புவதன் பின்னால் நமக்கான அரசியலே இருக்கிறது. உண்மையின் இந்த மாயத்தன்மை மற்றும் புதிர்தன்மையை வேறு நிகழ்வுகளுக்கு மாற்றினால் அதன் கனமும் தீவிரமும் கூடும். ரஷோமானின் ஆதார நிகழ்வு தனி நபர் நிகழ்வே இருக்கிறது. மக்களுக்கு அதிகம் தெரிந்திராத ஒரு நபர் கொல்லப்படுகிறார். அவ்வளவுதான். ஆனால், நிஜ வாழ்வில் பலரைப் பாதித்த ஒரு நிகழ்விலும் இப்படியான புதிர் இருக்கக்கூடும். அப்படியான ஒன்றில் பல உண்மைகளை முன்வைக்கும்போது ஒரு உண்மையை முழு உண்மையென நம்பிச் செயல்பட்டவர்கள் ஒரு கணம் திகைத்துப்போவார்கள். அதை அடிப்படையாக வைத்து வன்முறைகளையும் பிற செயல்களையும் செய்தவர்களுக்கு தாங்கள் நம்பிய உண்மை, உண்மையில் உண்மையில்லாமல் இருந்திருக்குமோ என்ற கேள்வி தரும் அதிர்ச்சியும் அந்தப் புரிதல் தரும் தெளிவும் பல புதிய கதவுகளைத் திறந்துவிடக்கூடும். நமது தரப்பு மட்டுமே முழு உண்மை என்ற மூர்க்கத்தனமான விசுவாசத்தை ஒருவேளை மட்டுப்படுத்தக்கூடும். பலரைப் பாதித்த வரலாற்று நிகழ்விலும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்புமே தமது தவறைத் தாமே ஒப்புக்கொள்வதாகக் காட்டினால் அனைத்துவகை அரசியல் தீவிரவாதங்களுக்கும் பெரும் சவாலாக அது அமையும்.



உதாரணமாக, ராஜிவ் காந்தி கொலை என்ற பெரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். விடுதலைப் புலிகள்தான் கொன்றதாக உலகம் நம்புகிறது. ஆனால், ராஜீவ் காந்தியைக் கொல்ல பல அரசியல் சக்திகள் முயற்சி செய்துவந்திருக்கின்றன. அவரைக் கொல்வதில் பலருக்கும் அவரவர் தரப்பு நியாயங்கள் இருந்திருக்கின்றன.
இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியதால் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அவர் மீது கோபம் இருந்திருக்கிறது. ஒரு பரேடில் சிங்கள ராணுவ வீரர் ராஜீவை துப்பாக்கியால் அடித்தே கொல்ல முற்பட்டார். விடுதலைப் புலிகளை உலக அரங்கில் கொடூரர்களாகச் சித்திரிக்க வேண்டிய தேவை சிங்களர்களுக்கு இருந்திருக்கிறது. குறிப்பாக, இந்தியா ஈழத்தமிழருக்கு சாதகமாக நடந்துகொள்வதை ஒரேயடியாகத் தடுத்தாகவேண்டுமென்றால் புலிகள் மீது இந்தியர்களுக்கு வெறுப்பை வரவைக்கவேண்டும். புலிகளின் இயக்கத்தில் இருந்த சில புல்லுருவிகளைக்கொண்டு ராஜீவைக் கொன்று பழியைப் புலிகள்மீது போடவேண்டும் என்று முடிவெடுத்து இதைச் செய்திருக்கலாம். இது முதல் சாத்தியக்கூறு.



அல்லது மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகள் இந்தியாவைத் தமது பிடிக்குள் கொண்டுவரத் திட்டமிட்ட பெருஞ்சதியின் ஓர் அங்கமாக ராஜீவ் கொல்லப்படிருக்கலாம். புத்தர் தனது மதத்தைப் பரப்ப ஒரு எளிய வழியைப் பின்பற்றினார். ஒரு தேசத்தை மதம் மாற்ற வேண்டுமா அதன் மன்னரை மதம் மாற்று. அவர் மற்றதைப் பார்த்துக்கொள்வார். பழங்குடிகளிடையே கிறிஸ்தவத்தைப் பரப்ப மதபோதகர்கள் இந்த வழியையே பின்பற்றுவார்கள். பழங்குடிகளின் குடும்பத்தினரில் யாராவது ஒருவரை அல்லது பழங்குடியின் தலைவரை ஒரு கிறிஸ்தவரை விட்டுக் காதலிக்க வைப்பார்கள். அல்லது பழங்குடித் தலைவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது தலைமாட்டில் உட்கார்ந்து ஜெபித்து மதம் மாற்றுவார்கள். அதன் பிறகு அவரே மெள்ள மெள்ள அந்தப் பழங்குடி குலத்தையே கிறிஸ்தவத்தின் பக்கம் கொண்டுவந்துவிடுவார்.

இந்தியாவின் ராஜ வம்சம் நேருவின் வம்சம். அதில் இந்திராவைத் திருமணத்தின் மூலம் மதம் மாற்ற முடியாது. ஏனென்றால் அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. (அதாவது நேருவின் வாரிசுகளே இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற உண்மை தெரிய வருவதற்கு முன்பாகவே அவருக்குத் திருமணம் நடந்துவிட்டது). அவருக்கு தலைமாட்டில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தாலும் அவர் மதம் மாறமாட்டார். ஆனால், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவர் அம்மாவின் வலதுகையாக இந்தியாவிலேயே இருக்கிறார். அவரை மதம் மாற்றுவதோ கிறிஸ்தவப் பெண்ணால் அவரை வலையில் வீழ்த்துவதோ சிரமம். இன்னொரு ராஜகுமாரன் லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் அவனை கிறிஸ்தவ பெண்ணால் வளைத்துப் போடு என்று திட்டமிட்டார்கள். 1960களில் இது நடந்தது. அப்போது இதை யாருமே யூகித்திருக்கவே முடியாது. அப்படி தொலைநோக்குடன் செயல்படுபவர்களே வெற்றிகளைக் குவிக்க முடியும். அப்படியாக ராஜீவின் மனைவியாக சோனியா நியமிக்கப்படுகிறார்.
சீக்கிய பிரச்னையில் இந்திரா அகற்றப்படுகிறர். சஞ்சய் காந்தி ஒரு ‘விபத்தில்’இறக்கிறார். ராஜீவ் காந்தி தமிழர் விஷயத்தில் சிக்கவைக்கப்படுகிறார். சரியான நேரம் வந்ததும் புலிகளில் சில வாடகைக் கொலையாளிகளைப் பிடித்து அந்த வேலையைக் கச்சிதமாக முடிக்கிறார்கள்.



புலிகள் ராஜிவைக் கொல்ல முன்வருவார்களா... அப்படிச் செய்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படுமே என்று பயந்திருக்கமாட்டார்களா..?
கவலையே வேண்டாம். ராஜீவ் கொல்லப்பட்டதும் நான்தான் ஆட்சிக்கு வருவேன். ஆட்சி வேண்டாம் என்று தியாகம் செய்வேன். ஆனால், கட்சி என் கட்டுக்குள்தான் இருக்கும். என் சொல் கேட்டு ஆடும் பொம்மையையே ஆட்சியில் அமர்த்துவேன். விசாரணையையும் திசை திருப்புவேன். ஈழத்தையும் கட்டாயம் வாங்கித்தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுத்து புலிகளை சம்மதிக்க வைக்கிறார்கள்.
இந்திய அமைதிப்படையின் பேரில் பல அவதூறுகளை உருவாக்கி ராஜீவின் கொலைக்கான நியாயத்தை உருவாக்கித் தருகிறார்கள். நேரம் வந்ததும் சந்தன மாலை போடப்படுகிறது. அப்படியாக ராஜீவின் கொலைக்கு சோனியாவும் அவரைப் பிளாண்ட் செய்த மேற்குலக கிறிஸ்தவ சக்திகளுமே காரணம் என்றொரு கோஸ்ட் ரைட்டர் வெர்ஷன்.

மூன்றாவதாக, சீக்கியர்களுக்கும் ராஜீவ் மீது பெரும் கோபம் இருந்தது. பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது, காலிஸ்தான் போராளிகளைக் கொன்றது என இந்திராவின் மீது இருந்த கோபத்தால் அவர் கொல்லப்பட்டார். ஆனால், அதைத் தொடர்ந்து சீக்கிய இனமே பெரும் வன்முறைக்கு ஆளானபோது, பெரு மரம் விழுந்தால் நிலம் கொஞ்சம் அதிரத்தான் செய்யும் என்று பல நூறு சீக்கியர்களின் மரணத்தை நியாயப்படுத்தினார் ராஜீவ் காந்தி. அதில் கோபம் கொண்ட சீக்கிய அமைப்பு இந்தக் கொலையைச் செய்திருக்கலாம். தாம் அதைச் செய்தது தெரியவந்தால் மீண்டும் தன் இனத்துக்குப் பேரழிவு வந்துவிடக்கூடும் என்று நினைத்து புலிகளை வைத்துக் காரியத்தைச் சாதித்திருக்கலாம். இது மூன்றாம் வெர்ஷன்.

ஆக, கொன்றது சிவராசனும் தனுவும் தான். அந்த சரித்திர நிகழ்வை மாற்ற முடியாது. ஆனால், அந்த புலிகள் யாருடைய கைப்பாவையாக அதைச் செய்தார்கள் என்பதில் பல சாத்தியக்கூறுகள் இருகின்றன. இதில் எதையுமே உண்மையில்லை என்று மறுத்துவிடமுடியாது. இப்போது இந்த உண்மைகளில் எது மெய்யான உண்மை. புலிகள் செய்தார்கள் என்று சொல்லி அவர்களை தண்டித்தது உண்மையிலேயே பெரும் பிழைதானா? அதைச் சாக்காக வைத்து ஈழத்தமிழர்களைத் துடைத்தழித்தது பெரும் கொடூரம்தானா? என்ற கேள்விகளை எழுப்பும்படியான திரைக்கதையை எழுதினால் ரஷோமான் திரைப்படத்தைவிடக் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அது அமையும்.
பிரபாகரன் ராஜீவைக் கொன்றாரா..? ராஜீவ் கொலையில் சிக்கவைக்கப்பட்டாரா..?
கொன்றது புலிகள்தான். ஆனால், சிங்கள அரசின் தூண்டுதலால் செய்தார்களா... மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகளின் சதியின் அங்கமாகக் கொன்றார்களா..? சீக்கியப் பழிவாங்கலாகச் செய்தார்களா..?

***
சமகால அரசியல் கதையை இந்த அளவுக்கு வெளிப்படையாக எடுப்பது சிரமம் என்றால், இதே கதையை அப்படியே சரித்திர காலத்துக்குக் கொண்டுசென்றுவிட்டால் போதும். அதிலும் சர்வ தேச சக்திகள் இந்திரா, சஞ்சய், ராஜீவ் என மூன்று படுகொலைகளின் மூலமாக சோனியாவின் கைகளில் காங்கிரஸை (இந்தியாவையும்) வரச் செய்ததை மட்டுமே தனிப் படமாகவே எடுக்கலாம்.

வேதபுரியின் மகாராணி இந்திராணி தேவிக்கு ராஜீவன், சஞ்சயன் என்று இரண்டு இளவரசர்கள். சகாயபுரத்தைச் சேர்ந்த சோனாவை ராஜீவன் காதலித்து மணமுடிக்கிறான். இந்திராணி தேவி எல்லையோரப் பழங்குடிகளின் கிளர்ச்சியை அடக்கப் படையை அனுப்புகிறார். அந்தப் படை வீரர்கள் பழங்குடிகளின் புனித விலங்கை வெட்டிக் கொன்று கறி சமைத்து கள் குடித்து மகிழ்கிறார்கள். இதனால் கோபப்படும் பழங்குடி வீரர்கள் இந்திராணியைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
இது தெரிந்ததும் மகாராணிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மந்திரிகள் முடிவெடுக்கிறார்கள். எந்தப் பழங்குடிகளுடன் பிரச்னை இருக்கிறதோ அந்தப் பழங்குடி வீரர் ஒருவரையே மெய்க்காப்பாளராக நியமிக்கலாமென்று புதிய மருமகள் சோனா சொல்கிறார். இந்திராணி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, பழங்குடிகளில் இருக்கும் கலகக்காரர்கள் மீதுதான் உங்களுக்குக் கோபம் இருக்கிறது; அந்த பழங்குடிகள் மீது அல்ல என்ற சமிக்ஞையைத் தர இந்த தந்திரம் அவசியம் என்கிறார். இந்திராணி தயங்குகிறார். அந்தப் பழங்குடி மெய் காப்பாளர் பணிக்கு வரும் நாட்களில் உங்கள் அறைக்குள் ஓய்வெடுக்கும் நேரத்திலும் இரும்புக் கவச உடையை அணிந்துகொள்ளுங்கள். அதுபோதும் என்று சோனா யோசனை சொல்கிறார். ஒருவழியாக இந்திராணி தேவி அதற்கு சம்மதிக்கிறார்.

நாட்கள் செல்கின்றன. ஒரு நாள் மகாராணி அதிகாலையில் குளித்துவிட்டு நந்தவனத்தில் உலாவருகிறார். அன்றைய தினம் பழங்குடி பாதுகாவலன் விடுமுறையில் இருப்பதாக சோனா சொல்லியிருந்ததால் கவச உடையை இந்திராணிதேவி அணிந்திருக்கவில்லை. பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகளையும் பார்த்து ரசித்தபடியே வருபவர் உப்பரிகையில் சோனா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறார். ஆனால், சோனாவின் முகமோ அமாவாசை இருள் போல் இருண்டு கிடக்கிறது. அவளுடைய கண்களோ வேட்டை வெறியில் இருட்டில் மின்னும் வன விலங்கின் கண்களைப் போல் தீயை உமிழ்ந்தபடி உறைந்து நிற்கின்றன. பின்னால் யாரோ வந்து நிற்பதுபோல் தெரிந்ததும் இந்திராணி திரும்பிப் பார்க்கிறார். கையில் ஈட்டியுடன் பழங்குடி மெய்க்காப்பாளன். சூரியனின் சிவந்த கிரணங்கள் அவனுடைய ஈட்டியில் பட்டு உலையில் இட்ட இரும்புபோல் மின்னுகிறது. மெய்க்காப்பாளன் சோனாவைத் திரும்பிப் பார்க்கிறான். கைவளைகள் குலுங்க அவள் ஆகட்டும் என்று உத்தரவு தருகிறாள். இந்திராணி அதிர்ந்து சுதாரிப்பதற்குள் கவசம் இல்லாத மார்வைத் துளைத்தபடிப் பாய்கிறது ஈட்டி. உப்பரிகையை வெறித்துப் பார்த்தபடியே உடல் சரிந்து விழுகிறாள் வேதபுரியின் மகாராணி இந்திராணி தேவி.

இதற்கு முன்பாகவே சஞ்சீவனும் மலைப்பாதையில் ரதத்தில் வரும்போது கடையாணி கழண்டு மலையில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டிருக்கிறான். இத்தனைக்கும் புறப்படுவதற்கு முன்பாக ரதத்தை கொல்லன் பட்டறைக்குக் கொண்டு சென்று நன்கு சோதித்துவிட்டுத்தான் புறப்பட்டிருந்தான். மலையில் வழியில் குதிரையின் காலில் பெரிய ஆணி ஒன்று குத்தியிருந்தது. அந்தப் பகுதி எங்குமே அப்படியான ஆணி கிடைக்க எந்த வாய்ப்புமே இல்லை. மேலும் அந்த ஆணியை குதிரையின் காலில் இருந்து எடுக்க அப்போது அருகில் இருந்த ஒரு பட்டறைக்கு மெய்க்காப்பாளர்களுடன் சஞ்சீவன் சென்றிருக்கிறான். தேரின் கடையாணி கழண்டு சஞ்சீவன் மலையில் இருந்து விழுந்து இறந்த செய்தி தெரிந்ததும் அந்தப் பட்டறையில் இருப்பவனைப் பிடித்துவர ஆள் அனுப்பினால் அங்கு அப்படி ஒரு பட்டறை இருந்த தடயமே இல்லை.

சஞ்சயனும் இறந்து இந்திராணியும் கொல்லப்பட்டிருக்கவே குரு குலத்தில் வான சாஸ்திரம் கற்றுக் கொண்டிருந்த ராஜீவன் அரியணை ஏறுகிறான். இந்த இருவரையும் கொன்றது யார் என்பது சில சதிகாரர்கள் காட்டுக்குள் ஒரு பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து பேசுவதை ஒட்டுக்கேட்கும் ஒற்றனுக்குத் தெரியவருகிறது. அதோடு ராஜீவனுடைய உயிருக்கும் ஆபத்து என்பதும் அவனுக்குத் தெரியவருகிறது. அதை ராஜீவனிடம் சொல்லி எச்சரிக்க விரைகிறான். அந்த ஒற்றனுக்கு இந்த உண்மைகள் தெரியும் என்பது சதிகாரர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. அவனைக் கொல்லத் துரத்துகிறார்கள். எப்படியோ காட்டில் இருந்து தப்பித்து கோட்டையை அடைகிறான். எவ்வளவு முயன்றும் ராஜீவனை நெருங்கமுடியவில்லை.

ஒரு கட்டத்தில் சோனாவிடம் சொல்லி ராஜீவனை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லலாம் என்று நினைக்கிறான். நள்ளிரவில் சோனாவைச் சந்தித்து இந்திராணி தேவியையும் சஞ்சீவனையும் கொன்றவர்கள் யார் என்று சொல்ல ஆரம்பிக்கிறான். சட்டென்று தீப்பந்தம் அணைகிறது. சோனா தொடர்ந்து பேசச் சொல்கிறாள். அனைத்தையும் விவரித்து, ராஜீவனுக்கும் ஆபத்து என்று சொல்லி முடிக்கிறான் ஒற்றன். தீப்பந்தம் எரியூட்டப்படுகிறது. சோனாவின் முகம் அதுவரை இல்லாத கடுமையுடன் தீப்பிழம்பாகத் தகிக்கிறது.

அந்தச் சதிகாரர்களை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்கிறாள்.

ஒற்றன் முடியும் என்கிறான்.

சோனா, இவர்களா என்று பார்த்துச் சொல் என்று கைகளைத் தட்டுகிறாள். பாழடைந்த மண்டபத்தில் சதியாலோசனை செய்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வந்து நிற்கிறார்கள். ஒற்றன் அதிர்ச்சியில் உறைகிறான். விஷயத்தை யூகித்து அவன் தப்பிக்கப் பார்க்கிறான். ஆனால், அதற்குள் சோனா தன் அருகில் இருக்கும் நபர்களின் கைகளில் இருக்கும் ஈட்டிகளை வாங்கி ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எறிந்து ஒற்றனைக் கொல்கிறாள்.
(பாகம் - ஒன்று முடிகிறது).

ராஜீவன் வேறொரு எல்லைப் பிரச்னையில் சிக்கவைக்கப்பட்டுக் கொல்லப்படுவது, சோனா சகாயபுரத்தைச் சேர்ந்த தன் மருமகனுடன் சேர்ந்து வேதபுரியைச் சின்னாபின்னமாக்க முயற்சி செய்வது, சோனாவின் உண்மை சொரூபத்தைத் தெரிந்துகொள்ளும் மகள் ப்ரியம்வதா சகாயபுரத்தினரின் சதிகளையெல்லாம் முறியடித்து வேதபுரியைப் பழைய பெருமைக்குக் கொண்டு செல்வது எல்லாம் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும். 

Friday, 24 April 2015

ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி - கதையை முன்வைத்து



தாலி கட்டிக்கொண்டு வாழ்வது... தாலி கட்டாமல் வாழ்வது என்ற இரண்டு சிந்தனைகளும் இரண்டு வேறுபட்ட காலகட்டத்தின் வெளிப்பாடுகள். எளிமையாக அதை பாரம்பரியம்(பழமை), நவீனத்துவம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இரண்டின் அடிப்படை வித்தியாசம் என்னவென்றால் பாரம்பரிய வாழ்க்கையில் தனி மனித உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடையாது. அங்கு திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் தனிப்பட்ட நிகழ்வு கிடையாது. திருமணம் செய்து கொள்பவர்களின் பெற்றோர் / உறவினர் ஆகியோரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே அது தீர்மானிக்கப்படும். திருமணம் முடிந்த பிறகுதான் வாழ்க்கைத்துணையின் முகத்தையே நிமிர்ந்து பார்த்த தலைமுறை அது (பெண்கள் மட்டுமல்ல ஆண்களில் பெரும்பாலானவர்களும் அப்படித்தான்).

 பெற்றோரும் கூட தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த முடிவை எடுப்பது கிடையாது. அவர்கள் சார்ந்த ஜாதி, மதம், வர்க்கம் போன்றவை என்ன மதிப்பீடுகளை முன்வைத்திருக்கின்றனவோ அதற்கு ஏற்பத்தான் தங்கள் முடிவுகளை எடுக்கவும் செய்வார்கள். அப்படியாக அந்தத் திருமணம் என்பது சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே பெரும்பாலும் தீர்மானமாகும். ஆனால், அந்த வாழ்க்கையை காலகாலமாக நம் சமூகம் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறது. அது எப்படி சாத்தியமானது என்றால், தேர்ந்தெடுக்கும் சுதந்தரம் மட்டும் இருந்திருக்கவில்லையே தவிர பெற்றோரும் அவர்களை வழிநடத்திய ஜாதிய - சமூக விதிமுறைகளும் அந்த ஜோடிகள் துன்பப்படவேண்டும் என்ற நோக்கில் எதையும் சொல்லிவிடவில்லை. லட்டுவா ஜாங்கிரியா என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்திருக்கவில்லையே தவிர பெற்றோர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது ஒருவகை இனிப்பாகவே இருந்திருக்கிறது. வேம்பை யாரும் திணிக்கவில்லை.

பெண் வீட்டார் மாப்பிள்ளையாக வரப்போகிறவரைப் பல கோணங்களில் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்த பிறகே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆணின் வேலை என்ன... அந்தக் குடும்பத்தின் பொருளாதார வசதிகள் என்னென்ன... சமூக அந்தஸ்து என்ன... ஆணின் குண நலன் என்ன... நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பிறகே திருமணம் செய்துகொடுக்கிறர்கள். அதுபோல் ஆண் வீட்டினரும் பெண்ணைப் பற்றி பல விஷயங்களை அலசிப் பார்த்த பிறகே தேர்ந்தெடுக்கிறார்கள். இள வயது ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக அனுபவம் குறைவாக இருக்கும்; படிப்பறிவும் குறைவாகவே இருக்கும். எனவே வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்திருக்காது. அந்த வயதில் எதிர்பாலினம் மீது ஒருவித மயக்கமும் கவர்ச்சியுமே மிகுதியாக இருக்கும். வாழ்க்கை என்பது அந்த மயக்கமும் கவர்ச்சியும் முடிந்த பிறகு தொடங்குவது. எனவே, வாழ்நாள் பூராவும் சந்தோஷமாக வாழ முடியுமா என்பதை யோசித்துப் பார்த்தே பெற்றோர் ஒரு முடிவெடுப்பார்கள்.

ஆணும் பெண்ணும் காதலிக்க விரும்பினால் சொந்த ஜாதியைச் சேர்ந்த, சம வர்க்க அந்தஸ்தில் இருக்கும் எத்தனையோ பேர் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் காதலித்தால் யார்தான் தடுக்கப் போகிறார்கள். காதல் என்பது எதையும் பார்க்காமல் வரக்கூடியது என்பது உண்மைதான். ஆனால், எல்லாவற்றையும் பார்த்தபிறகும் காதல் வரமுடியும். விதி விலக்குகளுக்காக விதியை உருவாக்க முடியாது. பெரும்பான்மையின் சிந்தனைக்கு ஏற்பத்தான் விதிகள் உருவாக்கப்படும். அந்தவகையில் கடந்த கால திருமணங்கள் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டதென்பது அந்தக் கால மதிப்பீடுகளின் அடிப்படையில் சரியே. தாலி அதன் குறியீடு.

இன்றைய நவீன தலைமுறை ஜாதி, வர்க்கம், உறவினர், பெற்றோர் என அனைத்தையும் அனைவரையும் தாண்டி தனி நபர் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடியது. யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன் என்பதுதான் அந்தத் தலைமுறையின் குரல். தாலி கட்டிக் கொள்ளாமல் வாழ்வேன் என்பதும் அதன் ஒருவகை வெளிப்பாடுதான். யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் என்பது முதல் கட்டம். நான் தேர்ந்தெடுக்கும் நபருடனும் எவ்வளவு காலம் சேர்து வாழவேண்டும் என்பதையும் நானே தீர்மானிப்பேன். திருமணம் செய்து கொண்டுவிட்டால் சாகும் வரை அவருடனேயேதான் வாழ்ந்தாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இதுதான் தனிநபர் வாதத்தின் அடுத்த உரிமை கோரல். லிவிங் டுகதெர் என்று அதற்கு ஒரு பெயர் கொடுத்து திருமணத்துக்கு மாற்றாக நவீன சமுதாயம் அதை முன்னெடுக்கிறது.

உடலுறவை மையமாகக் கொண்ட அல்லது அதை உள்ளடக்கிய  மனித ஒப்பந்தங்களில் திருமணம் ஓர் எல்லையில் இருக்கிறது. விபச்சாரம் மறு எல்லையில் இருக்கிறது. இந்த இரண்டுமே சமூகத்தில் வெகு காலமாகவே இருந்துவருகின்றன. திருமணம் புனிதமானது என்று சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது, விபச்சாரம் இழிவானது முத்திரை குத்தியிருக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவே வேறு பலவகையான ஒப்பந்தங்களும் இருக்கின்றன. ஆசை நாயகி, தாசி என முந்தைய சமூகத்தில் இருந்தன. இன்று இரண்டாம் தாரம், சின்னவீடு என அவை இருந்துவருகின்றன. நவீன சமூகம் புதிதாக லிவிங் டுகதெர் என்ற ஓர் ஒப்பந்தத்தைக் கண்டடைந்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்களின் சமூக அந்தஸ்து என்பது அந்த ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்கள் காமத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. திருமண உறவில் காமத்துக்கு இடம் உண்டு. விபச்சாரத்தில், காமத்துக்கு மட்டுமே இடம் உண்டு.

திருமண பந்தம் பல்வேறு பொறுப்புகளையும் தன்னில் கொண்டது. இருவரும் சேர்ந்து உருவாக்கப் போகும் குடும்பத்தின் அனைத்து பொருளாதாரத் தேவைகளையும் அந்த ஆணே கவனித்துக்கொள்ளவேண்டும். பெண் வீட்டு வேலைகள் முழுவதையும் கவனித்துக் கொள்ளவேண்டும். ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்வதானால் இருவருடைய உணவு, உடை, உறையுள் போன்றவற்றை இருவரும் சேர்ந்தே பார்த்துக் கொள்ளவேண்டும். இருவரும் பரஸ்பரம் மதித்து, அன்பும் அரவணைப்புடனும் வாழவேண்டும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தினருடைய சில நியாயமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாகவேண்டும். புதிய தலைமுறையை உருவாக்கி அவர்களுடைய அனைத்து தேவைகளையும் இருவரும் பூர்த்தி செய்ய வேண்டும். விலங்குகள் பறவைகளில் குஞ்சுகளுக்கு இரை தேடக் கற்றுக் கொடுத்ததும் தனியாக அனுப்பிவிடலாம். மனித இனத்தில் அப்படி முடியாது. அதுபோலவே வாழ்க்கைத் துணைவருக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்துவைத்த பெற்றோரை அவர்களுடைய முதுமையில் கவனித்துக்கொண்டாகவேண்டும். இப்படியான பொறுப்புகள் எல்லாம் திருமண பந்தத்தின் ஆதாரவிதிகள். ஆசை நாயகி, தாசி, லிவிங் டுகதெர், விபச்சாரம் ஆகியவற்றில் இந்த பொறுப்புகள் படிப்படியாகக் குறைந்துவிடும்.

மணிரத்னம் முன்வைத்திருக்கும் ஓகே கண்மணி ஒப்பந்தமானது லிவிங் டுகதர் அல்ல. விபச்சாரமும் அல்ல. விபச்சாரத்துக்கு மேலே லிவிங் டுகதெருக்குக் கீழே என்று அதை வகைப்படுத்தலாம். இளவயதினரின் கேளிக்கை மனதின் ஒருவகை வெளிப்பாடு. இன்று வெளி மாநிலங்களில் படிக்கப் போகும் மேல் தட்டு இளைஞர்கள் மத்தியில் இப்படியான ஒரு ஒப்பந்தமே நிலவுகிறது. யதார்த்தத்தில் அந்த இளைஞர்கள் தனித்தனியாகவே ஹாஸ்டலிலோ தனியாக வீடெடுத்தோ தங்கியிருப்பார்கள். டிஸ்கொதே, பார்ட்டி, டிரிங்ஸ், அவுட்டிங், டேட்டிங், இன்பச் சுற்றுலா என வார இறுதி நாட்களில் அல்லது செமஸ்டர் இறுதி நாட்களிலான அவர்களுடைய கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக உடலுறவும் நடக்கும். மணிரத்னம் அதை அப்படியே காட்டினால் சீப்பாக நினைத்துவிடுவார்களோ என்று அந்த ஜோடியை லிவிங் டுகதெர் போல் வாழ முடிவெடுப்பதாகக் காட்டியிருக்கிறார்.

உண்மையில் லிவிங் டுகதெர் என்பது முற்றிலும் மாறானது. அது மிகப் பெரிய கன்விக்ஷனோடு எடுக்கப்படும் முடிவு. அப்படி முடிவெடுப்பவர்கள் வயதான தம்பதியைப் பார்த்தெல்லாம் திருமண பந்தத்துக்குள் தஞ்சம் புகுந்துவிடமாட்டார்கள். மணிரத்னத்தின் நோக்கம் லிவிங் டுகதரில் இருந்து திருமணத்தை நோக்கி நகர்வது அல்ல என்பதால் நாம் அதைப் பற்றிப் பேச எதுவும் இல்லை. தீவிரமான விஷயங்களை மேலோட்டமாகவே எடுப்பது குறித்த விமர்சனம் வரும்போதெல்லாம் சமூகத்தில் எதிர்கொள்ள நேரும் பல நெருக்கடிகளைச் சொல்லிக் காட்டித் தன்னை நியாயப்படுத்திக் கொள்பவர், எளிய கருக்களைக் கையிலெடுக்கும்போதும் அதே நுனிப்புல் மேய்ச்சலையே மேற்கொள்வதை எப்படி நியாயப்படுத்துவார் என்று தெரியவில்லை. ஆனால், ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து அப்படியே படம் எடுத்துவருவதால் அவருடைய எல்லை அதுதான் என்று புரிந்துகொண்டு நாம் அதுபற்றி அதிகம் பேசாமல் இருப்பதுதான் நமக்கு நல்லது.
*********

உண்மையில் இந்தப் படத்தை எப்படி எடுத்திருக்கவேண்டும்..?

நவீன தலைமுறைக்குப் பாரம்பரியத் திருமண உறவின்மீது பல விமர்சனங்கள் இருக்கக்கூடும். அது வாழ்க்கையின் கொண்டாட்டங்களுக்கு எதிரானது; ஒருவனுக்கு ஒருத்தி என்று இன்பத்தைக் குறுக்கக்கூடியது; தாலி என்ற அடையாளச் சின்னத்தின் மூலம் அதை நிலை நிறுத்த விரும்புகிறது; அன்பும் மரியாதையும் இல்லாமல் போன பிறகும் சமூக நிர்பந்தங்களுக்காக உறவை நீடித்தாகவேண்டியிருக்கிறது; ஆணாதிக்கம் மிகுந்தது. அதில் போலித்தனமும் பொய்யும் கலந்திருக்கிறது. அது சுதந்தரத்தையும் சுய விருப்பு வெறுப்புகளையும் ஒடுக்கக்கூடியது. குழந்தை வளர்ப்பு என்ற இயல்பான உயிரியல் பொறுப்பை சுமை என்று தோன்றும் அளவுக்கு திணிக்கக்கூடியது என்றெல்லாம் நவீன தலைமுறை சொல்லக்கூடும். மேற்கத்திய உலகில் இந்தக் கட்டுப்பாடுகள் எதுவுமே கிடையாது. பரஸ்பரம் அன்பும் காதலும் கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வார்கள். காதலும் மரியாதையும் வற்றிவிட்டால் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வேறு துணையைத் தேடிச் செல்வார்கள். அதுவே கண்ணியமானது. நேர்மையானது என்று நம்மில் சிலரும் சொல்லக்கூடும்.

இப்போது ஒரு திரைப்படத்தில் தாலி கட்டிக் கொள்ளாமல் வாழ முடிவெடுக்கும் நவீன ஜோடி இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில்தானே அந்த முடிவை எடுக்கவேண்டும். இந்திய/இந்து தம்பதிகளின் வாழ்க்கையைப் பார்த்துத்தானே அந்த வாழ்க்கைமுறையை வெறுத்திருக்கக்கூடும். அதே இந்திய திருமண வாழ்க்கை பந்தத்தில் இருக்கும் வேறொரு தம்பதியைப் பார்த்து மனம் திருந்துகிறார்கள் என்றால் அப்படியான ஒருவரை வாழ்க்கையில் அதுவரை அவர்கள் சந்தித்திருக்கவேமாட்டார்களா என்ன..? அதிலும் இளமைத் துடிப்பு நிறைந்த காலகட்டத்தில் அவர்களுடைய சிந்தனைப்போக்கில் துணிச்சலும் விட்டேத்தித்தனமும்தான் மிகுந்திருக்கும். வயதான /உடல் நலம் குன்றிய தம்பதியைப் பார்த்தால், நமக்கு அப்படி ஒரு நிலைவந்தால் ஒரு நர்ஸை நியமித்துக்கொள்வேன். அல்லது அதி நவீன வசதிகள் கொண்ட முதியோர் காப்பகத்துக்குச் சென்று வாழ்வேன் என்றுதான் முடிவெடுக்கும்.

தாலி கட்டாமல் வாழ விரும்புவதன் அடிப்படையான காரணங்களில் ஒன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஏற்க மறுப்பதுதான். எனக்காக நீ உன் ஆழ்மன ஆசைகள் எதையும் விட்டுக் கொடுக்கவேண்டாம். நானும் அதுபோலவே எதையும் விட்டுக் கொடுக்கமாட்டேனென்பதுதான் முக்கிய காரணம். மணிரத்னம் காட்டும் நவீன ஜோடி பாலியல் சுதந்தரத்தை விரும்புவதாகத் தெரியவில்லை. தாலி என்ற அடையாளச் சின்னத்தை (மட்டும்) அணியாமல் அதே நேரம் அது முன்வைக்கும் அனைத்து ஒழுக்க விதிகளையும் ஏற்று வாழ்பவர்களாகவே தெரிகிறார்கள்.

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஒவ்வாமையும் இந்த ஜோடிகளுக்கு அவ்வளவாக இருப்பதாகத் தெரியவில்லை. தாலி கட்டாமல் வாழ முடிவெடுத்ததில் எந்தப் பெரிய வலுவான காரணமும் கிடையாது. எனவே, அதை மாற்றிக்கொண்டு தாலி கட்டிக் கொள்ள முடிவெடுத்ததற்கும் பெரிய காரணம் தேவைப்படவில்லை. மலையடிவாரத்தில் குடிசை கட்டிக் கொண்டு வாழ்பவர்களைப் பார்த்து பரிகசிக்கும் ஒருவர் அந்த மலையில் துணிந்து ஏறி, அதன் சிகரத்தில் கொடியை ப் பறக்கவிட்டுக் காட்டினால்தான் அவருடைய பரிகசிப்புக்கு அர்த்தம் இருக்கும். அதைவிட்டுவிட்டு அவரும் நாலடி தள்ளி அடிவாரத்திலேயே இன்னொரு குடிசையைக் கட்டிக் கொண்டு குடியேறினால் அதற்கு நீ முந்தைய வரிசையிலேயே இருந்து தொலைத்திருக்கலாமே என்றுதான் கேள்வி எழும்.

உண்மையில் லிவிங் டுகதரைத் தேர்ந்தெடுக்கும் ஜோடிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்னவாக இருக்கும். அந்த ஜோடியில் நிச்சயம் பெண் தான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். தேவடியாள் என்றுதான் ஒட்டு மொத்த சமூகமும் அந்தப் பெண்ணை முத்திரை குத்தும்.துணையாக வரும் ஆணின் ஒட்டாமல் நிற்கும் நிலை மெள்ள அவளுக்குள் அடி ஆழத்தில் ஒருவித ஏக்கத்தைக் கொண்டுவரும். காய்ச்சலாகப் படுத்திருக்கும் நிலையில் அவன் லிவிங் டுகதர் நண்பனாக அல்லாமல் கணவனாக இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் என்று மனம் ஏங்கும். ஆணுக்குமே இந்த உணர்வு சற்று தாமதமாக ஏற்படும். ஆனால், நாம் நவீன மனிதர்கள் என்ற பாவனையை வலிந்து போர்த்திக்கொண்டு வாழ முற்படுவார்கள். இந்த ஏக்கமும் எதிர்பார்ப்பும் அணையில் சேகரமாகும் நீர் போல் மெள்ள மெள்ள சேகரமாகும். போலி கவுரவம், நவீன மோகம் போன்ற ஷட்டர்கள் எந்த அளவுக்கு உயரமாகவும் வலுவாகவும் உருவாகிவருகின்றனவோ அதே வேகத்தில் அதை உடைக்க விரும்பும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் உயர்ந்து வரும். ஒரு கட்டத்தில் அணை உடைந்து நொறுங்கும். இதுதான் லிவிங் டுகதரை மையமாக வைத்து உருவாகும் (உருவாகவேண்டிய) படத்தின் திரைக்கதைப் பாதையாக இருக்கும்.

பாலியல் சுதந்தரத்தை முன்னெடுக்கும் நாயகி அலுவலக நண்பன் ஒருவனுடன் கோவா செல்வாள். அவனோ அவளுடைய உடலை மட்டுமே நேசித்திருக்கிறான். அவளைப் பற்றிய இழிவான பார்வையை மறைத்தபடித்தான் நாடகமாடியிருக்கிறானென்பது தெரியவரலாம். இது அவளுக்கு எரிச்சலையும் வேதனையையும் தரும். சுதந்தரமாக வாழ பெண்ணுக்கு இந்த சமூகத்தில் அது எவ்வளவு எலைட் சூழலாக இருந்தாலும் இடமில்லை என்பதை அவள் உணர நேரலாம். திருமண பந்தத்துக்குள் நுழையவும் முடியாது. வெளியிலும் சந்தோஷமாக வாழ முடியாது என இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் தவிக்க நேரலாம்.

குழந்தை மீதான ஏக்கம் இயல்பாக அவளுக்குள் எழும். விழாக்கள், விருந்துகளில் சந்திக்கும் குழந்தைகளைவிட்டுப் பிரிய மனமில்லாமல் கால்கள் பின்னத் தொடங்கும். தனது துணைவருடன் வேறு பெண்கள் பழகுவது அடி ஆழத்தில் ஒருவித பொறாமையை உருவாக்கும். ஆணுக்கும் இதே அனுபவங்கள் நேரிடலாம்.

என்னதான் தாலி கட்டாமல் வாழ்ந்தாலும் ஒரு பெண் ஆணுடன் தானே வழப் போகிறாள். ஆணுமே ஒரு பெண்னுடன் தானே வாழப் போகிறான். இரு எதிர் துருவங்கள் ஒரே கூரையின் கீழ் சேர்ந்து வாழும்போது இயல்பான உரசல்கள் ஏற்படத்தானே செய்யும். அதுதான் ஒரு இயக்குநரின் சவால். எந்த சினிமாவுக்குப் போவது என்பதில் ஆரம்பித்து இரு நபர்களின் ஈகோவும் நலன்களும் அருவாளும் உரைகல்லுமாக தீப்பொறி பறக்க உராய்ந்துகொண்டேதான் இருக்கும்.

நமது பாரம்பரிய சமூகத்தில் 13 வயதில் திருமணம் செய்துகொண்டு 95 வயதில் தீர்க்க சுமங்கலியாக உயிர் துறந்த பாட்டி அந்த வாழ்க்கையை மன நிறைவோடு வாழ்ந்த தகவலைக் கேட்க நேரிடலாம். அல்லது அந்தப் பாட்டியுடன் பேச நேரிடலாம். மேற்கத்திய உலகில் சுதந்தரம், சுய மரியாதை, பெண்ணுரிமை என வாழ்ந்த பெண் ஒருத்தி கடைசியில் தன் வாழ்க்கையில் உணரும் வெறுமையை இவளுடன் பகிர்ந்து கொள்ளநேரிடலாம்.

 அதுமட்டுமல்லாமல், நட்பு, உறவினர் உறவு, எஜமான் - தொழிலாளி, குரு - சிஷ்யன், தலைவன் - தொண்டன், கொள்கை - கொள்கையைப் பின்பற்றுபவர் என எல்லா இடங்களிலும் பல சமரசங்களும் அதிருப்திகளும் பொய்யும், போலித்தனமும் கலந்தேதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் மீறித்தான் அந்த உறவுகளும் நீடிக்கின்றன. எனவே, திருமண பந்தத்தில் மட்டும் அப்படியான பலவீனம் இருப்பதாக நினைத்து அதை நிராகரிப்பதில் எந்த நேர்மையும் புத்திசாலித்தனமும் இல்லை என்று புரிந்துகொள்ள நேரிடலாம். இந்த விஷயங்களுக்கான சுவாரசியமான சம்பவங்களைக் கோர்த்து அதை காட்சி மொழியுடன் சித்திரிப்பது மணிரத்னத்துக்கு கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். எனவே அதை அவரிடம் அதை எதிர்பார்ப்பது தவறு என்று வேண்டுமானால் சொல்லலாமே அந்த எதிர்பார்ப்பே தவறென்று சொல்லிவிடமுடியாது.
********
ஓ காதல் கண்மணி - படத்தை முன்வைத்து

படத்தின் அடிப்படைக் கருவை மேலோட்டமாகக் கையாள்வது அவருடைய எல்லா படங்களிலும் காணப்படும் பிரச்னையும்தான். ஆனால், முந்தைய படங்களில் படமாக்கியிருக்கும் விதம் கதையைவிட மெச்சூர்டாக இருக்கும். இந்தப் படத்தில் கதைக்கரு போலவே மேக்கிங்கும் சைல்டிஷாகவே இருக்கிறது. ஆரம்பித்த பத்து நிமிடத்துக்குள் பார்வையாளரின் கவனத்தை ஈர்த்துவிடவேண்டும் என்ற பொன் விதியை இவ்வளவு பலவீனமாக வேறு எந்தப் படத்திலும் அவர் சித்திரித்ததில்லை.

ரயில் நிலையத்தில் ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகப் படம் தொடங்குகிறது. வெறும் பரபரப்புக்காக மட்டுமே யோசிக்கப்பட்ட காட்சி இது. படத்தில் அந்த ”தற்கொலை முயற்சி’க்குச் சொல்லப்பட்ட காரணம் படு மோசமாக இருக்கிறது. பெற்றோர் டைவர்ஸ் செய்து கொண்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்த நாயகி யாரோ ஒருவன் அவள் பின்னால் சுற்றியதும் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிடுகிறாளாம் (கடவுளே!). அவன் நாயகியின் பணத்தைப் பார்த்துத்தான் திருமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம் (அய்யோ..!). அது போதாதென்று ரயிலில் விழுந்து இறக்கப் போவதுபோல் அவனை பயமுறுத்தவும் செய்தாளாம் (அய்யய்யோ)... ஏன் மணி என்ன ஆயிற்று உங்களுக்கு... இதயத்தைத் திருடாதே கிரிஜா, மவுனராகம் கார்த்திக், ரோஜா அர்விந்த்சாமி போன்றோரின் குறும்புத்தனத்தை எவ்வளவு அழகான காட்சிகள் மூலம் சித்திரித்த நீங்கள் இப்படியாகிவிட்டீர்களே.

இதுதான் இப்படியென்றால், காதல் ஜோடிகளின் ரொமான்ஸ் காட்சிகளில் எந்தப் புதுமையோ கற்பனையோ எதுவுமே இல்லை. திருமண வீடியோ கிராஃபர் அந்த ஜோடிகளை வயல்வெளியில் கடற்கரையில் நிற்க வைத்து பல கோணங்களில் சிரிக்கவைத்தும் கத்தவைத்தும் ஓடவைத்தும் குதிக்கவைத்தும் எடுக்கும் படங்களைப்போல் கற்பனை வறட்சியுடன் விரிகின்றன. குதித்துத் குதித்து ஓடினால் இளமை ததும்பும் நாயகனாகிவிடலாம் என்று பிளான் பண்ணி எம்.ஜி.ஆர். நடித்ததுபோல் உங்கள் நாயக நாயகிகளை குதித்துக் குதித்து ஓடவிட்டு ஒப்பேற்றியிருக்கிறீர்கள்.  நீங்கள் சித்திரிக்கும் ”இளமைத் துடிப்பான’ காட்சிகளை பிரமாதமாக இருப்பதாகச் சொல்லாவிட்டால் யூத் இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து பாராட்டுபவர்களின் பொய்யுரைகளைத் தாண்டி தனிமையில் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் படங்களிலேயே நீங்கள் வேறு உயரங்களைத் தொட்டிருக்கிறீர்கள்.

படத்தின் மிகப் பெரிய பலவீனம் கணபதி அங்கிள் - பவானி ஆண்ட்டி (பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன்) தம்பதிதான். கணபதி அங்கிள் தன் மனைவி (அல்சைமர் நோயால் தாக்கப்பட்டவர்) மீது பேரன்புடன் இருக்கிறார் என்பதை, அதுவும் திருமணமே வேண்டாம் என்று நினைக்கும் ஜோடியின் மனத்தையே கரைக்கும் அளவிலான அன்புடன் இருக்கிறார் என்பதைச் சித்திரிக்கும் ஒற்றைக் காட்சிகூட படத்தில் இல்லை. கண்பதி அங்கிள் பல கோணங்களில் சமையல் செய்கிறார். மனைவியை வீல் சேரில் இருந்து படுக்கையில் படுக்கவைக்கிறார். அவ்வளவுதான்.

அல்சைமர் நோயாளியைத் தனியாக எங்கும் அனுப்பக்கூடாது. இதுதான் மருத்துவர் சொல்லும் முதல் ஆலோசனை. அது படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது. அப்படிச் செல்வதானால், வீட்டை நன்கு பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். ஃபிளாட்டின் காவலாளியிடம் அல்லது அக்கம் பக்கத்து வீட்டாரிடம் தெருவில் இருப்பவர்களிடம் எல்லாம் வெளியில் செல்லாமல் கவனித்துக் கொள்ளூம்படிச் சொல்லவேண்டும் என்பதையும் மருத்துவர் சொல்லியிருப்பார். ஆனால், படத்தில் பேரன்பு கொண்ட கணவர் மனைவி திடீர் திடீர் என்று காணாமல் போகும்படி வீட்டைத் திறந்தே போட்டுச் செல்கிறார்.

இதாவது பரவாயில்லை. அப்படி அந்த வயதான மனைவி வெளியே சென்ற நேரங்களில் எல்லாம் தற்செயலாக இளம் ஜோடியே கண்டுபிடித்துவிடுகின்றன. கணபதி அங்கிள் காணாமல் போன தன் மனைவியைத் தேடி என்ன செய்தார்/ எப்படியெல்லாம் துடித்தார் என்பதெல்லாம் படத்தில் காட்டப்படுவதே இல்லை. இதைவிடக் கொடுமை க்ளைமாக்ஸில் மற்படியும் காணாமல் போன அல்சைமர் நோயாளியைத் தேடி காதலர்கள் வண்டியில் செல்கிறார்கள். போகும் வழி முழுவதும் அவர்களுக்கு இடையிலான எரிச்சலுட்டும் ஈகோ சண்டை மட்டுமே நடக்கிறதே தவிர காணாமல் போனவரைத் தேடும் முயற்சியோ கரிசனமோ எதுவுமே இல்லை. இப்படி நான் காணாமல் போனா நீ தேடுவியா என்று கடைசியாகக் கேட்கிறாள். தேடுவேன் என்கிறான். உடனே மனம் திருந்தி திருமணம் செய்துகொண்டுவிடுகிறார்கள். வயதான தம்பதியின் அன்பு இளைய ஜோடியை மாற்றியது என்று சொல்லவேண்டுமானால், பிரகாஷ் ராஜின் தவிப்பைத்தானே காட்டியிருக்கவேண்டும். குறைந்தபட்சம் அந்த வண்டியில் அவரும் கூடவே வந்து தேடுவதாகத்தானே காட்டவேண்டும். அதுபோன்ற காட்சிகள்தானே திருமண பந்தம் இருந்தால்தான் இப்படியான நேசம் சாத்தியம் என்று இளம் ஜோடிகளுக்குப் புரியவைத்திருக்கும். அப்படியாக காதல் ஜோடிகளின் போதைக்கு ஊறுகாயாக அல்ல ஊறுகாய் வைக்கப்பட்டிருக்கும் இலை அளவுக்குக் கூட பிரகாஷ்ராஜ் தன் மனைவி மீது வைத்திருக்கும் அன்பு படத்தில் காட்டப்பட்டிருக்கவில்லை. அப்படியானால் அந்த தம்பதியை படத்தில் எதற்காகக் கொண்டுவந்தீர்கள்?

மிகவும் நேர்மையான பாரம்பரியப் பழமை சிந்தனை கொண்டவரான கணபதி அங்கிள் தன் வீட்டில் ஆறு மாத காலத்துக்கு மட்டுமே கணவன் மனைவியாக வாழப் போவதாகச் சொல்லும் ஜோடியை சேர்ந்து வசிக்கவிடுவாரா..? உடனே பெற்றோரைக் கூப்பிட்டுச் சொல்லிவிடமாட்டாரா..? அப்படியே அதைக் கண்டுகொள்ளாமல் விடுபவராக இருந்தாலும் என் வீட்டுக்குள் வைத்து எந்தக் கூத்தும் அடிக்காதே என்றுதானே சொல்வார்? இனிமையாகப் பாடிக் காட்டினால் ஒப்புக்கொண்டுவிடுவாரா..? நாயகியைக் குறைந்தபட்சம் இரவுகளில் என் வீட்டில் வந்து தங்கிக் கொள் என்றாவது சொல்லமாட்டாரா? இத்தனைக்கும் நாயகனுடைய குடும்ப நண்பர் வேறு.

செல்வந்தரான நாயகியின் அம்மா தன் வருங்கால மருமகனைப் பற்றி விசாரிப்பதென்றால் கமிஷனர் நண்பர் மூலம் சிறையில் அடைத்துவைத்துதான் விசாரிப்பாரா..? என்ன பேத்தல் இது? பெற்றோரை மீறித் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள் என்பதால் நாயகியின் அம்மாவை அவ்வளவு வில்லனாகக் காட்டித்தான் ஆகவேண்டுமா?

அப்பறம் ஆணும் பெண்ணும் லிவிங் டுகதராகவே இருந்து அன்புடன் இருக்க முடியாதா? திருமணம் செய்துகொண்டுதான் ஆகவேண்டுமா? அப்போதுதான் அன்பு செலுத்த முடியுமா..? என்ன பிற்போக்கான சிந்தனை.

லிவிங் டுகதராகக் கூட வாழவேண்டாம்... சும்மா ஜல்சா குல்சாவாகவே டைம் பாஸுக்கு வாழ்ந்து கொள்ளலாம் என்று இளைய தலைமுறைக்கு நேரடியாக ஒரு ஆலோசனையை படம் முழுவதும் கொடுத்தாகிவிட்டது. கலாசாரக் காவலர்களின் எதிர்ப்பில் இருந்து தப்பிக்க நைஸாக திருமண பந்தத்துக்குள் நுழைவதாகவும் காட்டியாகிவிட்டது. இந்த கேவலமான கழைக்கூத்தாடி ஸ்டண்டில் தொலைந்துபோனது ஒரு நல்ல கதை மட்டுமல்ல... ஒரு நல்ல இயக்குநரும்தான்.

கஷ்டப்போட்டு க்ரியேட்டிவாக மியூஸிக் போட்டும் படத்தில் சரக்கு இல்லையென்றால் எந்தப் பலனும் இல்லை என்பதை உங்கள் முந்தைய படங்களில் இருந்து கற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் அவரை நீங்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே நீங்கள் கூப்பிடும் போதெல்லாம் இசை அமைத்துக் கொடுத்துவருகிறார் (அப்படியும் இந்தப் படத்துக்கு படத்தின் தரத்துக்கு ஏற்பவே இசையமைத்து ஒப்பேற்றியிருக்கிறார்). பாவம் அவரை அப்படியாகத் தொடர்ந்து எமோஷனல் பிளாக் மெயில் செய்யாதீர்கள்.